Saturday, September 26, 2009

திலீபா..



(திலீபன் நினைவுநாள் சிந்தனை)

நேற்று உன் நினைவோடு மீண்டும்
கருக்கள் கட்டின..

அந்த
ஆற்றின் முளையோரம் உன் ஆவி
அசைந்து கொண்டது..

பார்த்துத்தான் கதைத்தேன்.. நீசேர்த்த
ஊர்த்திவலை எல்லாம் உவங்கள்தான்..

படலைக்குப் படலை எல்லாம்
சுடலை ஆச்சுதடா..!

இராசபக்சா இந்த நூற்றாண்டின்
இராட்சதன் ஆகினான்..

மானம் ஒருகையில்
மகிழ்ச்சி மறுகையில்
தானம் கொடுத்த தமிழ்வாழ்வு..
ஈனரின் கையில்
இறைச்சி ஆனதடா..!

சத்திய வேட்கைக் குஞ்சுகள் எல்லாம்
சருகாய் எரிந்தன..

விடலைத் தமிழிச்சிக் குடலை எடுத்தான்
கோத்தபாயா..

வெள்ளைக் கொடியொன்றும்
விசரனுக்குத் தெரியவில்லை..

முள்ளிவாய்க் காலெல்லாம்
முழுமணலும் எரிந்ததடா..!

முட்கிடங்குக் குள்ளே ..
மூன்று இலட்சம் மக்கள்...

மழைநீரும் மலமும்..
மகிந்தா கொடுத்தான் காண்..!

நீ எரிந்த பின்னாலும்
இந்திநிலம் விடவில்லை..

சோனியளாய் வந்தீழக்
கூனியளாய் ஆனதினால்
பேத்தை மகிந்தனுக்கு
ஊத்தை மலிந்ததுபார்..!

சாத்திடலாய் நாளெல்லாம்
சவக்கிடங்கு போடுதடா..!

உன்னை நினைந்து
கங்கை விழியருவிக்
கண்ணை உடைத்தோராய்ச்
சென்னி எல்லாம்
சிறந்தோக்கக் கண்டேன் யான்..!

மூசு பனிக்குள்ளும்
காசு சேர்த்தவர்கள்
பேசும் தலைவனுக்குப்
பின்புலமாய் நின்றார்கள்..

இன்றும் அப்படித்தான்..
இளைஞன் கையில்
எங்கள் இனம் இருக்குதடா..

சுட்டுவிரலில்; சூரியன்கீழ்
இருந்தோம் நாம்..

இன்று..
கட்டுக் குலைந்த
காட்சியும் தெரிகிறது..

வன்னி செயல்கொடுத்த
வாய்க்காலில் மீன்பிடித்து
தன்னை வளர்த்தவர்கள்-
தலைவன் விசாரணைக்குள்
அலைக்கப் பறந்தவரும்
இன்று வருகின்றார்..

விசாரணைகள் பின்னாலே
விலத்திப் போனவரும்
உலவி வருகின்றார்..

கேபி கொடுத்தவரம்
கேளென்று ஒவ்வொருத்தர்
சூப்பி பிடித்துச் செருக வருகின்றார்..

குளிர்தெரியாக் கனவான்கள்
பலர் வந்து போகின்றார்..

இயக்கம் எனநுழைந்து
பலஇலட்சம் பார்த்தவரும்
மயக்கம் தெளிந்து
மறுபடியும் வருகின்றார்..

கடைவைத்த காசைக்
கணக்கெடுத்த பின்னாலும்
குடைவைத்துக் கொண்டு
கோமான்கள் வருகின்றார்..

என்றாலும் நாங்கள்
இயக்கத்தைப் பார்த்தவர்கள்..

இயக்கம் வளர்த்த
வணிகப் புரவலர்கள்
செயலிற்றான் இன்னும்
செந்தமிழன் இருக்கின்றான்..

குளிருக்கும் பனிக்கும்
குலைநடுக்கத் துள்ளேயும்..
வளர்த்த இயக்கத்தை
வந்தவழி விடமாட்டோம்..

உண்ணா விரதம் இருக்கின்றார்
இளைஞரெலாம்..

உன்னை நினைந்து
கண்ணில் நீர்பெருக்கி
நீ வளர்த்த மண்ணை
நினைந்து தவமுருகி
நிலத்தில் பிறவாமல்
புலத்தில் பிறந்தவர்கள்..
குலமாய் மலர்ந்து
கூடாரமாய் நின்றார்..

மறுபக்கம்...
பகைவர்கள் எல்லாம்
பதாகையொடு வருகின்றார்..

விட்டில்கள் போலே
விழுந்த நிலத்தின்மேல்
கட்டில்கள் போடக்
கனபேர் வருகின்றார்..

சுட்டுவிரலில் சூரியன்கை நின்று
கட்டுப்பட்ட காலம்போய்..
கனக்கக் கதைக்கின்றார்..

மேதையென்றும் பட்டம் என்றும்
மேல்விலாசம் காட்டுதற்கு
வேலுப்பிள்ளை மைந்தனுக்கு
வில்லங்கம் போடுகின்றார்..

நாங்கள் இருந்தநிலம்
நாங்கள் எரிந்தநிலம்..
தாங்கி இருப்பெடுக்கத்
தப்பர்கள் தேவையில்லை..

இயக்கம் அதுவின்னும்
இருக்கிறது..
தலைவன் ஒருநாள்
தலைசிலிர்த்து வருவான் பார்..!

என்றாலும் எங்களுக்குள்
இருப்பெடுக்க வருகின்ற
ஒன்றும் வேண்டாம்..

