Wednesday, January 14, 2009

ஓ..தமிழவளே..!

ஓ..தமிழவளே..!

மானா மதுரைத் தமிழவளே
மடியிற் சுமந்த இனியவளே
வானம் வளரும் நிறைமதியே
வாராய் ஈழ வைகறையே -மானா

கானிற் பூத்த நிலப்பூக்கள்
கரிகா லன்பேர் சொலும்பூக்கள்
ஏனைச் சிந்தே தாலாட்டே
என்னை வரிக்கும் தமிழூற்றே -மானா

வேரிற் பழுத்த பலாப்பழமே
வேலன் கோவில் விடிவிளக்கே
தேரில் உலவும் திருமகளே
தேசம் வைத்த உயிர்மகளே - மானா

காரிற் பூத்த கனமழையே
கால்கள் அளந்த குழலழகே
நாரி ஒடியும் நூலிழையே
நாட்டின் அன்னைத் தமிழணங்கே! -மானா

கம்பன் போற்றக் கனிந்தவளே
காசி ஆனந் தன்னூற்றே
எங்கள் புதுவை எழுமூற்றே
ஈர்ப்பாய் புதிய பாரதியே! -மானா

No comments:

Post a Comment