Saturday, January 31, 2009

வீரமகனுக்கு வீரவணக்கம்

வீரமகனுக்கு வீரவணக்கம்

ஈழமணி நிலத்துயரை நெஞ்சில் ஈர்த்து
எரிந்துவிட்ட முத்துகுமார் என்றும் வாழ்வான்
ஆழமொடு அஞ்சலியை அளித்தோம் என்றே
அரசியலார் நடேசன் அறிக்கை தந்தார்
சூழுலகம் வீரமகன் தியாகத் தீயில்
சேர்ந்தெரிந்தார் வையமெலாம் சீறக் கண்டோம்
மேழியெனத் தமிழ்நிலத்தை உழுதா னுக்கே
வீரவணக் கம்மிட்டு விடையே வைத்தோம்!

அம்பதுவாம் ஆயிரங்கள் அதற்கும் மேலாய்
அணிதிரண்டோர் முத்துகுமார் அழகுப் பிம்பம்
கும்பத்தில் ஏற்றிவைத்துக் குதித்தார் வெள்ளைக்
குலவுபனி மீதிலவன் கொள்கை யிட்டார்
செம்பவள வன்னிநிலம் சிதறும் மக்கள்
சிங்களத்தின் கொடியகரம் துயரம் சொல்லி
அம்புவென ரொறன்ரோவில் அகலப் பாய்ந்த
அன்னைமக்கள் வீரமகன் அகலாய் நின்றார்!

ஊழிவரைக் காலவரை எழுதிப் போந்த
உணர்வலைகள் மாயாது ஈழம் பேசும்
தாழியிலே வெண்ணைவந்து திரளும் போது
தறிகெட்ட இந்தியத்தால் தறிக்கப் பட்ட
ஏழைகளின் இருப்புமண்ணை இதயம் வைத்து
எரிந்தவனே முத்துகுமார் உனக்கு எங்கள்
ஈழமக்கள் குருதியிலே எழுதி வைத்தார்
இதயவீர வணக்கமிட்டார் சென்று வாராய்!

-புதியபாரதி


முத்துக்குமாரிவன் மொழிந்தான்!


ஈழமே பார்த்து எரிகிறேன் ஆங்கே
என்னடா என்னடா துயரம்?
வாழவே இங்கு மனமெதும் இல்லை
வையகம் காட்டுமென் உயிரை
ஏழுகோ டியாய் இருந்துமே அந்த
எங்குலக் குடிகளுக் கழிவோ?
சூழுமென் உடலின் தீயொடு தமிழா
தெரிந்திடு மானிடத் தர்மம்!

இந்தியக் குருடு இருவிழி திறக்கார்
இந்நிலை வந்ததே இன்னும்
பந்தியில் சிங்கப் படையுடன் நின்றே
பண்தமிழ் உயிர்களைக் கொன்றார்
வெந்தது மண்ணே வீசிடும் சதைகள்
விசிறிக் கிடப்பதைப் பாரீர்
குந்தியே இருக்கக் கொள்ளுமா ஆங்கே
குலக்கொடி கதறுதே காணீர்!

இரசீவின் கொலையில் இராட்சதச் சிக்கல்
இருப்பது செயன்குழுத் தீர்ப்பு
உரசியே காணா உண்மைகள் புலியின்
இடாப்பிலே இடுதலோர் இழிவு
அரசியல் ஆப்பு அடுக்கிய பணத்தின்
அட்டிக னானது அறிவீர்
குரலிதைக் கொள்வீர் கொடியவர் நாளை
குலத்தமி ழகத்தையும் கொல்வார்!

ஆட்சியும் காசும் ஆக்கிடும் கட்சி
அவலமே தீர்த்திடார் அறிவீர்;
பாட்டமாய் வருவார் பகிடியாய் முடிவார்
பதைத்திடும் தமிழனுக் குதவார்
கேட்டிடு என்தமிழ்க் கூடெனும் தலைவீர்
கொள்ளொரு கொள்கையின் கோடாய்
நாட்டினில் வருவீர் நலிந்தவர்க் காகி
நல்லதோர் அரசியல் நயப்பீர்!

இன்றுநான் எரிவேன் என்னுடற் பிழம்பு
இனத்தமிழ் விழிகளைத் திறக்கும்
ஒன்றுகேள் தமிழீர் உம்மைநீர் ஆள்வீர்
இல்லையேல் தில்லியே அழிக்கும்
என்னுடல் மேவி எழுந்திடும் நெருப்பில்
ஏழுல கெல்லமும் விரியும்
வென்றுவா பிரபா வேங்கையின் மைந்தா
முத்துக்கு மாரிவன் மொழிந்தான்!

புதியபாரதி


(முன்னதின் திருத்தம்)

Friday, January 30, 2009

நான்..முத்துக்குமார் பேசுகிறேன்..!

ஈழமே பார்த்து எரிகிறேன் ஆங்கே
என்னடா என்னடா துயரம்?
வாழவே இங்கு மனமெதும் இல்லை
வையகம் காட்டுமென் உயிரை
ஏழுகோ டியாய் இருந்துமே அந்த
எங்குலக் குடிகளுக் கழிவோ?
சூழுமென் உடலின் தீயொடு தமிழா
தெரிந்திடு மானிடத் தர்மம்!

இந்தியக் குருடு இருவிழி திறக்கார்
இந்நிலை வந்ததே இன்னும்
பந்தியில் சிங்கப் படையுடன் நின்றே
பண்தமிழ் உயிர்களைக் கொன்றார்
வெந்தது மண்ணே வீசிடும் சதைகள்
விசிறிக் கிடப்பதைப் பாரீர்
குந்தியே இருக்கக் கொள்ளுமா ஆங்கே
குலக்கொடி கதறுதே காணீர்!

இரசீவின் கொலையில் இராட்சதச் சிக்கல்
இருப்பது செயன்குழுத் தீர்ப்பு
உரசியே காணா உண்மைகள் புலியின்
இடாப்பிலே இடுதலோர் இழிவு
அரசியல் ஆப்பு அடுக்கிய பணத்தின்
அட்டிக னானது அறிவீர்
குரலிதைக் கொள்வீர் கொடியவர் நாளை
குலத்தமி ழகத்தையும் கொல்வார்!

இன்றுநான் எரிவேன் என்னுடற் பிழம்பு
இனத்தமிழ் விழிகளைத் திறக்கும்
ஒன்றுகேள் தமிழீர் உம்மைநீர் ஆள்வீர்
இல்லையேல் தில்லியே அழிக்கும்
என்னுடல் மேவி எழுந்திடும் நெருப்பு
இதயமெல் லாமுமாய் எரியும்
வென்றுவா பிரபா வேங்கையின் மைந்தா
முத்துக்கு மாரிவன் மொழிந்தான்!

வேறு

வீரமகனுக்கு வீரவணக்கம்


ஈழமணி நிலத்துயரை நெஞ்சில் ஈர்த்து
எரிந்துவிட்ட முத்துகுமார் என்றும் வாழ்வான்
ஆழமொடு அஞ்சலியை அளித்தோம் என்றே
அரசியலார் நடேசன் அறிக்கை தந்தார்
சூழுலகம் வீரமகன் தியாகத் தீயில்
சேர்ந்தெரிந்தார் வையமெலாம் சீறக் கண்டோம்
மேழியெனத் தமிழ்நிலத்தை உழுதா னுக்கே
வீரவணக் கம்மிட்டு விடையே வைத்தோம்!

Puthiaparathy

Saturday, January 24, 2009

வாரிவாரி வழங்குவாய் வையத்தமிழா..!

வரலாறு அழைக்குதடா வாடா தம்பி
வைகைநிலம் கதறுதடா வதையில் வெம்பி
குரலோடு நிறுத்தாதே கொடுப்பாய் காசு
குருதிவிழச் சாகுவதோ குவையாய் வீசு
அரவாணிப் பக்சாக்கள் அடிக்கும் குண்டில்
அரும்புகளும் துடிக்குதடா அழிவில் நின்று
நரம்புகளே வெடிக்குதடா நல்ல தம்பி
நமதீழம் இருக்குதடா உன்னை நம்பி!

தமிழகத்து மாணவர்கள் திரண்டு வந்தார்
தாயகத்துத் தொப்புளெனத் தரணி கண்டார்
தமிழீழத் துயரெண்ணாத் தலைமை ஆட்சி
தந்ததெலாம் கொலைக்காடு தானே என்றார்
சுமைவெல்ல உண்ணாத நோன்பு காட்டி
தேசமெலாம் இந்தியத்தைத் தெளிய வைத்தார்
எமையீன்ற தாயகத்தை இதயம் வைத்து
எழுந்திடடா என்தமிழா இதுவுன் சொத்து!

வாரிவாரி வழங்கிடுவீர் வற்றா ஊற்றாய்
வதைநிலத்தைக் காத்திடவே வையம் வந்தீர்
வேரிருந்து அறுந்துவிழப் போமோ எங்கள்
விடிநிலத்தில் தாய்தந்தை விழவோ சொல்வீர்
தேரிருந்த மணிநிலத்தில் தீயர் வந்தார்
தினம்நூறாயக் கொல்லுகிறார் தேசம் கோடிப்
பேரிருக்கும் தாயகத்தீர் பெருகும் வெள்ளிப்
பெருங்கரத்தில் வென்றிடுவீர் பெற்ற மண்ணே!
-புதியபாரதி

-

ஹக்கூ கவிதைகள்..

நடிகை

செயலலிதா அம்மணி..
ஈழத்தமிழர் என்று ஒருவரில்லை..
பிள்ளை பெற்றால்தானே தொப்புள் உறவு..!

இவைக்கோ..!

வைக்கோ தில்லியில் நோன்பு..
பொடாவில் முன்பு..
தேவை: அதிமுகவிற்கு ஒரு ஆயுள்கைதி.

கலை..ஞர்..!

கொல்லும் அமைதிப்படைக்கு
என்ன வரவேற்பு..!
கொல்லும் மகிந்தர்க்கு என்ன
இந்தியக் குடை..!
(கருக்)கலைப்புப் பாட்டி.!

ரசீவு..!


ரசீவு கொலை..குமுதம் நேர்காணல்
சூனாச்சாமி சானாச்சாமி..
சோனியாவுக்கு தலையிடி போச்சு..

