Saturday, January 24, 2009

வாரிவாரி வழங்குவாய் வையத்தமிழா..!

வரலாறு அழைக்குதடா வாடா தம்பி
வைகைநிலம் கதறுதடா வதையில் வெம்பி
குரலோடு நிறுத்தாதே கொடுப்பாய் காசு
குருதிவிழச் சாகுவதோ குவையாய் வீசு
அரவாணிப் பக்சாக்கள் அடிக்கும் குண்டில்
அரும்புகளும் துடிக்குதடா அழிவில் நின்று
நரம்புகளே வெடிக்குதடா நல்ல தம்பி
நமதீழம் இருக்குதடா உன்னை நம்பி!

தமிழகத்து மாணவர்கள் திரண்டு வந்தார்
தாயகத்துத் தொப்புளெனத் தரணி கண்டார்
தமிழீழத் துயரெண்ணாத் தலைமை ஆட்சி
தந்ததெலாம் கொலைக்காடு தானே என்றார்
சுமைவெல்ல உண்ணாத நோன்பு காட்டி
தேசமெலாம் இந்தியத்தைத் தெளிய வைத்தார்
எமையீன்ற தாயகத்தை இதயம் வைத்து
எழுந்திடடா என்தமிழா இதுவுன் சொத்து!

வாரிவாரி வழங்கிடுவீர் வற்றா ஊற்றாய்
வதைநிலத்தைக் காத்திடவே வையம் வந்தீர்
வேரிருந்து அறுந்துவிழப் போமோ எங்கள்
விடிநிலத்தில் தாய்தந்தை விழவோ சொல்வீர்
தேரிருந்த மணிநிலத்தில் தீயர் வந்தார்
தினம்நூறாயக் கொல்லுகிறார் தேசம் கோடிப்
பேரிருக்கும் தாயகத்தீர் பெருகும் வெள்ளிப்
பெருங்கரத்தில் வென்றிடுவீர் பெற்ற மண்ணே!
-புதியபாரதி

-

No comments:

Post a Comment