Friday, July 31, 2009

உதித்தவேர் சாகாது..!




இது இருபத்தியோராம் நூற்றாண்டு.

இராட்சதர்கள் இல்லாத இந்த நூற்றாண்டில்
இராசபக்ச வந்து ஈழத்தில் விழுந்தான்..!

கூனி இல்லாக் குறையைச்
சோனியா நிரப்பினாள்..

துச்சாதனர்கள் கூட்டங்கள்
சிதம்பரம், சோ, இந்து ராம், என்றவாறு..
குதங்களாய் விரிந்தன..

சகுனிக்காக வந்து முழுநரியாகினான் மூத்த
கருணாநிதி..

எட்டப்பன், காக்கை இல்லாக் குறையை
டக்ளஸ், கருணாவால் நிரம்பியது
களச்சரிதம்..!

மூட்டைப் பூச்சி என்று
வீட்டைக் கொழுத்திய இந்த
வீரவாகுகள் எழுதிய சரித்திரம் இந்த
நூற்றாண்டின் இரத்தப்பழி..

புதிய இட்லருக்குத் தீனிபோட்டன இந்த
அநியாயங்கள்..

பச்சைப்பசேல் நிலங்களை
இச்சைப்படியே எரித்தார்கள்..

ஈழத்தை முற்று முழுதாக எரித்தாவது
ஒரு தமிழினத்தின் எழுச்சியை
முடிக்கத் துடித்தவர்கள் இவர்கள்..

முல்லைப் போரில் பல்லாயிரம் மக்களை
ஒருசேரக் கொன்று குவிக்க, இந்திய
புலனாய்வுத்துறை அதிகாரிகள்
ஐம்பதுபேர் வவுனியாவில்
அடுக்காக நின்றகதை இப்பொழுது
ஆலாபரணம் எடுக்கிறது..!

சீனா, பாகிஸ்தான், உருசியா, இந்தியா..
புடுங்கப்பாடுகள் எல்லாம் மலங்கக் கிடத்திவிட்டு
ஈனக்கழிவுகளாய் இறங்கிக்கொண்டன..

இளைய யுவதிகளை இழுத்துக்
குடித்தன இராசபக்சன் படைகள்..

போருக்கு முந்தியும் பிந்தியும்
நாளுக்குநாள் மறையும்
நம்மவர்கள்..

போர் முடிந்தாலும் கடத்தல்
முடியவில்லை..

ஆணாகவும் பெண்ணாகவும்
காணாமல் முடிக்கின்றன
கறுத்தப் பூனைகள்..

போர் முடிந்துவிட்டதாகப்
போப்பாண்டவர்வரைக்கும் சொல்லியது
இந்தச் சிங்கள தேசம்..

ஆனாலும் இன்னமும் மீன்பிடித்தடை..

நல்லூரான் வேளையிலும்
மல்லுக்கு நிற்கிறது ஊரடங்கு..

மூன்று இலட்சம் மக்கள் முகாமுக்குள்
பட்டினி..

கொழும்பில் பூஞ்சணவனோடு
வணங்காமண் பொருட்கள்..

இந்த நேரத்திலாவது
ம(கி)ந்தபுத்தி மாறவில்லை..

நல்லகாரியம் செய்ய இந்தச்
செல்லரித்தவனுக்குச் சிரசு விடவில்லை..

தமிழனைக் கையேந்த வைக்கும்
எழியவனாகவே..இவனும், இந்த நாடுகளும்..
இலங்காவும்..

இராசபக்சவுக்கு இந்தியாவின்
எத்தனை எத்தனை வளைகாப்புகள்..

நரகாசுரனுக்கு அய்நா மன்றத்தில்
ஆபத்தைத் தடுத்தது முதல்
ஆதரவுக் கடன்களுக்கு
அகிலத்தை வரித்தது இந்தியா..

சிரட்டை எடுத்துக் கூனிக்குறுகும்
ஒரேஒரு மாநிலம் தமிழ்நாடு..

ஈழம் பிறந்தால் தமிழனுக்கு மானம்
பிறக்கும் என்ற காரணத்தால்
மலையாள ம(h)ந்திரிகளால்
ஈழமண்ணை எரித்து தமிழகம்
அமிழப் புதைக்கப்பட்டது..