இனியும் ரசீவு..!

வெளியே சாமிகள்..
உள்ளே நளினிகள்..
தில்லியில் சிங்கள
சந்திரவாசம்..

ஈழம் ஒரு இசுரேல்..!

கோல்டாமெயர் கரங்களில் கொடுத்த வெள்ளிகள்..
இசுரவேல் உதிப்பு..
உலகமெங்கும் ஈழத்தமிழர்..

தமிழன்கை..!

ஈழத்தமிழா..
வாரியிறைக்கும் பாரிகள்..
நாளை தமிழீழம்..!


-கொழும்பான் கவிதைகள்..

Thursday, January 22, 2009

எரியும் பொழுதுகள்..

வெண்பனிப் பரப்பிலே மேபிள் மரங்களாய்
என்மனம் காட்டிடும் நிர்வாணம்..வெள்ளை -வெண்பனிப்

துண்டிலா நிழல்கள் தூரனின் கிறுக்கலாய்த்
தெரிந்திட என்மனம் தினம்வாடும்..வெள்ளை -வெண்பனிப்

உண்ணவோர் பருக்கைகள் உதவுவார் இல்லை
உடுக்கவோர் புடவைகள் இடையிலும் இல்லை
மண்ணிலே என்குலம் மடிந்திடும் தொல்லை
மானமண் அழிவதோ வாழ்க்கையின் எல்லை.. -வெண்பனிப்

குண்டுகள் தலைக்குமேல் கொட்டுதே அம்மா
கொடியவர் வதைக்குகை முட்டுதே அம்மா
தெண்டிரை எழினித் தேசத்தின் வாசலில்
தீந்தமிழ் ஒலிக்கத் திரும்புமோ விடியல்.. -வெண்பனிப்

-நம்நாடன்

Tuesday, January 20, 2009

ஒபாமா..

இன்றுநீ.. நாளை நாங்கள்...

வரலாறு சில சிறப்பு நாட்களுக்கே
சில்லுப் பூட்டியிருக்கிறது..

இரண்டாயிரத்து ஒன்பது சனவரி இருபது
என்ற இந்தநாள் சரித்திரத்தில் புதியநாள்..

ஆபிரகாம் லிங்கன் பிறந்த பூமியில்
அதே அடிச்சுவட்டில்,
சனநாயகம் என்ற தொட்டிலில்
ஒரு கருப்புக் குழந்தை ஒபாமா..

ஆமாம்..
அமெரிக்க என்ற வல்லரசு நாடு
சமமாக வைத்து இல்லை இல்லை..
சராசரிக்கும் உயரமாக வைத்து
நாற்பத்தி நான்காவது சனாதிபதியாக
சத்தியப் பிரமாணம் செய்வதற்கு
ஒரு கறுப்புத் தோன்றல் என்ற
காலவரலாற்றை எழுதிநிற்கிறது..
இன்றைய நாள்..

புயல் ஓய்கிறபோது புழுதி பறக்க அல்லது
பொங்கி அடிக்கும் பனிக்காற்றோடு
போகக் காட்டும் காலக் கண்ணாடிபோல்..
ஜோர்ச் புச்சுக்கு ஒரு பிரியாவிடை..

குண்டு நொருக்கில் கொடிகட்டிய இசுரேல்
கொட்டுமட்டும் கொட்டி முட்டி தட்டிக்கொண்டது..

மும்பை நகருக்குள் கம்பெடுத்து வீசிய
விம்பன் முடுக்கு விலாசம் கொடுத்தது..
பாகிஸ்தான்..

அப்பாவிகளைக் கொன்று புலிகள் என்ற
கணக்குப் போடுகிறது மகிந்தக்
காட்டாட்சி..

இந்த ஒபாமாவின் வருகையோடு
வாலை இழுத்து வந்தவழி போயிருக்கிறது..
இசுரேல்..

விடியலுக்கு முந்திய
விடிவெள்ளிபோல்
அநியாயச் சிக்குதலுக்கும்
அதிரடியா ஒரு ஒளிக்கீற்று..
ஒபாமாவாக..

அமெரிக்கம் என்ற தத்துவத்தின்
பொன்னெழுத்தின் இன்றையநாள்
பூவுலகத்தின் ஒரு திருப்புநாள்..

நாமும் நம்புவோம்..

இனஅழிப்புச் செய்கின்ற
இராசபக்ச ஆட்சியில் இருந்து
விடுபடும் நாளாக-
வேதனையின் விளிம்பில் இந்தச்
சாதனையாளனிடமிருந்து
சத்தியம் செய்வோம்..

நாங்களும் வெல்வோம். எங்கள்
சத்தியம் வெல்லும்..

இன்றுநீ ஒபாமா..
நாளை நாங்கள்..
எழுந்து நிற்போம்..

-வன்னிமைந்தன்

Sunday, January 18, 2009

தென்றலாய் வருக

தென்றலாய் வருக பொங்கற் புத்தாண்டே!

பொன்னுல கெல்லாம் பாடி
பொய்கையாய் உறவு தேடி
துன்பியல் கொட்டும் மாந்தர்
திருந்திட மனிதம் கூடி
வன்பகை ஒடித்து வாகை
வடிவினில் இனங்கள் நாடி
இன்றொரு புதிய ஆண்டே
எழுச்சியாய் வருக ஆண்டே!

அகதியாய் அலையச் சொந்த
அன்னைமண் நிழல்கள் கூட
சகதியாய் ஆகக் குண்டு
சரித்திட வைத்த கேடு
பகரவே எட்டாம் ஆண்டு
பறந்தது புதிதாய் வந்து
திகழவே ஒன்ப தாகித்
தென்றலாய் வருக ஆண்டே!

Saturday, January 17, 2009

சிலுவை சுமக்கும்

சிலுவை சுமக்கும் திருமாவளவா?


தொல்.திருமாவளவா..?

ஈழத்தமிழன் துயரத்திற்காகச்
சிலுவை சுமக்கும் தேச மைந்தனே..!

அறப்போரின் புதிய அத்தியாயம் ஒன்று
இப்பொழுது அரங்கேறுகிறது..

உலகத் தமிழனின் கண்களில் நீ
அலகாய் நிற்கிறாய்..

இந்தியா என்ன நிமிர்த்தக் கூடிய
நாய்வாலா..?

கண்டி மலைநாட்டுத் தேனீர் குடித்தபடி
தமிழ்நாட்டு மண்ணைத் தாரைவார்த்த
இந்திராவின் தவறு
இப்பொழுதும் தெரியவில்லையா?

அதுவொரு இயம விளையாட்டென்று..

அறுநூறு தமிழன் உயிர்கள்
அடித்துப் பறித்தபின்பும்
பாக்குக் கடலில் சீக்குத் துடைக்கிறது..
இந்தப் ப(h)ரதம்

பாரதத்தின் பாதுகாப்பு கேரளத்தார் கையில்
பழுது பார்க்கப்படும் இந்த வேளை..
பாகிஸ்தான் மும்பையில் பகிடிவிடுகிறது..

சிங்களக் கூட்டம் நாராயணனை
நடக்கவிட்டுப் பார்க்கிறது..

தமிழன் தலையில் மகிந்தன்
குண்டு அரைக்கிறான்..

கொஞ்சம் திரும்பிப்பார்..
பிடரியில் அடிகொடுத்த பின்பும்
புரியாத ரசீவுகாந்தி
தெரியாத ஒப்பந்தம் எழுதித்
தீர்ந்து போனார்..

இயமம்படையை அனுப்பி
அமைதிப்படை என்று
அறிவித்தவர் அறியாமலேயே போய்விட்டார்..

யார் கொன்றிருப்பார்கள்..?

சூனாச் சாமியும், சானாச் சாமியும்
சோனியாவின் கருத்துக்குச்
சொல்லப்பட்டிருக்கிறார்கள்..

சோனியா அம்மாவையும்
முன்னர் விசாரிக்கச் சொன்னவரும்
இந்தச் சூனாச் சாமி..!

திலீபனுக்குப் தீகொடுத்தவர்கள்..
பூபதித் தாயின் இறப்பிற்கு
மூப்புப் பார்த்தவர்கள்..

பன்னிரு வேங்கைக்குச்
சயனைட் கடிக்கச் செய்தவர்கள்..

அரிசியும் பருப்பும் போட்டு
ஆறு இயக்கங்களை அடிபட வைத்தவர்கள்..

கற்பழித்துப் போனவர்கள்-
பொற்பதக்கங்களைத் தட்டிப் பறித்துச்
சாக்கில் போட்டு
பாக்குநீரிணை கடந்தவர்கள்..

குறையாக ஒப்பந்தம் எழுதி
கறையாக முடித்த இந்தியம்
பொய்யான வலிமைக்குள்
பொல்லு வைத்திருக்கும் ஒரு பூ(க்)கம்பம்..

சிங்களத்தைத் தெரியாமல்
தமிழனுக்கு ஒத்தடம் கொடுக்கப்போன
தம்பிரான்கள்..

நீ.. தெரிந்துகொள்..

மந்தியிலும் பார்க்கப் பாய்கிறார்கள்
இந்த இந்திய மாய்மாலம்..

உன்வரலாறு சிலுவை சுமந்த வரலாறு..

பொன்னாற் பூக்கிறது ஈழப் பூக்கள்..

உன்னால் நிமிர்ந்தது
அறத்தின் பூக்கள்..

உன்மூச்சில் மலர்கிறது
அக்கினிப் பூக்கள்..

உலகத் தமிழன் கண்கள் இன்று
உன்னாற் திறக்கப்பட்டிருக்கிறது..

கேட்டு ஒன்றும் நடக்காது திருமாவளவா..

அதனாற் தானே நீ தமிழகத்தின்
பூட்டை உடைத்திருக்கிறாய்..

காட்டுநரியும் கோட்டை நரியும்
கூட்டுச் சேர்ந்தால் என்ன?

தமிழீழ நாட்டுத் தர்மம்
ஒன்றே வெல்லும்..
இன்றே வெல்லும்..
என்றும் வெல்லும்..!

நீ.. நிமிர்ந்து கொண்டாய்..
தமிழீழம் எழுந்து கொண்டது..

