Friday, January 16, 2009

எனக்குக் கவிதை.....!

எனக்குக் கவிதை.....!

கவிதைசெய்வீர் என்றெனக்குக் காதல் செய்தீர்
காரணங்கள் இன்றியெதும் கவிதை இல்லை
புவியீர்ப்பு ஒன்றின்றேல் பூமி கல்லே
பெய்துவிழும் மழையருவி உயிர்கள் இல்லை
அவிவிழுந்து யாகமெழும் மந்தி ரங்கள்
அனைத்திற்கும் வேதமெலாம் நோக்கம் சொல்லும்
விதையின்றி முளையில்லை எந்தன் பூமி
வேரின்றி எனக்கெதுவும் கவிதை யில்லை!

பள்ளத்தை நோக்கிவழி வெள்ளம் பாயும்
பள்ளம் இருந்தேறும் கவிதை ஊற்றாம்
கொள்ளையிடும் தமிழதுவே கவிதை என்றால்
கொடுவாளும் அதுவேதான் கயமை கொல்லும்
நெல்லுயர நீராகும் நெருப்பே ஆகி
நேர்மைவெலப் போர்முனையின் ஈட்டி யாகும்
உள்ளம் நெகிழ்ந்துவரும் ஊற்றே ஓடி
உள்ளம் இடித்துவரும் குருதி என்பேன்!

சொல்லுகள் கவிந்துவிடின் கவிதை யாகா
தூஷணங்கள் காலத்தை வெல்லா தப்பா
அள்ளிவரக் கரங்களுக்கு மலமா தேவை
ஆகாரம் என்பதுபார் விஷங்கள் அல்ல
இல்லையில்லை இவைஎதுவும் எழுத்தே யல்ல
இனியதமிழ் ஒன்றேதான் பேசும் கவிதை
தௌ;ளுதமிழ் ஆர்நிலமும் தேசப் போரும்
அள்ளிவர என்கவிதை அகப்பை யாகும்!

-புதியபாரதி
(நிலப்பூக்கள் புத்தகத்திலிருந்து

No comments:

Post a Comment