எல்லாமும் ஏன்?

வீரம்செறிந்த தமிழினம்
வீழ்த்தப்பட விரும்பியது இந்தியம்..

இன்னொரு இசப்பான்..இன்னொரு இசுரேல்..
இன்னொரு வல்லரசு இனிமேலுமா..

பிரபாகரனுக்குப் பயந்தது
பேய்பிடித்த உலகம்..

சாதிகளில்லாச் சமுதாயம்..
பிணக்குகள் இல்லாப் பேராட்சி..
கலையும், பண்பாடும் கண்காட்சிகள்..
சுத்தத் தமிழில் மனிதப்பெயரும்
வணிகப் பெயருமாய்...
அற்புத உலகத்தை எப்படி இவனால்
சமைக்க முடிந்தது..

உயிரைக்கொடு என்றால்
பயிர்களும் அல்லவா படை
சமைக்கின்றன..

கரும்புலிக்கு விரும்பியவாறு
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இந்தக்
கண்மணிகள்..

ஓ..இந்தச் சமுதாயம்..
கரிகாலன் மட்டுமே கருத்தரிக்க முடியும்..

எரிக்க நினைத்தார்கள்..

இருபது நாடுகள் கைகோர்த்தன..

பாகிஸ்தான் விமானிகளுக்கு அம்பாந்தோட்டையில்
காணிகள் கொடுக்கப்பட்டன..

சிறிலங்காக் கடவுச்சீட்டுகள்
இவர்களுக்கு..

இந்த விமானிகளை சிறீலங்காவின்
சொந்தமாக்கினான்.. இராசபக்ச..

ஈழத்தை எரித்து வேழத்தைப் புதைத்தது
இந்தக் கேடுகெட்ட உலகம்..

ஈழம் சாகுமா?

இசுரேல் செத்ததில்லை..

வியட்னாம் விழுந்ததில்லை..

கிட்லர்தான் செத்தான்..

யூதன்வேர் முடிந்ததா?

ஈழம் ஒருநாள் எடுத்தவேர் தளைக்கும்..

இலட்சமாய் முடிந்தோம்..ஆனாலும்
இலட்சியம் சாகாது...!

-எல்லாளன்..

Friday, July 24, 2009


முதலாவது ஆண்டு நினைவும் திதி வணங்கலும்!

தாயாகிப் பொன்மடியில்
தாங்கி வளர்த்தவளே!
தீயாக உருக்கித்
தெளிந்துபுடம் போட்டவளே
தூயவளாய் யாவருக்கும்
துதிக்கமனம் வைத்தவளே
ஏய ஒளிவடிவாய்
இறையடிக்குச் சென்றவளே
காய மனம்பரப்பிக்
கவலைகளில் மூழ்காமல்
நேய மணித்தாயை
நெஞ்சமெலாம் சுமந்தபடி
ஆயப் பொழுதுகண்டோம்
அகிலிறைவன் தாளிணையில்
சாயப் பொழுதுகண்ட
தாயே வணங்குகின்றோம்!

மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், சுற்றம்
06-08-2009

Monday, July 20, 2009

கலைந்த என் தேசம்.!



கலைந்து போய்க்கிடக்கிறது என் தேசம்
நிலா தந்து போன வானம் - தினம்
பிணம் பெய்து போகக்
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்...!

நிறைந்த வெளிகள் தோண்டி - என்
உறவுமறைந்த குழிகள் மூடிப் - பல
திறந்த முகாம்கள் வந்த பின்பு
கலைந்துபோய்க் கிடக்கிறது என் தேசம்..!

நீதி தவறிய அரசும் - இந்தியச்
சூது நிரப்பிய வஞ்சமும் - கலக
வாது ஏற்றிய சங்கங்களும் - எமக்கு
முக அரிதாரம் அப்பிப் போனதனால்
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.

சிதறிய அங்கமும் உடலும் - மணக்கும்
குதறிய காயமும் வடுவும் - நெடுக்கும்
கதறிய தாயும் சேயும் உறவும் -மேலும்
,தயம் பிளக்கும் நினைவும்
சேர கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்!