வாழ்நாளின் சாதனையாளா..
உன்னை
வணங்குகிறது தமிழீழம்..!

-வன்னிமைந்தன்..

Friday, January 16, 2009

எனக்குக் கவிதை.....!

எனக்குக் கவிதை.....!

கவிதைசெய்வீர் என்றெனக்குக் காதல் செய்தீர்
காரணங்கள் இன்றியெதும் கவிதை இல்லை
புவியீர்ப்பு ஒன்றின்றேல் பூமி கல்லே
பெய்துவிழும் மழையருவி உயிர்கள் இல்லை
அவிவிழுந்து யாகமெழும் மந்தி ரங்கள்
அனைத்திற்கும் வேதமெலாம் நோக்கம் சொல்லும்
விதையின்றி முளையில்லை எந்தன் பூமி
வேரின்றி எனக்கெதுவும் கவிதை யில்லை!

பள்ளத்தை நோக்கிவழி வெள்ளம் பாயும்
பள்ளம் இருந்தேறும் கவிதை ஊற்றாம்
கொள்ளையிடும் தமிழதுவே கவிதை என்றால்
கொடுவாளும் அதுவேதான் கயமை கொல்லும்
நெல்லுயர நீராகும் நெருப்பே ஆகி
நேர்மைவெலப் போர்முனையின் ஈட்டி யாகும்
உள்ளம் நெகிழ்ந்துவரும் ஊற்றே ஓடி
உள்ளம் இடித்துவரும் குருதி என்பேன்!

சொல்லுகள் கவிந்துவிடின் கவிதை யாகா
தூஷணங்கள் காலத்தை வெல்லா தப்பா
அள்ளிவரக் கரங்களுக்கு மலமா தேவை
ஆகாரம் என்பதுபார் விஷங்கள் அல்ல
இல்லையில்லை இவைஎதுவும் எழுத்தே யல்ல
இனியதமிழ் ஒன்றேதான் பேசும் கவிதை
தௌ;ளுதமிழ் ஆர்நிலமும் தேசப் போரும்
அள்ளிவர என்கவிதை அகப்பை யாகும்!

-புதியபாரதி
(நிலப்பூக்கள் புத்தகத்திலிருந்து

Thursday, January 15, 2009

மண்ணில் விளைந்தவை-01..!

வேங்கை வருகவே..!

புலிகள் ஓங்குமா?-மண்ணின்
புகலைத் தாங்குமா?
எலிகள் வீங்குமா- தமிழர்
இனத்தை அழிக்குமா?

இன்னும் ஏனடா-இந்த
இழப்புத் தானடா?
அன்னைப் புதல்வனே-நீ
அதிரும் திசையடா!

கண்ணை மூடியே-சிங்கக்
கரிச்சான் கொல்லுறான்
விண்ணில் வந்துமே-குண்டு
விசுக்கிப் செல்கிறான்!

சும்மா திரிந்தவர்-அன்னை
தேசம் மறந்தவர்
எம்மாக் கதைக்கிறார்-அட
இடியாய்ச் சிதைக்கிறார்!

சதையே நொருங்குதே-சொந்தம்
சாய்ந்து கிடக்குதே
பகைவன் சிரிக்கிறான்-ஒட்டுப்
பழியன் நகைக்கிறான்!

தூங்கிக் கிடந்தவர்-காசு
துளியும் இழந்திலர்
ஏங்கிக் கதையிட-அட
இப்போ வருகிறார்!

வேங்கை மறவரே-உம்
வீரம் எழுகவே
நாங்கள் இருக்கிறோம்-எங்கள்
நாடு எழுதவே!

இளையோர் கரங்களே-புவி
எங்கும் உயர்கவே
மழையாய் வழங்குவீர்-தமிழ்
மண்ணின் புதல்வரே!


-வன்னிமைந்தன்

Wednesday, January 14, 2009

ஓ..தமிழவளே..!

ஓ..தமிழவளே..!

மானா மதுரைத் தமிழவளே
மடியிற் சுமந்த இனியவளே
வானம் வளரும் நிறைமதியே
வாராய் ஈழ வைகறையே -மானா

கானிற் பூத்த நிலப்பூக்கள்
கரிகா லன்பேர் சொலும்பூக்கள்
ஏனைச் சிந்தே தாலாட்டே
என்னை வரிக்கும் தமிழூற்றே -மானா

வேரிற் பழுத்த பலாப்பழமே
வேலன் கோவில் விடிவிளக்கே
தேரில் உலவும் திருமகளே
தேசம் வைத்த உயிர்மகளே - மானா

காரிற் பூத்த கனமழையே
கால்கள் அளந்த குழலழகே
நாரி ஒடியும் நூலிழையே
நாட்டின் அன்னைத் தமிழணங்கே! -மானா

கம்பன் போற்றக் கனிந்தவளே
காசி ஆனந் தன்னூற்றே
எங்கள் புதுவை எழுமூற்றே
ஈர்ப்பாய் புதிய பாரதியே! -மானா

புதிய ஆண்டில் பிறக்கும் ஈழம்

புதிய ஆண்டில் பிறக்கும் ஈழம்!அடிடா அடிடா உறுமிமேளம்
அழகாய் உதிக்குது தமிழீழம்
அன்னை மண்ணின் எழிற்தேசம்
அடிமை போக்கி அகல்காட்டும் -அடிடா

குத்துப் பாட்டு குதிக்கப் பாடு
எத்திக் கோடும் இசையைப் போடு
நத்துப் புத்தன் நரியை ஓட்டி
நாடு காக்கும் புலியைக் கூட்டி -அடிடா

அக்கு வேறு ஆணி வேறு
அடித்து நின்றாள் புலிமாது
வெற்றி வெற்றி வெற்றி என்று
வேங்கை நின்றான் நிலம்மீது! -அடிடா

தங்கத் தலைவா தானைத் தலைவா
தமிழாய் உதித்த சேனைப் புதல்வா
பொங்கும் நாளில் புதிய ஆண்டில்
புதுமை ஈழம் பூக்கும் தோழா! –அடிடா

-வன்னிமாறன்.

தமிழநம்பி: கொடுமையிது! அறக்கொலையே!

தமிழநம்பி: கொடுமையிது! அறக்கொலையே!

தமிழநம்பி, உங்கள் கவிதைகள் மரபில் அச்சொட்டான கவிதை. இளையவர்கள் பயில ஏற்ற இனிமை, புதுமை, உண்மை, சாடல் எல்லாம் இணைந்த பாடல். நன்றி-புதியபாரதி

துன்பப் பொங்கல்

துன்பப் பொங்கல்
துடைக்கும் இன்னல்!


பச்சரிசி தானும் இல்லைப்
பழம்பாக்கு வெற்றி லைகள்
அச்சுவெல்லம் ஏதும் இல்லை
அடுப்புவைக்கப் பானை இல்லை
குச்சிலொரு சேலை கட்டி
குடியிருக்கும் மக்கள் எல்லாம்
அச்சமில்லை என்று ரைக்க
அன்னைநிலம் பொங்கு தடா!

வார்த்தைகள் இல்லை மக்கள்
வதைபடும் தொல்லை எண்ணம்
சேர்த்தொரு நீதி சொல்ல
செகத்தொரு மனிதம் இல்லை
ஊர்த்திடல் வரித்த வேள்வி
எழுதிடும் வெற்றிப் பொங்கல்
ஆர்த்திடும் புதிய ஆண்டு
அகிலமெல் லாமும் காண்போம்!

Tuesday, January 13, 2009

தமிழே இசையைத் தான்தாங்கு!

தமிழே இசையைத் தான்தாங்கு!

எடுப்பு
தங்கத் தமிழே எனைத்தாங்கு-நீ
தானே இசையின் உயிர்ப்பாங்கு -தங்கத்

தொடுப்பு

முங்கிப் பொழியும் மொழியின் வெள்ளம்-நீ
முத்துப் புலவர் ஏந்தும் உள்ளம் -தங்கத்

முடிப்பு

எங்கும் ஏற்றும் ஒளியின் சிதறல்-தமிழ்
இசைகள் கோர்த்த மணியின் கதிர்கள்
பொங்கு தமிழிற் பூக்கும் அருவி-இசைப்
புயலாய் மருவும் தென்றற் புரவி -தங்கத்

ஆசைக் கருக்கள் தேசக் குயில்கள்-பண்
ஆகிக் களித்து ஆடும் மயில்கள்
ஈசன் பாதம் இசையின் கீதம்-இந்த
இரண்டும் இணைக்கும் மொழியின் நாதம் -தங்கத்

புதியபாரதி.
(இசை ஏற்றபவர்கள் எழுதியவரையும் குறியுங்கள்)

Monday, January 12, 2009

புத்தாண்டில் பிறக்கும் புதுநாடு!

புத்தாண்டில் பிறக்கும் புதுநாடு!

பல்லவி
நாளை வருகுதடா புத்தாண்டு-ஈழ
நாடு இசைக்குதடா தெம்மாங்கு -நாளை
அனுபல்லவி

வேளை குறித்துவிட்டார் விறல்மறவர்-பகை
விரட்டத் தேதியிட்டார் நிலப்புதல்வர் -நாளை
சரணம்

எங்கள் நிலத்துயரம் இனியோடும்-புலி
எழுந்த தமிழீழ இனம்விடியும்
சிங்க எதிரிபடை சிதறிவிடும்-தமிழ்த்
தேசம் எழுந்தகதை நிதம்பரவும்! -நாளை

பாயப் பதுங்கியவர் பாய்ந்தெழுவார்-பகை
பட்ட அடியனைத்தும் மேய்ந்தெழுவார்
தாயின் சுதந்திரத்தை தானுரைப்பார்-வையத்
தமிழர் உளம்மகிழத் தேனுரைப்பார்! -நாளை

Friday, January 9, 2009

லசந்தா மரணம் ஒரு மானுட அழிப்பு..

லசந்தா மரணம் ஒரு மானுட அழிப்பு..


ஆடு இறந்ததென்று
ஓநாய் அழுததென்றால்...

விழுங்கிய தவளைக்காக
பாம்பொன்று
வேதனை உகுத்து
விழிபெருக்கிக் கொண்டால்..

