Saturday, January 31, 2009

வீரமகனுக்கு வீரவணக்கம்

வீரமகனுக்கு வீரவணக்கம்

ஈழமணி நிலத்துயரை நெஞ்சில் ஈர்த்து
எரிந்துவிட்ட முத்துகுமார் என்றும் வாழ்வான்
ஆழமொடு அஞ்சலியை அளித்தோம் என்றே
அரசியலார் நடேசன் அறிக்கை தந்தார்
சூழுலகம் வீரமகன் தியாகத் தீயில்
சேர்ந்தெரிந்தார் வையமெலாம் சீறக் கண்டோம்
மேழியெனத் தமிழ்நிலத்தை உழுதா னுக்கே
வீரவணக் கம்மிட்டு விடையே வைத்தோம்!

அம்பதுவாம் ஆயிரங்கள் அதற்கும் மேலாய்
அணிதிரண்டோர் முத்துகுமார் அழகுப் பிம்பம்
கும்பத்தில் ஏற்றிவைத்துக் குதித்தார் வெள்ளைக்
குலவுபனி மீதிலவன் கொள்கை யிட்டார்
செம்பவள வன்னிநிலம் சிதறும் மக்கள்
சிங்களத்தின் கொடியகரம் துயரம் சொல்லி
அம்புவென ரொறன்ரோவில் அகலப் பாய்ந்த
அன்னைமக்கள் வீரமகன் அகலாய் நின்றார்!

ஊழிவரைக் காலவரை எழுதிப் போந்த
உணர்வலைகள் மாயாது ஈழம் பேசும்
தாழியிலே வெண்ணைவந்து திரளும் போது
தறிகெட்ட இந்தியத்தால் தறிக்கப் பட்ட
ஏழைகளின் இருப்புமண்ணை இதயம் வைத்து
எரிந்தவனே முத்துகுமார் உனக்கு எங்கள்
ஈழமக்கள் குருதியிலே எழுதி வைத்தார்
இதயவீர வணக்கமிட்டார் சென்று வாராய்!

-புதியபாரதி






முத்துக்குமாரிவன் மொழிந்தான்!


ஈழமே பார்த்து எரிகிறேன் ஆங்கே
என்னடா என்னடா துயரம்?
வாழவே இங்கு மனமெதும் இல்லை
வையகம் காட்டுமென் உயிரை
ஏழுகோ டியாய் இருந்துமே அந்த
எங்குலக் குடிகளுக் கழிவோ?
சூழுமென் உடலின் தீயொடு தமிழா
தெரிந்திடு மானிடத் தர்மம்!

இந்தியக் குருடு இருவிழி திறக்கார்
இந்நிலை வந்ததே இன்னும்
பந்தியில் சிங்கப் படையுடன் நின்றே
பண்தமிழ் உயிர்களைக் கொன்றார்
வெந்தது மண்ணே வீசிடும் சதைகள்
விசிறிக் கிடப்பதைப் பாரீர்
குந்தியே இருக்கக் கொள்ளுமா ஆங்கே
குலக்கொடி கதறுதே காணீர்!

இரசீவின் கொலையில் இராட்சதச் சிக்கல்
இருப்பது செயன்குழுத் தீர்ப்பு
உரசியே காணா உண்மைகள் புலியின்
இடாப்பிலே இடுதலோர் இழிவு
அரசியல் ஆப்பு அடுக்கிய பணத்தின்
அட்டிக னானது அறிவீர்
குரலிதைக் கொள்வீர் கொடியவர் நாளை
குலத்தமி ழகத்தையும் கொல்வார்!

ஆட்சியும் காசும் ஆக்கிடும் கட்சி
அவலமே தீர்த்திடார் அறிவீர்;
பாட்டமாய் வருவார் பகிடியாய் முடிவார்
பதைத்திடும் தமிழனுக் குதவார்
கேட்டிடு என்தமிழ்க் கூடெனும் தலைவீர்
கொள்ளொரு கொள்கையின் கோடாய்
நாட்டினில் வருவீர் நலிந்தவர்க் காகி
நல்லதோர் அரசியல் நயப்பீர்!

இன்றுநான் எரிவேன் என்னுடற் பிழம்பு
இனத்தமிழ் விழிகளைத் திறக்கும்
ஒன்றுகேள் தமிழீர் உம்மைநீர் ஆள்வீர்
இல்லையேல் தில்லியே அழிக்கும்
என்னுடல் மேவி எழுந்திடும் நெருப்பில்
ஏழுல கெல்லமும் விரியும்
வென்றுவா பிரபா வேங்கையின் மைந்தா
முத்துக்கு மாரிவன் மொழிந்தான்!

புதியபாரதி


(முன்னதின் திருத்தம்)

No comments:

Post a Comment