சூழ்ந்த கடல் என் கடல் - அதைச்
சூழ்ந்த நிலம் என் நிலம் - ,தைச்
சேர்ந்த புலம் என் குலம் - நினைச்
சார்ந்த ஈழம் தமிழ் ஈழம் - என விண்ணைக்
கவர்ந்த குரல்வளை நெரிக்கப்பட
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்.!

ஆக மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்..
மரித்த தாய் மார்புறிஞ்சி - தன்னுயிர்
தரித்த சேய் கண்டபின்பு
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்!

கல்லறை நீளும் வயல் வெளிகள் - நெல்
புதைந்து எலும்பு செழிக்கும் குழிகள் - செல்
பொழிந்து தளும்பிக் கொடுக்கும் நர பலிகள் -கல் உம்
கனிந்து உருகும் கண்ணீர்க் கதைகள் - எல்லாம் கண்டு
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.!

விளைந்து காலெடுக்கும் வெடிகள் - பல
பறந்து வால்வெடுக்கும் குண்டுகள் - சில
கழிந்து கற்ப்பெடுக்கும் அரக்கர்கள் - நில
அளந்து சூறையாடும் குண்டர்கள் - என்று
நின்று நீளும் பட்டியல் தாளாது
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.!

-துர்க்கா
(ஒரு இளம்கவியின் நெஞ்சக் குமுறல்)

Saturday, July 18, 2009

ஒரு காட்சி உரைகல்..


புலிவெண்பா..

கடைசி நிமிடச் சாட்சியின்
ஒரு காட்சி உரைகல்..


ஒரு சாட்சியின் வசனம்..
பூதா கரம்போலே பேயாம் நெருப்புக்குள்
சாதாழை போல்விழுந்த சங்கடத்தில்-நேதாஜி
போல்வன் பிரபாவான் பொய்யுமிழாச் சத்தியவான்
கால்கோளைச் சொல்லுகிறேன் காண்மின்!

கடைசி நெருக்கடி..
இரணுவன்கள் எல்லா இடர்ப்புறமும் சூழக்
கிரகணங்கள் போலானார் கேடர்-உரமனைத்தும்
கட்டி அரணமைத்து கால்போலே நின்றமக்கள்
விட்டு நடந்தாரே வேர்!

எங்கும் பிணம்..
திரும்பிய பக்கமெலாம் தீயான ஓலம்
குரும்பையும் பிஞ்சுமாய்க் கொட்ட-முருக்கான
வேதாளக் கிந்தன் விசவாயு எனப்பொழிய
பாதாளம் எங்கும் பிணம்!

அடிவைக்க முடியாமல் பிணங்கள்..
எல்லோர் மனதும் இதுதான் கடைசியென
வல்லபகை கொட்டும் வதைகண்டார்-சொல்லில்
வடித்தெடுக்க ஒல்லுமோ வார்க்குருதி ஊடே
அடிப்பிணங்கள் கண்டார் அடி!

வன்பகைவர் நோக்கி..
இறப்புச் சிறியது இறந்துபடப் போகும்
பறப்புப் பதற்றமது பாடாம்-துறந்துமண்;
தேடினார் மாற்று மகிந்தபடை தன்பக்கம்
நாடினார் மக்கள் நடந்து!

தெரிந்த தலைவன்...
தலைவன் நாடி தனைப்பிடிக்கும் வல்லான்
உலைவாய்க் கணமெல்லாம் உறுவான்-கொலைவாள்
இறுக்கும் கொடியதொரு எல்லாத் திசையும்
வறுக்கும் எனவறிவான் வார்!

நம்பிக்கை குலைந்த..
என்றாலும் போரில் இருந்தபடி நம்பிக்கை
கன்றித் தளபதிகள் கண்டாரே-நின்றார்
அசாத்திய நம்பிக்கை ஆடிப்போய் விட்ட
உசாப்பொழுதில் வந்தார் உறி!

எண்ணத்தைத் தகர்த்த கொடூரம்..
ஆனாலும் அச்சமின்றி ஆதவச் சூரியனான்
கூனாப்போர் செய்யக் குறிகண்டான்-தானாகி
நின்று களப்பகையை நேர்கொள்ளத் தேர்தலைவன்
நின்றமகன் கண்டான் நெருப்பு!