சிறுவனை விழுங்கிய முதலை
அனைத்து முதலைகளையும் கூட்டி
அஞ்சலிக் கூட்டம்
நடத்திக் கொண்டது..என்றால்..

கவ்விய மீனுக்காக கொக்கு
கவலை தெரிவித்துக் கொண்டது என்றால்..

வாளொன்று தான் அறுத்துக்கொன்ற
ஒரு மனிதனுக்கு
வருத்தம் தெரிவித்த
வரலாறு உண்டென்றால்..

லசங்தாவின் மரணத்திற்கான
மகிந்தாவின் கண்டனத்தையும்..
கசங்காமல் எடுத்துக்
கையில் பத்திரப்படுத்துங்கள்..

தமிழனின் இரத்தத்தைக் காட்டி
சிங்களத்தைத் தாலாட்டியபடியே..
காட்டுமிராண்டிக் கொலைகளை
கக்குகிறது மகிந்த அரசு..!

அநியாயத்தை அக்கு வேறாக
அச்சடிப்பவனை
துரத்தி அடித்திருக்கிறது இந்தத்
துட்டகெமுனுக் கூட்டம்..

குற்றவாளியே நீதிபதி
ஆகிக் கொண்டால்..

கொலைகாரனே
கதா காலட்சேபம் செய்தால்..

கற்பழிப்பவனே கண்ணகிக்குச்
சிலை வைத்துக் கொண்டால்..

கருச்சிதைவைச் செய்பவன்
மழலைகளுக்கு
மன்றம் வைத்துக் கொண்டால்..

கசாப்புக் கடைக்காரன்
கொல்லாமைக்குக்
குறள் எழுதிக் கொண்டால்..

அமைச்சனே
ஆட்கடத்தி என்றால்..

எல்லாமும் இந்த
இயமர்களுக்குப் பொருந்தும்...

ஒரு யோசப் பரராசசிங்கம்..
ஒரு திருமலை விக்கி..

வெலிக்கந்தையில் கௌசல்யன்..

சந்திரநேரு, ரவிராசன்,
குமார் பொன்னம்பலம்,
நடேசன், சிவராம், நிமலராசன்.
அற்புதன்,

மகத்துவன் மகேஸ்வரன்..

இந்த மனிதர்களின்
கொலைகளில் எல்லாம்
துட்டகெமுனுக்களும்,
ஒட்டர் எட்டப்பர்களும்
நீக்கமற நெளியும்
கொத்தும் பாம்புகளாய்...

கொப்பளிக்கும் கொடும் விசங்கள்
அப்பழுக்கில்லாத சால்வைகளாய்..

கொலையாளிகளை பிணையில் எடுத்து
வெளிநாடுகளுக்கு
அனுப்பி வைத்தன இந்த
விபச்சாரங்கள்..

லசங்கா விக்கிரமசிங்கே என்ற
அசையா மானிடம் இந்தக்கிழமை
மட்டும் அசையாமல் இருப்பான் ஆகில்..

மகாராசா தொலைக்காட்சியை விழுங்கிய
மலைப்பாம்புகள் தெரிய வந்திருக்கும்,

ஆசனங்கள் அகற்றப்பட
ஓடும் வண்டியில்
கால்கள் இல்லாமல் கட்டில் இல்லாமல்
வன்னியில் இருந்து வந்த
அந்த வைத்திய வாகனங்களின்
வடிவுப் படங்கள்
வரலாறு படைத்திருக்கும்..

லசந்தா இந்த வரலாற்றின்
நிசங்களின் நிறம்..

சிகப்புச் சால்லை மகிந்தா
தொலைபேசியில் எடுத்துத் திட்டியவை
எல்லாம் ஒலிப்பதிவில் இருக்கிறது..

கோத்தபாயா பலகோடிபணம் கேட்ட
வழக்கு இன்னும் நிலுவையில்
இருக்கிறது..

மகிந்தக் கூட்டம்..
கொலைப் பூதங்களின்
கழுகுக் கூட்டம்..

இரண்டாயிரத்து ஒன்பது தையெட்டு
முரண்டு பிடித்த ஒரு
மொக்கனின் ஆட்சிக்கு
முகமூடி கிழிந்திருக்கிறது..

சிங்களத்தின் அடுத்த வலையில்
மங்கள நிற்பதாக கொழும்புச் செய்திகள்
இன்று மடை திறந்து கொண்டன..

மனோ கணேசனுக்கும்
முதலைவாய் திறந்தே இருக்கிறது..

புத்தப் பிறப்புக்களுக்கு
அகிம்சை இம்சையாயிருக்கிறது..

காலா காலத்திற்கும்
காலம் கடந்தும் இந்த நாள்
கணிப்பில் இருந்து கொண்டே இருக்கும்!


-சுந்தரபாண்டியன்

Thursday, January 8, 2009

விசங்களால் வீழ்த்தப்பட்ட லசங்கன்

விசங்களால் வீழ்த்தப்பட்ட லசங்கன்..
-----------------------------------

லசங்கா..

விசங்கள் இம்முறை வென்றதடா..

புசங்கள் உயர்த்திய ஊடக மனிதா-நீ
கசப்போக்கிலிக் காடையால் மடிந்தாய்..

புத்தனை இன்று யுத்தன் ஆக்கிய
மகிந்தன் கூட்டம்
பட்டியிலிருந்து அவிழ்க்கப்பட்ட
புடையன்களாய்..

லசங்கா.. லசங்கா...நீ
உசர ஏற்றிய உண்மை ஊடகம்
கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில்..

காடைகளின் ஆட்சியில் பாடைகளின்
ஊர்வலம் இன்னும் பவனிகளாய்..

போர் என்ற போதையில்
பக்;சாக்களின் வாதைகள்
காட்டுமிராண்டிகளாய்க்
காட்சி விடுப்பது என்னவாக இருக்கும்?

இராணுவ ஆட்சியொன்றின்
இரத்தவெறி ஆரம்பம்
சிங்களவனுக்கும் கொடுக்கப்படுகிறது..

உன்குருதி எடுத்த
இரத்தக் காட்டேரி..
நாற்பத்தியெட்டு மணிகளுக்கு
முந்தியதாய்
மகாராசா தொலைக்காட்சிக்கு
மரணம் கொடுத்தது..

மகிந்த சகோதரர்கள்
நாய்களும் பேய்களுமாய்..
மரணக்குழி கிண்டுவதை
நீ மார்தட்டி உரைத்தவன்..

காசுகளை கொள்ளையடித்த
ராஜபக்சாக்கள்
வீசிய அரிவாள்களில்
நீயும் விழுந்துவிட்டாய்..!

வன்னித் திடலில்
கன்னற் சிறுசுகளோடு
அன்னை தந்தை அயலோடும்
ஏவுகணை வெடியில்
இரத்தக் குளத்தில் கிடப்பதை
சமநேரம் பார்த்துத் துடிக்கிறேன்..

தமிழனின் விடுதலைக்கு நீயும்
தந்த உயிரைச் சேர்த்துக் கொள்ளுகிறோம்..

பொறுக்க முடியாத
பூகம்பமாய் தர்மம்
பொங்கி நிற்கிறது..
பீறும் நெருப்பு
வீறு பூக்கும் நேரம் பார்;க்கிறது..

நாளையல்ல
இன்றே விடைதெரியும்..லசந்தா
விக்கிரமசிங்கே

உண்மை ஊடகங்களின் கண்ணீர்
உன் பூவுடலின் மேலும்
பொழிந்தபடி..
உனக்கு விடை சொல்லுகிறோம்..

சென்றுவா தர்மம் வெல்லும்..!

சுந்தரபாண்டியன்..

Wednesday, January 7, 2009

கருணா அவர்களுக்கு

கருணா அவர்களுக்கு,

காட்டிக் கொடுத்தாலும் கொடுத்தீங்க..
களங்கமில்லாத ஒரு பழி
காக்கை வன்னியனுக்குப் பின்னால்
எழுதப்படுகிறது..
கருணா அம்மான்..!

கிளிநொச்சி கைப்பற்றியதிற்கு ஒரு
தமிழனின் உதவி
பின்னால் இருக்கிறதென
மகிந்தக் கூற்று மடியிறக்கிக் கொண்டது..

ஆனால் என்ன..?

சிங்களப் படையின் வெற்றிக்குப் பின்னால்
ஒரு தமிழனா?

யார் சொன்னது?

இருநூறு பேருடன் வந்த கருணாவினால்
எதுவும் நடந்துவிடவில்லை என்கிறார்
சரத் பொன்சேகா..!

போக முடியாத இடமெல்லாம்
போகும்வழி நீங்கள்தான் காட்டியதாக
இருக்கும் தடயங்கள் எல்லாவற்றையும்
பொன்சேகா போட்டு உடைத்துவிட்டார்
போலத் தெரிகிறதா..?

உப்பாற்றக்குப் பின்பக்க வழிசொல்லியது
நீங்கள்தான் என்கிறார்களே..!

உங்கள் காட்டிக் கொடுப்புக்குப் பின்னாலேதான்
சிங்களக் காட்டேரிகளின் சீற்றம் தொடங்கியதாக
ரணில் மாத்தயா இரண்டறக் கலந்துரைத்தவையும்
இந்த நாட்களில்தான் வந்திருக்கிறது..

மகிந்த மெத்தையில் படுத்துறங்கும்
நாய்க்குட்டி அல்லவா நீங்கள்?

பிரபாகரன் சரித்திரம் முடிந்துவிட்டதாக அல்லவா
உரமேறிய உங்கள் பேச்சு உலுப்பிவிட்டிருக்கிறது..

போனாலும் போனீங்க..

எட்டப்பன் கோட்டுக்கு மேலாக
எம்புகிறதே உங்கள் குரல்..

ஓடுகிற கட்டபொம்மன் இல்லை
கரிகாலன் என்கின்ற பிரபாகரன்..

இன்னும் சிலநாட்கள்..
சிங்களத்திற்கும் உனக்கும்
சேதிவரும் என்கிறார்களே..!

நானும் பார்த்திருக்கிறேன்..
நீயும் பார்த்திரு..

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
பின் அந்தத் தர்மம் வெல்லும்...

இப்படிக்குச்
சுந்தரபாண்டியன் எழுதுவது..
-நன்றி சுந்தரபாண்டியன் இணையத்தளம்.

Tuesday, January 6, 2009

சிறப்பு வாழ்த்து!


சிறைவளரும் சீமானே உனக்குச்
சிறப்பு வாழ்த்து!


சீமானே நீங்களொரு தூய மானே
செந்தமிழ் நாட்டுக்கோர் விடிவாம் வெள்ளி
தேமாவாய்ச் சொல்லிவந்த செம்மல் எல்லாம்
தேசத்தை அழிப்பதற்கே தீனி தந்தார்
பூமாரி வைத்ததெலாம் பேச்சு இல்லை
பொய்யரெலாம் காட்டுவதே பேச்சு ஆகும்
ஆமாநீ சிறைவாழும் பறவை யென்றால்
அடித்துவிட்டாய் தீயர்மனம் அதனால் தானே! -புதியபாரதி

Monday, January 5, 2009

பழியாய் இந்தியம்!

பழியாய் இந்தியம்!

சிவராமைக் கொலைசெய்யப் பயன்பட்ட
வாகனம் சித்தார்த்தனுகு உரியது..

ஆனால்..
சிவராமின் கொலைஞனை
சித்தார்த்தனுக்குத் தெரியாது..

சிலநேரம் சிலதுகள்
காதில் பூக்கள்..?

சிவராமின் பல இலட்சப் பெறுமதியான
தொலைபேசியை வைத்திருந்தவனைக்
கொலைகாரன் என்றது காவற்துறை..

சிறையில் வைத்துப்
பிணையைக் கொடுத்து
கறையைத் துடைத்தது காட்டாட்சி..

அவனை இப்பொழுது
காணவில்லை என்கிறது
கடுதாசிச் சட்டம்..

சிலநேரம் சிலதுகள்
நீதிப் புழுக்கள்..!

இன்றைய இலங்கப் போரில்
மலமாய் இருக்கும் இந்தியத்திடலே
சிவராமின் கொலைக்கும்
சித்தாந்தம் கொடுத்தது என்பது
சில தளங்களில் வந்து போனது..

எல்லா தமிழர் மாமனிதர்
கொலைகளுக்குப் பின்னாலும்
இந்தியக் கிடங்கு..

சமநேரத்தில்..
புலிகளின் போரைப் பார்த்துத்
தானும் தெளிந்து கொள்ள
சிவில் உடையில்
இந்தியக் கடற்படை
வன்னிக்கு வந்திருப்பதாக
தமிழகச் செய்திகள்...

தோற்றோடிய அமைதிப் படை
இப்பொழுதுதான் தேர்வு எழுதுகிறது..

தமிழன் சொத்தான கச்சதீவை
தமிழர்களின் கொலைக்காக
சிங்களத்திற்குக் கொடுக்கப்பட்டதாக
இன்றைய நாட்கள் எழுதப்படுவதற்கு
எதிர்காலம் தெரியாதிருந்த ஒரு
அரசியல் வாதியாக இந்திரா அம்மை
இன்று எழுதப்படுகிறார்..

இவருக்காக-இவரின்
மரண ஊர்வலத்திற்காக
தமிழீழம் முழுவதும்
வாழைகள் தோரணங்கள் கட்டி
கண்ணீர் சிந்தியவர் நாம்.. என்பது
இந்தியம் விளங்கப் போவது இல்லை..

ரசீவ் கொலையாளி கொழும்பில் இருந்தோ
அல்லது அமெரிக்காவில் இருந்தா
அழைக்கப்பட்டார்கள் என்பதற்கு
ஆராய்கின்றன தமிழகப் பத்திரிகைகள்..

ரசீவைக் கொலைசெய்தது யார்?

சோனியாவுக்கு இப்பொழுது
விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது..

சு.சுவாமியும் ச.சுவாமியும்
குறுக்கு விசாரணைகளில் வந்துபோன
இரண்டு ஆசாமிகள்..

ஆனால் இன்னும் புலிகளைச் சொல்லியே
அரசியல் நடத்துகின்றன
அடிமைச் சாமிகள்..!

கொலைஞரைக் கைக்குள் வைத்துக்கொண்டு
வலையிலே அப்பாவிகளைப் பிடித்திருக்கிறது..
இந்திய ஆலவட்டங்கள்..

விடுதலைக்கு நேரம்வந்தும்
கிடுக்கிப் பிடியில் சிறையின் மடியில்
எத்தனை சித்திரங்கள்..

இந்தியத்தின் உண்மையான எதிரி யார்?

இலங்கமா? தமிழீழமா?

தமிழீழம் தமிழகத்தின் சொத்து!

இலங்கம் சீனாவுக்கும்
பாகிஸ்தானுக்கும் சொந்தமானது..

இந்தியம் தெரிந்து கொள்ளாதவரை
சரிந்து விழுவதைத் தவிர
வேறு வழியில்லை..

-சுந்தரபாண்டியன்..

நிசங்களின் நிறங்கள்..!

நிசங்களின் நிறங்கள்..!

அப்புகாமி பதட்டமாகவே காணப்பட்டார். 'சுதுமெனிக்கா..சுதுமெனிக்கா...'என்ற அவரது குரல் கூடமெங்கும் அலறிவீழ்ந்தது..

சுதுமெனிக்காவின் கண்கள் அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்க.. 'இப்ப என்னப்பா செய்கிறது..யார்சொன்னது சரத்தைக் காணவில்லையென..' மனைவியின் கேள்விக்கு மறுமொழி சொல்ல அவருக்கு நேரம் இருக்கவில்லை.
.
அப்புகாமியும் ஆடிப்போய் விட்டிருந்தார்.
'என்ன.. தேசத்திற்காகப் போராட என்றே சரத் போனவன்.. எங்களுக்கு ஒரே பிள்ளை என்றாலும் படையிலே சேர்; சேர் என்று மன்றாடினாங்கள்..மாதா மாதம் சுளையான காசு என்று ஆசைவார்த்தை காட்டினாங்கள்.. இப்போ சரத்தும் போய்விட்டான்..' அடக்கிவந்த அழுகை வெடித்து விழுந்தது..

'இவங்க.. யாருக்காகப் போராடுகிறாங்கள் ..'என்றாள் சுதுமெனிக்கா..

'அதுதானே.. இந்தியா பாகிஸ்தான் போரா.. அல்லது சீனா இந்தியப் போரா..நாட்டுக்கு நாடு சண்டை பிடிக்கிறமாதிரி நாட்டுக்குள்ளேயே சண்டை நடந்துகொண்டிருக்கு..'

இதுகளைக் கதைக்க இப்ப நேரமா? சரத் இப்ப எங்கையெண்டு பாருங்க..அல்;லது யாரிட்ட எங்க போய்க் கதைக்கிறதெண்டு பாருங்க.. என்றாள் சுதுமெனிக்கா..

அநுராசிறீ என்ற ஒருவன்தான் ரெலிபோண் செய்தான்..கொஞ்சம்பொறு அவனுக்குப் போண்பண்ணிப் பார்க்கிறன்...
0000
'யார் கதைக்கிறது..

நான் இங்கே அனுராசிறீ கதைக்கிறன்...'

'நான் அப்புகாமி தம்பி.. சரத்தின் அப்பா.. சரத்தைப் பற்றி நீங்கள் சொன்ன செய்தி உண்மையா தம்பி...' மல்லி..மல்லி..என்று அழுதழுதுகேட்டார் அப்புகாமி..

இப்ப ஒரு கிழமைக்குள் ஆயிரத்தி ஐநூறு இராணுவம் செத்தும் காயப்பட்டும் போய்விட்டது மாத்தயா.. காயப்பட்ட பல நூற்றுக்கணக்கான இராணுவம் செயவர்த்தனபுர வைத்தியசாலையிலும், இன்னும் பல வைத்தியசாலைகளிலும் நிரம்பி வழிவதாகச் சொல்கிறார்கள். காயப்பட்டவரைப் போய்ப்பார்க்க விடுகிறார்கள் இல்லை. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய சிகிச்சை பெறும் படையினரைப் பார்க்கவெண்டு வந்தவர் சனம் முகத்தைத் திருப்பியபடி நின்றதால் ஒருவரோடு ஒன்றும் கதைக்காமல் திரும்பிவிட்டார் என்று செய்திகளில் வந்திருக்கு.. மாத்தயா..

.. அப்ப சரத்தைப் பற்றி நீ சொல்கிற செய்தி பொய்யாய் இருக்காதா என அழுதபடி கேட்டார் அப்புகாமி..

'அதுதான் சொல்கிறேன்..வைத்தியசாலையில் கிடக்கும் ஆமிக்காரர் பலர் மூளை குழம்பியபடியும் சிலர் கிடக்கிறார்கள்.. சஞ்சலத்தோடு கதைக்கிறார்கள்.. மன அழுத்தம் அவர்களை வாட்டுகிறது. போரில் இறப்பதை விட அங்கு நடக்கும் கொடிய காரியங்கள் மனதை இடிப்பதாக ..அவர்களைச் சந்திப்பவர்களிடம் கூறுவதாக இணையத்தளங்களின்வருகின்றன. அப்படியான ஒருசெய்தியில் அக்கராயன் போரிலே காயப்பட்ட பலரை சில பத்திரிகைகள் பேட்டிகண்டு எழுதியிருக்கிறார்கள்..அதனூடாகத்தான் காலி அப்புகாமியின் மகன் சரத்தும்...'

'என்ன சொல்தம்பி .. என்புத்தாவுக்கு என்ன நடந்தது...'அலறினார் அப்புகாமி.

'செயவர்த்தனபுர ஆஸ்பத்திரி படையினர் வைத்தியப்பிரிவில் விசாரித்துவிடுங்கள்..'என்று சொல்லியபடி அனுரசிறீ போணை வைத்துவிட்டான்.
0000
'என்ன...' என்று கேட்டாள் சுதுமெனிக்கா.

அநுரசிறீயும் கேள்விப்பட்டதைத்தான் சொல்கிறான். கொழும்பு போவதைத் தவிர வேறுவழியில்லை. இப்ப..காசுக்கு எங்க போறது என்றார் அப்புகாமி..

காலி மார்க்கட் கந்தையா மாத்தாயாவுக்கு ஒருக்கால் போன்செய்யுங்க என்றாள் சுதுமெனிக்கா..
ஹலோ..ஹலோ கந்தையா மாத்தயாவா..