பெரும்படைகள் பிரபாவைச் சூழ்ந்தபோது..
பிரபாவைத் தாக்கும் பொறிகண்டு வேங்கை
உரமாக வைத்தாரே உட்காவல்-அறுநூற்றாய்
போர்ப்புலிகள் சூழ புலித்தலைவன் காப்பாற்றச்
சேர்ந்தார் தளபதிகள் சொல்!

பல தளபதிகள் இறப்பும் தலைவன் காப்பாற்றுதலும்..
அந்தவொரு தாக்குதலில் துர்க்கா கடாபியொடு
நந்தீபன் துர்க்கா விதுசாவும்-வெந்தகளம்
தன்னில் புலிப்படைகள் தாமுயிரை இட்டாரே
தன்தலைவன் காப்பாற்றித் தான்!
(ஆதாரம்: திருநா நேர்காணல்-நன்றி இளம்விகடன்)

இன்னும் தொடரும்..
சோலைக்குயில்..

Saturday, July 4, 2009

கரும்புலி வணக்கம்..!


ஆடி ஐந்தென்றால் ஓடிவிடும் கொழும்பு..

இப்பவும் மூடித்தான் இருக்கும் சில
கதவுகள்..

ஐம்பத்தியெட்டு ஆடி..
எண்பத்தி மூன்று ஆடி..

ஓட ஓட வெட்டி தமிழனைப்
புதைத்த ஆண்டுகள்..

காடுவெட்டிப் பக்சாக்கள்
காட்சிக்கு வந்தபிறகு வருகிறது..
இதுவும் கறுத்த ஆடி..
எங்கும் கனத்த ஆடி..

இந்த ஆடி..
மாடுவெட்டிய மகிந்தம்
மனித்ததை வெட்டிய நாட்கள் ..

முன்னர் காலம் காலமாகக்
குருதி இழந்தோம்..

இப்பொழுது கடல் கடலாகக்
கொட்டி முடித்தோம்..

முன்னர் கொஞ்சம் கொஞ்சமாகப்
பறித்தான்
இப்பொழுது மிஞ்சும்படி இல்லாமல்
எரித்துவிட்டான்..

உயிரை இழந்தோம்..

உடமைகள் இழந்தோம்..

பயிரை இழந்தோம்..

பண்பாட்டுப் பூமியை இழந்தோம்..

கற்பை இழந்தோம்..

கனியை இழந்தோம்..பிஞ்சுக்
காளானை இழந்தோம்..

எங்கள் மக்களை
உள்ளே வைத்திருக்கிது புலிஎன்று
ஓலமிட்டார்கள்..

இப்பொழுது முள்ளுக்கம்பிக்குள் அல்லவா
மோடயாக்கள் வைத்திருக்கிறார்கள்..

வேண்டுமென்றே இருந்த உலகம்..
சாம்பல் மேட்டை உருவாக்கிவிட்டு
சலனமில்லாமல் இருக்கிறது..

மகிந்தன் சன்னதித்திற்கு
உடுக்கு அடித்த இந்தியம்..
சிங்கத்துவாய்க்கு மான்களைக் கொல்லச்
செருகுவாள் கொடுத்திருக்கிறது..

சோனியத்துக்கு என்ன தெரியும்..?

அமைதிக்கு வந்து இயமமாய்த்
திரும்பியது தெரியாது..

காலம்காலமாய் ஈழமண்ணை அழித்தவருக்குத்தானே
கச்சதீவையும் கொடுத்திருந்தார்கள்..

இராட்சதனை-இராசபக்சவை உருவாக்கிவிட்டு
பராக் பராக் என்கிறது உலகம்..

தென்முனைக்கு சீனாவை இறக்கிவிட்டு
இராசபக்சனிடம் அன்பாகக்
கதைக்கிறது இந்தியம்..

இராப்பொழுதில் சல்லாபித்த எட்டப்பம்
இப்பொழுது பகற்பொழுதிலும்
இறங்கிவிட்டது..

இருபத்திமூன்று வருடங்கள் இறங்காத
பல்கலைகக்கழகத்திற்கு
இன்று இடக்ளஸ் போனாராம்..