யாரது அப்புகாமியா.. என்ன ..என்ன இந்தநேரம்..?

'அடுத்த முறை புகையிலை வாங்கையிக்கை தந்துவிடுறன் மாத்தயா.. என்ரை மகன் படையிலை சேர்ந்து வன்னிப்போருக்குப் போனவன் அங்கை.. அவiனைக் காணவில்லை என ஒரு செய்தி வந்திருக்கு.. இப்ப உடனடியாகக் கொழும்புக்குப் போகவேண்டியிருக்கு..கையிலை சல்லிக்காசுமில்லை.. அதுதான் உங்களைக் கேட்கலாம் என்று...'அழுகையும் அவலமுமாய் இழுத்தபடி நின்றார் அப்புகாமி..'

'அட கடவுளே.. ஒரே புத்தா அல்லவா அப்புகாமி.. உனக்கா இப்படி.. எனக்குத் தெரியும் அப்புகாமி வன்னிப்போர் சாதாரணமானது இல்லையென்று..நீதான் சொன்னாய் படையிலை நிறையச் சம்பளம் கொடுப்பதாக.. சரத் புத்தா விரும்புறான் ஒன்றும் செய்ய இயலாமல் இருக்குது எண்டு.. இப்ப உடனடி அலுவலைக் கவனி அப்புகாமி...

இடைமறித்தாள் சுதுமெனிக்கா 'பஸ் எடுக்க அங்கைதான் வாறம்.. உங்களை நம்பித்தான் வாறம்..'

'இப்பவே புறப்படுங்க..' கந்தையா மாத்தயா போணை வைத்துவிட்டு..பாவம் ஒரே மகன்.. என்று கண்கலங்கினார்...

ஒரு பயணப்பெட்டியில் உடுபிடுவைகளை மட்டும் வைத்துக் கொண்டு கந்தையா புளத் ஸ்டோருக்கு வந்துவிட்டனர் அப்புகாமியும் சுதுமெனிக்காவும்..

கொழும்பு பஸ் இன்னும் அரைமணியில் என்று சொன்னார்கள். விசாரித்தனான்.. உனக்கு ஒன்றும் நடக்காது அப்புகாமி.. நீ.. அப்படி மனுசன்... போய் விசாரித்துவிட்டு உடனே எனக்கொரு போண்கொடு.. பார்த்திருப்பன் என்று ஒரு இலட்சம் ரூபாவை அப்புகாமியின் கையில் கொடுத்தார் கந்தையர்..

கந்தையற்றை மண்ணிலே போர்நடக்குது..என்ரை மகனைப் பார்க்கக் காசு கொடுக்கிறார்..இவன்தான் தமிழன்.. தமினென்றால் இவன்தான் என நினைத்தபடியே..கந்தையரின் இரண்டு கரத்தையும் கைப்பற்றி நன்றிசொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினர் சரத்தின் தாயும் தந்தையும்...
0000
இடம் கொழும்பு பதின்மூன்று கொட்டகேனா.. என்ற கொட்டாஞ்சேனை..
அப்புகாமியின் அக்கா மகள்வீடு..

'...ஹலோ இது கோத்தபாயா கந்தோரா.. நான் இங்கே சுரங்கா பேசிறன்.. எங்க மாமாவின் மகன் ஒருவர் படையிலை வன்னிக்குப் போனவர்..அவர் பற்றிய தகவல் அறிய வேணும் அதுதான்..' அப்புகாமியின் அக்கா மகள் சுரங்கா பாதுகாப்புச் செயலர் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டாள்..

'யார் யார் இறந்தது.. யார்யார் காயம் என்ற விபரங்கள் உடனடியாக எடுக்க முடியாதிருக்கிறது. நூறு பேருக்கை நாம் இப்ப தேட முடியாது.. ஆனால் தகவல் வரும்போது தெரியப்படுத்துறோம்.. விபரம் விலாசம் தொலைபேசி இலக்கத்தைத் தாருங்கள்..' சொல்லிவைச்ச மாதிரியே கந்தோரில் பேசினார்கள்..

பலநூறு இறந்து.. பல ஆயிரம் காயப்பட்டதென தமிழ்நெற் சொல்லுது..இவனென்ன நூறுக்கணக்குப் பேசுறான் என முணுமுணுத்தாள் சுரங்கா..

'இஞ்சை பாருங்க மாமா..இவங்களிட்டை ஒண்ணும் எடுக்க முடியாது.. எனக்குத் தெரிந்த லீடர் பத்திரிகை நிருபர் ஒருவர் இருக்கிறார்..என்ன செய்யலாம் எனக் கேட்கிறன் ..' என்றாள் சுரங்கா... உடனே இலக்கங்களை அழுத்தினாள்..

'நான் சுரங்கா கதைக்கிறன்..மகிந்து.. எனது உறவினர் ஒருவர் படையிலை இருந்து காணாமல் போய்விட்டார்.. அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பதை அறியவேண்டும். செயவர்த்தனபுர ஆஸ்பத்திரியில்..' இழுத்தபடி நின்றாள் சுரங்கா..

'ஓ. சுரங்காவா.. அதையேன் கேட்கிறாய் தங்கச்சி.. காயப்பட்டவங்கடை கதையைக் கேட்கிறதே பெரிய வேதனையாய் இருக்கு... மனநிலை குழம்பியபடி கிடங்கிறார்கள் பலர் .. என்ன நடந்தது என்று தெரியாமல்.. உணர்வற்றுச் சிரிச்சபடி இருக்கும் பலர்.. என்ன பெயர் அந்த ஆமி இளைஞனுக்கு என்று சொல்வாயா..'

'அப்புகாமி சரத்பக்ச , பிறப்பிடம் காலி.. வயது இருபது..போர்முனை அக்கராயன் வன்னி..' என்று தொடர் விளக்கம் கொடுத்தாள் சுரங்கா..

நேற்றைய ஊடகவியலாளர் சிலர் படையினரைச் சந்தித்ததில் சில செய்திகள் வந்திருக்குதான்.. அதிலை வினோத் என்ற படையினன் கொடுத்த சில தகவல்கள் அதிர்ச்சியாய் இருக்கு சுரங்கா..

எந்த ஆஸ்பத்திரி என்று தெரியாது.. மனம் குழம்பிய அவனைப் பல நிருபர்கள் பேட்டி கண்டார்கள்.. இப்ப இரண்டு கிழமையாய் ஆயிரக்கணக்கான இராணுவர்கள் இறந்தும் காயப்பட்டும் கொழும்புக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்..ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் இழுத்து மூடிவிட்டது.. எனது சக்திக்கு ஏற்றவாறு இன்றைய பொழுதை உனக்காச் செலவழிக்கிறன் சுரங்கா என்றபடி நிறுத்தினான் லீடர் நிருபர்.

அப்புகாமியும் சுதுமெனிக்காவும் தொலைபேசிக்கு அருகிலேயே குந்திவிட்டார்கள்..சுரங்கா சாப்பிடச் சொல்லியும் சாப்பிடாதவர்களாய்.. அழுதபடி.. இன்னும் சொல்லப்போனால் பிள்ளைத் துயரம் அவர்களை இப்பொழுது முற்றிலுமாக வாட்டியபடி ..சரத்தின் இளமைப் பராயத்தை எண்ணியபடியே..அழுதழுது ..

தொலைபேசி.. அவசரமாகவே ஒலித்தது..

உடனே வரும்படி அழைப்புக் கொடுத்தார் முத்தெட்டு..
0000
ஆஸ்பத்திரி: இராணுவப்பிரிவு வைத்தியசாலை..நாலாவது வார்ட்.. ஏழாவது கட்டில்..முதுகுப்பக்கம் கட்டுப்போட்டிருக்க கிடக்கமுடியாதபடி கிடந்தான் வினோத்..
எல்லோருமாக வினோத்தின் கட்டிலைச் சுற்றியபடியே.. நின்றிருந்தார்கள்.

வினோத் நான் லீடர் நிருபர்..முத்தெட்டுப் பேசுறன்.. நீங்கள்.. காலி அப்புகாமி சரத்பக்ச என்ற படையினனைப் பற்றிச் சொல்லியதாக ஒரு செய்தி இணையத்தளங்களிலும் பத்திரிகையிலும் வெளியாகி இருக்குதென நினைக்கிறன்.. சரத்தைத் தெரியுமா உனக்கு..

..தெரியும்.. ஆவலோடு கிட்டக் குழுமினார்கள் எல்லோரும்..

எந்தப் போர்முனை எனத் தெரியுமா?

தெரியும் அக்கராயன்குளம்..

'அதிகம் உங்களை வருத்தாதீர்கள்.. நீங்கள் ஆறுதலாக. நினைவுக்கு வருபவையிட்டு நிதானப்படுத்திச் சொல்லுங்கள்..' என்றார் முத்தெட்டு..

'கிளிநொச்சி நோக்கிய நகர்வு என்றார்கள்.. கோத்தபாயவும் சரத் பொன்சேகாவும் வவுனியாவுக்கு வந்து போர்பற்றிய வியூகங்கள் வகுத்தபின்பு இந்தப் போர் நடப்பதாகவும் எங்களுக்கு கிளிநொச்சியின் எல்லை விளம்பரப்பலகையோடு நின்றாவது படம் எடுத்து அனுப்புங்கள் என்றுதான் அனுப்பி வைத்தார்கள்..'

அப்பொழுது..?

சரத்தை எனக்குத் தெரியும். போர்முனை நண்பர்கள். நான் அம்பலாந்தோட்டை.., பக்கத்துப் பிரதேசங்கள் என்றபடியாலும் ஒரு பாசம்..எனக்குப் பின்னால் வந்த நிரையில் வந்து கொண்டிருந்தான் அவன்..புறம்படும்போது சைகை காட்டினான் அவன்..

அப்புறம்..?