இதற்கு என்னவிலை..?

கொழும்பில் கூட்டம் கூட்டமாய் அள்ள
இவனும்தானே கூட்டு..

ரவிராசை, மகேஸ்வரனைக் கொன்றவரின் கைகள்
இவனிடமும் அல்லவா இருக்கின்றன..

அற்புதன், நிமலராசன்..
இவர்கள் மீதான அரக்கர்கள் யார்?

எல்லாம் தெரியும்..
எல்லாவற்றையும் எங்கள்
இனமே புரியும்..

எங்கள் கன்னியரை வன்மம் புரிய எதிரிக்குக்
கொடுத்துவிட்டு அல்லவா..
அந்நியன் ஆயுதத்தோடு வருகிறான் இந்த
அகப்பைக்காரன்..

சாட்சியம்கள் சொல்வதாக வந்தவர்கள்கூடச்
சரிக்கட்டி விட்டார்கள்..

சாத்தான்கள் வந்துவிட்டார்கள்..

பாசிசங்கள் பூசிமெழுகி வருகிறது..

பூச்சுவாக்கள் மேய்க்க வருகின்றன..

நேர்மையின் வேர்கள் படைத்த
வேங்கை மண்ணை..சிங்களக்
கோர்வை வெறியர்கள் கொழுத்திவிட்டார்கள்..

பார்வைக்கு நின்ற உலகம்
பகிடிக்குக் கதைத்துவிட்டுப் பறந்துவிட்டது..

இந்தியம் சோனியம் எல்லாம்..
மலையாளியை வைத்து..
தமிழ் வாழாமல் அழித்துவிட்டனர்..


பார்ப்பனியம்..
இரண்டாயிரம் இந்துக் கோவில்கள்
அழிய-அழிக்கப்பட
சூர்ப்பனகையோடு சிங்களத்தின்
விருதுகளைச் சேர்க்கின்றன..

கரும்புலிகள் இருந்தபோது
கறுத்த ஆடி வெளிச்சம்தரும்..

இந்த ஆடி
துயின்ற ஆடி அல்ல..
துடித்த ஆடிதான்..

சிங்கத்தின் வாயில்..
செந்தமிழ்மான்..

இராட்சதன் வெல்லும்வரை
கரும்புலிகள் இருப்பில் இருக்கும்..!

செருவில் எரிந்த செந்தமிழ் நிலமே
பருக்கைகள் ஓட ஒருநாள்
இருப்புப் பிறக்கும்..

தமிழீழ வணக்கம்..!
-எல்லாளன்.

Thursday, July 2, 2009


ஓ..முருகையனே..!

பாலனாய் இருந்தபோது
என்ஆச்சி பால்தருவாள்..கொஞ்சம்
கால்கள் ஊன்றி நடந்தபோது
குயிலோடு கூவக் கற்றுக்கொண்டேன்..

கோவில் மணியோடு
குமரன் அழைத்தான்..சிலநாட்கள்..

சமநேரத்தில்..
பாவில் நீங்கள்
அழைத்ததினால் தானே இவனையும்..
பற்றியது நெருப்பு..

சில்லையூர், முருகையன், அரியாலை
அல்லை சத்தியசீலன், தில்;லைச்சிவன்
காரை சுந்தரன், மகாகவி, காசி..சொக்கன்..
வேந்தன்..கந்தவனம்..புதுவை..மதுரகவி..

இன்னும் இன்னும் எத்தனை பிம்பங்கள்..
இதற்குப் பின்னால் எந்தக் கம்பங்களும்
ஒன்றாக நிற்க..முடியவில்லை..அப்பா..

அற்புதம் அற்புதம்..
இந்தத் தொடர்கள் இனிக்கிடைக்குமா என்ன..?

தொட்டுத் தெறிக்கும் பட்டுக் கதிர்களுக்குள்
நான் சுட்டெரிக்கபட்டதினால்தான்
எனது பதினாறாவது வயதுக் கவிதை
நட்டுக்கொண்டு வந்ததையா..

உங்கள் உருவங்களைப் பார்த்தே எனக்குப்
பருவம் வந்தேறியது..

கிளிநொச்சி ஈஸ்வரன் படமாளிகையில்..
ஒரு கவியரங்கு..

பூசி மினுக்கிப் பொடிபோட்டுக் கொண்டை குத்தி
நாசி மூக்குத்தி..நரிவால்..குதிரைவால்
கூந்தல் கிளப்பி கூட்டமாய்க் குதிப்பாய்..
பெண்களாய் இந்தத்
தியேட்டருக்குள் வந்திருக்கும்..
என்ற அந்தக் கவிஞன் முடிக்கவில்லை..

நிறுத்திவிட்டான் கவிஞன்..

சில்லையா, முருகையனா, காரையா..
மிளகாய்க்கு வருமானம் சொல்லிய
நாகலிங்கம் ஆசிரியரா...
கணக்கு எடுக்க மனத்துள் இன்று
கலங்கக்கங்கள்..

என்றாலும் தியேட்டர் குலுங்கிய
அன்றையப் பொழுதில்..

பெண்கள் முகம்திரும்பி..கதைத்து..
கூட்டமாய் எழுந்து குரல்கொடுக்க வரும்பொழுது..

தியேட்டர் இதனுள் வருவோர்போல் அல்லாமல்..
கவிகேட்க வந்திருக்கும் கார்த்தமிழின்
பெண்ணினமே..

அகலவாய் திறந்தான்..அந்தக் கவிஞன்..

கரமார்த்து நின்று உரமார்த்தபடி
கவிகேட்கவந்த
சபைக்கு இருந்துவிடத் தெரியவில்லை..

தமிழினித்த போதுகளில்
சிக்கிப் புல்லரித்தபடியே..

என்னப்பா..என்னப்பா...
இந்தக் கவிகளுக்கு.. எங்கே.. இணையுண்டு..?

இன்னொரு.. மயிர்க்கூச்செறியும் கவியரங்கு..
திங்களைச் சுற்றுதும் என்பது தலைப்பு..

ஆம்ஸ்ரோங், கொலின்ஸ், அல்ரின் ஆகியோர்
சந்திரனில் இறங்கிய செய்திவந்த
சிலநாட்களுக்குப் பின்னால்..அதுகொண்ட
ஒரு தலைப்பு..

சரவணை முத்தமிழ் மன்றத்தை
முழுநிலத்துக்கும் அங்குரார்ப்பணம் செய்த
முத்துக் கவியரங்கு..

நாசி அழகும் வீசி மயிர்பரப்பும்
முழுநுதலோடு மகாகவியும்..

திங்களைச் சுற்றப்போய் பெண்களைச் சுற்றிவந்த
காசியின் கவியும்..

புளியடியில் வந்து இறங்கி..என்ற
அல்லையின் வரியும்..

மதுரகவி, அய்யாத்துரை...தில்லைச்சிவன்..

மூளைக்குள் இறங்கி நாளங்கள் எல்லாம்
உடைப்பெடுத்தபடி நான்..

நீங்கள் கட்டிய ஏணைகளில் படுத்துறங்கிய தமிழாளுக்குப்
தாலாட்டுப் பாடிய தங்கக் கவிஞர்களே..

மாடு கயிறறுக்கும் என்றவனே எங்கள்...
ஈழக்கவிஞன்.அயலெடுத்த கவிஞனே..
முருகையனே..

பாரதியைப் படித்து..பாரதிதாசனைப் பார்த்துக்
கவியரசைப் பார்த்து.. இவர்களின்மேல்
ஏறி இருந்து சவாரிசெய்த
ஈழக்கவிஞர்களே.. உங்கள் வரிகள்..

தமிழகத்தையும் உடைத்தல்லவா புறப்பட்டன..

இந்தத் தாக்கம்..
இன்னும் இருக்கும்..

கயிறறுத்துப் புறப்பட்ட குயிலே..

புருவம் கொடுத்துப் புறப்பட்ட
முருகையனே..

நீயும், நெடிதுயர்ந்த உனது
நிலப்பரப்பும்..

காயும் என்று எண்ணாதே..
காலம் எல்லாமும் உனது
கணக்கிருக்கும்...

சென்றுவிட்டாய்.. இனியென்ன..
சென்றுவா..!
-புதியபாரதி.