ஒரு நூறு மீற்றர்தான் சென்றிருப்போம்..முதல்நிரை முன்னுக்குப் போக அனுப்பினார்கள்.. மின்னுவது போலத்தான் தெரிந்தது.. வெடிச்சத்தங்கள் காதைப் பிளந்தன.. எங்கிருக்கிறோம் என்ன செய்கிறோம் என்பது கூட சிந்திப்பதற்கிடையில் முன்நிரையில் சென்றவர்கள் ஐயோ அம்மே என விழுந்து கொண்டிருந்தார்கள்.. என்னால் முன்னேறிச் செல்ல முடியவில்லை...திரும்பி ஓடினேன்..

என்ன நடந்தது..?

வந்த வெளி அனைத்திலும் பிரேதங்கள்.. சிறீலங்கா ஆமி செத்து விழுந்துகொண்டிருந்தன.. இருபத்தி ஐந்து வரைக்குமான பிரேதங்களை நான் பார்த்தபடி பின்னோக்கி ஓடினேன்..

சொல்லுமல்லி என முன்னுக்கு நகர்ந்தார் அப்புகாமி..

சட்டென்று கவனித்தேன்.. என்முன்னே நிலத்தில் கிடந்த அந்த சக படைஞனைப் பார்த்தேன்..
என்ன..? சுதுமெனிக்கா அழுதாள்..

ஆமாம் அவன்தான் சரத்.. உணர்வற்றுக் கிடந்தான்.. தொட்டுப் பார்த்தேன். தேகத்தில் சூடு இருந்தது.. எனது அதிகாரி பந்துல முன்னால் நின்றார்.

இந்தா மண்வெட்டி உடனடியாகப் புதை

மாத்தயா.. தேகத்தில் சூடு இருக்கிறது.. எப்படி..?

அதுதான் சொல்கிறேன்..நான்சொல்கிறேன்.. நீ.. புதை..

நான் இழுத்துக் கொண்டே வருகிறேன்..

நீ.. உயிரோடு திரும்பப் போகிறாயா? அல்லது..

அழுதழுது அவனைப் புதைத்தேன்.. அவனது தேகச் சூடு அவன் இறந்திருக்க முடியாது என்றே கருதுகிறேன்..ஆனால் அவனும் வன்னிப் புதைகுழியில்...
வினோத் விக்கி அழுதான்..

அவன் மட்டுமா எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள்.
0000
யாரு கந்தையா மாத்தயாவா ..நான் அப்புகாமி...என்ரை பிள்ளை போயிட்டான் மாத்தயா.. அவன் இறந்ததிற்கான சாட்சியை நேரிலை பார்த்திட்டன்..
சொல்லு சொல்லு இஞ்சை காலியிலை பதட்டமாயிருக்கு..வன்செயல் வெடித்தாலும் வெடிக்கலாம்.. வன்னிப் போரிலை பல நூறு ஆமி இறந்திட்டுது அப்புகாமி..

ஐம்பத்தி யெட்டில் இருந்து இந்த வன்செயல் மூலம்தானே தமிழன் போர்செய்ய வெளிக்கிட்டவன் எனப் பொருமினார் அப்புகாமி உடனை வெளிக்கிடுறன் மாத்தயா...?

நான் இருந்தால் சந்திக்கிறன் என்றார் கந்தையா மாத்தயா என்ற கந்தையர்..

ஒன்றும் நடக்காது. பயமில்லாமல் இருங்கோ இங்கை நாங்கள் நாலுபேரும் வந்துவிடுகிறோம்..
0000
காலி கந்தையா புளத் ஸ்டோர் முன்பாக அப்புகாமி, சுதுமெனிக்கா, சுரங்கா, முத்தெட்டு, இன்னும் பல சிங்களவர்கள்..
முத்தெட்டுப் பேசினார்.. 'தமிழர்கள் வர்த்தகம் செய்யத்தான் வந்தவர்கள் அல்ல, எங்களோடு வாழவும்தான் வந்தவர்கள். கொஞ்சமென்றாலும் உணர்ந்து கொள்ளுங்கள். காலிமுகத்திடலில் போட்டு அடித்தோம். பாணந்துறையில் கோவிலுக்குள் ஐயர் எரியூட்டப்பட்டார். செஞ்சோலைக் குண்டு, நவாலித் தேவாலயம், ஆயிரம் இரண்டாயிரம் இந்துக் கோவில்களை அழித்துப் போட்டம்.., இப்பொழுது தமிழனைக் கடத்திக் கடத்திக் கொலைசெய்கிறம்.. கப்பம் வாங்கிறம்.. இதெல்லாம் எங்கைபோய் முடியும் என நினைக்கிறியள்..இதெல்லாம் தமிழ்நாடு உருவாக்கும் தடயங்கள்..தமிழரை ஆதரியுங்கள்.. அவனும் இந்நாட்டு அரசியல் சாசனத்தின் பிள்ளைகள். அப்பொழுதான் உங்கள் பிள்ளைகள் போரில் மடிவது நிறுத்தப்படும்..'
பொல்லுகளோடும் தடியோடும் வந்தவர்கள் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்கள்.!
(இதுவொரு நிசங்களுக்கு நிறம்சேர்த்த கதை)
-தீவகன்
(நன்றி: முழக்கம்)

Sunday, January 4, 2009

நீறும் நெருப்பும்

நீறும் நெருப்பும்

விடியற் பூக்கள் மலரும் நேரம்
விழித்து எழடா தோழா!
அடிமை விலங்கு உடையும் நாட்கள்
ஆர்த்து எழடா தோழா!

அழுவதற் கில்லை எங்கள் தேசம்
எழுவோம் நாங்கள் புயலே!
விழுவதற் கில்லை சுதந்திர தாகம்
வேங்கை வெல்லும் குயிலே!

தோல்விகள் எதுவும் தோல்விகள் இல்லை
விலங்கு உடையும் ஒருநாள்!
சேல்விழி சிறுத்தை ஆகிய தேசம்
சுதந்திரம் எழுதும் திருநாள்!

சிதையில் தோழன் மடிவதும் உண்டோ
சிறுத்தைக் கேது மரணம்!
விதைப்பின் உயிர்கள் வீழுவ தில்லை
விடியல் எங்கள் சரணம்!

உண்மைகள் நீறு பூப்பதாய் இருக்கும்
ஒருநாள் நெருப்பாய் மாறும்
எண்ணாப் பொழுதில் எகிறும் புலிகள்
எழுதும் வெற்றி சீறும்

போவார் பின்னர் புலியாய் வருவர்
பிறக்கும் களத்தின் நெருப்பு
தாவும் படையாய் தடைகள் உடைப்பார்
தருவார் நிலத்தின் இருப்பு!

அந்நியன் படையில் அடுக்களை தின்னி
அரசொடு மலிந்தான் ஆயின்
இந்நாள் புலிகள் எழுதும் கரங்கள்
எழுதும் நிலத்தின் சுரங்கள்..

-புதியபாரதி
(நிலப்பூக்கள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

Saturday, January 3, 2009

நம்பிக்கை

நம்பிக்கை..!
நிலம் விட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது..
பலம் இழக்கப்பட்டதா?

காட்டிக் கொடுப்பவன் ஒருவனாலேயே
இராணுவம் காலை நீட்டிக் கொண்டிருப்பதாக
இராசபக்ச நன்றி உரையில்
நாக்கைக் காட்டினார்..

உலக வானொலி தமிழில் இந்தச்செய்தி
எடுத்துவரப் பட்டது..

கருணாவைப் தாமே பிரித்தவர் என்றும்..
அதனாலேயே இந்த வெற்றி என்று
அளந்திருக்கிறது
ஐக்கிய தேசியக் கட்சி..!

கிளிநொச்சியில் சிங்கக்கொடி
ஏற்றப்பட்ட காட்சிகள்
ரூபவாகினியில் வந்த அதேநேரம்..
தமிழனைக் கேவலப்படுத்தும்
கோலங்களும் கூடவே
கொடுக்கப்பட்டன..

உலகம் முழுவதும் இடிபட்டிருக்கிற
தமிழினத்தை நோக்கி..
அடிபட்டுப் போக வேண்டாமென
அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது..

ஓயாத அலைகள் ஒன்று, இரண்டு, மூன்று
எடுத்துவந்த புலிகளுக்கு
நான்காவது எம்மாத்திரம் என்கிறது
நாடறிந்த ஆய்வுக்களம்..

பிணத்தைக் கற்பழித்த பேய்ப்படை
கணத்தில் உலகமெலாம் பரவிய
காட்சியைக் கண்டோம்..

பார்க்காதவர்கள் தளங்களில் பாருங்கள்...

புலிப்பெண்ணாள் ஒருத்தியின்
நிர்வாணச் சடலத்தின்மீது
அம்மட்ட.. என்று
பச்சைத் தூசனத்தில் பாட்டுப்பாடுகிறான்
அந்தப் படைஞன்..

இன்னும்..
காட்டிக் கொடுப்பவர்களால்
கூட்டிக் கொடுப்பதைக்
காலம் எழுதுகிறது..

ஓட்டி ஓட்டி இழுத்துச்செல்கிறது
ஓடிவரும் வெள்ளை வாகனம்..

கடந்த ஒருகிழமையில் மட்டும்
பதினாறு தமிழர் இறக்க, ஐம்பது வரையானர்கள்
வான்தாக்குதலில் காயப்பட்டார்கள்..

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்
புலிப்படை என்று புத்தகம் எழுதாதீர்கள்..

தங்கள் கையில்
தமிழன் எடுத்த
நம்பிக்கைப்போர்..இது..

உங்கள் நம்பிக்கை இழக்காதிருக்கும்வரை
நாடு எழுந்துகொண்டே இருக்கும்..!

நம்புவோம்.
காலம் பதில் சொல்லும்..
-சுந்தரபாண்டியன்.

Friday, January 2, 2009

கிளிநொச்சி வரும் சிங்கள இராணுவம் திரும்பிச் செல்லுமா?

கிளிநொச்சி வரும் சிங்கள இராணுவம் திரும்பிச் செல்லுமா?


நிலவரம்


'வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறிவரும் சிறிலங்கா இராணுவத்தினரை மீளத் திரும்பிச் செல்ல விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் தமிழ் மக்கள் போராடி வருவதாக' தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அண்மையில் அவுஸ்திரேலிய வானொலிக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார்.

சோர்ந்து போயுள்ள புலம்பெயர் தமிழ் உறவுகளை உற்சாகப்படுத்தக் கூறப்பட்ட வார்த்தையே அதுவென நினைத்திருந்த பலர் தற்போது வன்னிக் களமுனைகளில் இருந்து வருகின்ற சேதிகளை வைத்து அந்த வார்த்தைகள் யதார்த்தமானவையே என நம்பத் தொடங்கியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தாம் தந்திரோபாய ரீதியாக இடங்களை விட்டுப் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றோம் எனக் கூறிய போது பரிகாசம் செய்த சிங்கள இராணுவத் தலைமை தற்போது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து நிற்கின்றது.

கடந்த 16 ஆம் திகதி முதல் கிளிநொச்சி மற்றும் கிளாலி கள முனைகளில் நடைபெறும் மோதல்களில் இரண்டு நாட்களில் 170 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். சுமார் 50 வரையான சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டும் உள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயத தளபாடங்களின் எண்ணிக்கை தனி.

கிளாலிச் சமரை விட கிளிநொச்சி மாவட்ட எல்லைக் கிராமங்களான புலிக்குளம்இ குஞ்சுப்பரந்தன்இ மலையாளபுரம்இ முறிகண்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற சமர்களிலேயே படையினருக்கும் பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கே 130 வரையான இராணுவத்தினர் கொல்லப்பட்டு 300 பேர் வரையானோர் காயமடைந்தும் உள்ளனர்.

இதேவேளைஇ 22 ஆம் திகதி இரைணமடுஇ உருத்திரபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மோதல்களில் 100 இராணுவத்தினர் வரை கொல்லப்பட்டும்இ 250 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். இது தவிரஇ படையினர் கைப்பற்றியிருந்த சுமார் 2 கிலோமீற்றர் நீளமான பிரதேசமும் கூட மீட்கப் பட்டன.

வழக்கம் போன்று தமது இழப்புக்களை மறைப்பதற்கு சிங்களப் படைத்துறைத் தலைமை பகீரதப் பிரயத்தனம் செய்த போதிலும் அதனையும் மீறி செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்து விட்டன. யுத்த வெற்றி தொடர்பான சிங்கள மக்களின் மாயை இதனையடுத்து படிப்படியாக விலகத் தொடங்கியிருக்கும் என நம்பலாம்.

டிசம்பர் 10; ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று புதுமுறிப்பு மற்றும் அறிவியல்நகர் பகுதிகளில் இருமுனைகளில் படையினர் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். விடுதலைப் புலிகள் நடாத்திய பதில் தாக்குதலில் 120 பேர் பலியானதுடன் 200 பேர் வரையான இராணுவத்தினர் காயமடைந்தும் இருந்தனர். இராணுவத்தினரின் 12 உடலங்களும் கூட கைப்பற்றப் பட்டிருந்தன.

இதனையடுத்து கிழக்கில் இருந்து மேலதிகமாக 500 துருப்பினர் அவசர அவசரமாக வன்னிக் களமுனைக்கு வரவழைக்கப் பட்டிருந்தனர். ஆனால்இ அண்மைய சமர்களில் இதைவிட அதிகமானோர் களமுனையில் இருந்து அகற்றப் பட்டிருக்கின்றனர்.

புலிகள் தற்போது தான் தமது எதிர்த் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கின்றார்கள். அதுவும் முழுமையாக இன்னமும் ஆரம்பிக்கவில்லை. அதற்கே இப்படி என்றால்? இனிவரும் நாட்களைக் கற்பனை பண்ணக் கூட சிங்களப் படைத்துறைத் தலைமை விரும்பாது.

இதேவேளைஇ நாளாந்தம் போர்முனையில் காயப்படும் படையினரை வைத்தியசாலைகளில் பராமரிப்பதில் சிங்கள தேசம் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அறிகுறிகள் தோன்றியுள்ளன. கிடைத்துள்ள தகவல்களின் படி தற்போது அநுராதபுர வைத்தியசாலையில் 700 வரையான படையினரும் கொழும்பில் உள்ள படையினருக்கான மருத்துவமனையில் சுமார் 700 பேர் வரையானோரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இவை தவிர கொழும்பு தேசிய வைத்தியசாலைஇ ஜெயவர்த்தனபுரஇ ராகம மற்றும் கழுபோவில வைத்தியசாலைகளில் 565 பேரும் உள்ளனர். ஆக மொத்தம் சுமார் 2000 பேர் வரை உள்ளனர். இத்தொகை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.

இதுதவிர வவுனியாஇ பலலி தள்ளாடி இராணுவமுகாம் மன்னார் வைத்தியசாலை என பல இடங்களிலும் காயமடைந்த படையினர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அனைத்தையும் கூட்டிப் பார்த்தால் சுமார் 5000 படையினராவது கடுமையான காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என ஊகிக்கலாம். அரசாங்கம் கூறுவது போன்று யுத்தத்தில் வெற்றி பெற்று வரும் நிலையிலேயே இவ்வளவு சேதங்கள் என்றால் யுத்தத்தில் தோல்வியடையப் போகும் அடுத்த கட்டத்தில் என்னவாகும் என்பதை ஊகிக்க முடிகின்றது.

இத்தகைய பின்னணியில் திரு. நடேசன் அவர்களின் கருத்தை மீண்டும் ஒருமுறை வாசித்தால் பல விடயங்கள் புரியும்!

info.tamil.com

புலிகள் எதற்குப் பின்னே

இன்றையதினம்
படித்ததில் கிடைத்தவை இவை

புலிகள் எதற்குப் பின்னே
நடந்தார்கள்..?

இராவணன் தோல்விக்கு
விபீஷணன் காட்டிக் கொடுத்தான்..

கட்டபொம்மன் தோல்விக்குக்
எட்டப்பன்..காட்டிக் கொடுத்தான்..

பண்டார வன்னியனுக்கு அவன்சாதி
காக்கை வன்னியன் குழிபறித்தான்..

சங்கிலினுக்கு இன்னொரு காக்கை
என்கிறது கண்டவர் சரித்திரம்..
ஊமைத்துரை என்பதே
கேள்விப்பட்ட பெயர்..

சிவன்பூமி இலங்கையின்
செறிந்த வரலாற்றில்
இன்னொரு பக்கம்..இது..
தமிழ் மன்னன் தேவநம்பிய தீசனின் தந்தை
மூத்தசிவன்..

மூத்தசிவன் மைந்தன் தேவநம்பிய
தீசன் மகன் கோத்தபாயா

கோத்தபாயா மகன் துட்டகைமுனு..
சோரம்போன தமிழ்ச் சாதியின் சொந்தங்கள்..

இன்றுவந்த இராசபக்ச கதையிது..
கலிங்கமன்னனை வீழ்த்தி
யாழ்ப்பாணம், வன்னி, பொலநறுவையைக்
கைப்பற்றிய சிங்கள மன்னர்போல்
கிளிநொச்சியைக் கைப்பற்ற முன்னாள் புலியொருவன்
வழிசொன்னான் என்கிறது இன்றைய
கொழும்புச் செய்திகள்..

இதைப் புலத்து வானொலிகள் இன்று
பலமாய் உரைத்தன..

இன்றைய தமிழர் போராட்டத்தில் பிறந்த
இரண்டு ஒட்டுக்குழுக் காக்கைகள்..

அந்நியப் படையை நம்பி இருக்கும்
ஆலகால விஷங்கள்..

யாழும் கிழக்கும் கப்பம் கொலை, கற்பழிப்பு என்று
பாழும் இயமன்களால் பதம் பார்க்கப்படுகிறது..

இன்றைய வீழ்ச்சியில் இவர்கள்
பழிகாரர்களாக..

எட்டப்பனால் உருளும் இனத்தை
அந்நியன் சரித்திரம் இனியும் எழுதுமா?

புலிகள் எதற்குப் பின்னே நடந்தார்கள்..
இது தோல்வியா? திருப்புமுனையா..?

இரண்டும் புலிகள் கையில்..

-சுந்தரபாண்டியன்...

Thursday, January 1, 2009

தமிழ்மணம் சிறந்து வாழ்க!

தமிழ்மணம் சிறந்து வாழ்க!
(தேவன்மயத்திற்கு எழுதப்பட்ட பதில் இது-திருத்தம்)

தமிழ்மணம் கமழ வேண்டும்
தாரணி புகழ வேண்டும்
கமழுல கெல்லாம் நின்று
கற்றவர் குழும வேண்டும்
அமி;ழ்தினும் இனிய நீதி
அகிலெனப் பரவ வேண்டும்
சுமையெலாம் இறக்கி வைக்கும்
சுமைதாங்கி ஆக வேண்டும்!

உன்றனைக் கண்டேன் உள்ளம்
ஒளிபெற நின்றேன் வையப்
பொன்தடம் பதிந்த தாலே
பூமியை வென்றேன் என்பேன்
மன்பதை மனித மாண்பு
மகத்துவத் துள்ளோர் எல்லாம்
இன்பொடு ஒன்றாய் நின்றார்
இதுபுது உலகம் என்பேன்!

காலத்தை வென்ற நீதி
களிநடம் புரியும் வீரர்
பாலமாய்ச் சுமக்கும் பூமி
பட்டொளிக் கொடியே வீசும்
ஞாலத்தின் புதிய நாடு
நயமிடத் தமிழ்ம ணத்தின்
சீலமே உலகை ஈர்க்கச்
செய்திடும் ஆண்டாய் வாழ்க!!

-நம்நாடு புதியபாரதி

தென்றலாய் வருக

தென்றலாய் வருக!

பொன்னுல கெல்லாம் பாடி
பொய்கையாய் உறவு தேடி
துன்பியல் கொட்டும் மாந்தர்
திருந்திட மனிதம் கூடி
வன்பகை ஒடித்து வாகை
வடிவினில் இனங்கள் நாடி
இன்றொரு புதிய ஆண்டே
எழுச்சியாய் வருக ஆண்டே!

அகதியாய் அலையச் சொந்த
அன்னைமண் நிழல்கள் கூட
சகதியாய் ஆகக் குண்டு
சரித்திட வைத்த கேடு
பகரவே எட்டாம் ஆண்டு
பறந்தது புதிதாய் வந்து
திகழவே ஒன்ப தாகித்
தென்றலாய் வருக ஆண்டே!


-புதியபாரதி