நீ கனவிற் சொல்லிவை..

'தென்னைபனை தெரியாமல்..
திருத்தலைவன் பாராமல்..
இன்னும் பிறக்கின்ற
எங்கள் பரம்பரைகள்
வேரூன்றி விதைக்கின்ற
வேள்விகளைச் சிதையாதீர்..'

என்றே பகர்வாய்..
இருந்தவிடம் தோண்டிப்
பிரிந்தவர்கள் எல்லோரும்
மறந்தும் வரவேண்டாம்..

உருத்திர குமாரனும்..
உலகத் தமிழினமும்
ஒன்றுபட்டாலே
இருக்கிறது வெற்றியென்பேன்..

சென்றுவா.. திலீபா..
செகமெல்லாம் ஒன்றாக..
உன்நினைவு கொண்டு
உருக்கொடுக்கச் செய்துவிடு..

உயிர் உருக்கும் விரதத்தை
ஊருலகம் படைத்தவனே..
பயிர் விளைக்கும் விடியலிலே
பாதை வகுத்துவிடு..
-புதியபாரதி

Friday, September 25, 2009

ஈரமண்ணின் இதயச் சிறகுகள்!



(கலிவெண்பா)

கதவம் திறக்கமுன் கார்மண்ணில் எங்கள்
பதறும் நிலைகாட்டும் பார்வை இதுபாரீர்!
மாற்றான் வலிக்காடு வந்துற்ற வேளையிலும்
கூற்றாய் அவன்விரித்த கொட்டும் விசக்கோடு
ஊற்றுநிலம் மீதேறி ஊறணிகள் தேன்சுவடுக்
காற்றுத் திசையெங்கும் காமாறி யாய்வந்தும்,
போற்றும் தலைவன் புறமுதுகு காட்டாமல்
நேற்று அவன்வாயில் நின்றென்ன சொன்னானோ
கீற்றும் பிசகானாய்க் கேளங்கே நின்றான்காண்!
மக்களுக் கென்ன வாதையோ தான்பெற்ற
மக்களுக்கும் என்றே மறப்போரைக் கண்டானே!
வீராதி வீரன் விடிவுப் பெருவெள்ளி
போராடும் தீரன், பிரியமகன் சாள்ஸ்சைத்தன்
நேரோடு போர்க்களத்தில் நெஞ்சுரத்தைக் கண்டானே!
சீரோடு போர்த்தமகள் துர்க்காப் பசுங்கிளியைப்
போராடு என்றே புலிமகளாய் ஆக்கியவன்!
மக்கள் உடைத்தான வாதையிலே தான்மட்டும்
திக்கில் பறக்கத் திருத்தலைவன் எண்ணாணாய்
முள்ளிவாய்க் காலென்றும் முல்லை நகரென்றும்
பிள்ளைப் பிரபா பிரிய நிலப்போரில்
வெந்து மணற்காடு வீறிட்டுத் தீயாகும்
நந்திக் கடலெங்கும் நாயகனாய் நின்றான்காண்!
பல்லாயி ரத்தோராய்ப் பாடம் எடுத்துவந்த
சொல்லாரும் வல்புலிகள் தேசார் தளபதிகள்
எல்லோரும் நின்றே ஏறுபோர் கண்டானே!
கல்லு வெடிப்பதுபோல் காடுறையும் வாய்க்காலும்
இந்தியம் வந்து இனவழிப்புக் கூற்றுவனைச்
சொந்தம் எனத்தழுவிச் சேரீழம் நின்றதினால்
நச்சு வெடிப்புகைகள் நாச விசக்குண்டுக்
கச்சைகள் சேர்த்துக் கயவனொடு கூடியதால்
வேழாதி வேழம் விறல்மறவர் போராடும்
ஈழம் எனவொருத்தர் இல்லை எனச்செருகக்
கூழாய் எடுத்துவந்த கூத்தாடி இந்தியத்துள்
பாழாகி என்தமிழர் பல்லாயி ரம்செத்தார்!
தேசப் பிரபா செருக்களத்தில் ஆடுகளம்
வீசி எறிந்தானா? வெங்களத்தில் ஊடறுத்துக்
கால மணிச்சுவடு கண்டறியப் பார்த்தானாய்க்
கோல முகவடிவன் கொண்டுகளம் வருவானா?
ஏதும் அறியாராய் இன்றுலகக் காண்தமிழன்
வாதும் வருத்தமுமாய் வண்ணமுகம் தேடுகிறார்!
சூதின் அரசாங்கம் சொல்லரிய துன்பத்தைப்
பேதியாய் ஊற்றும் பெருங்கொடுமை தன்னில்
அறுபதுகள் தொட்டு இனவழிப்புச் செய்யும்
உறுவதைகள் எல்லாமும் இன்னும் நெடுக்கிறதே!
முட்கம்பிக் குள்ளே முழுநீர் மலங்களுமாய்
உட்கிடத்தி எங்கள் இனத்தை அழிக்கின்றான்!
புதுவை, கரிகாலன், பாலகுமார், யோகி
நதிபோல வாய்த்த நறுந்தமிழர் காவியத்தை
கொல்லும் விசத்தரசு கொன்று புதைகுழியைக்
கெல்லி எடுத்ததடம் இன்றிணையம் தந்ததம்மா!
போர்வேண்டாம் எங்கள் பிடிமண்ணில் மக்களெலாம்
சீர்செய்ய வேண்டும்மெனச் செய்த குமரனெனும்
பத்மநாதன் தன்னை பழியாய்க் கடத்திவிட்டார்!
செத்தவினம் மீண்டும் செரித்துச் சரிந்ததடா!
கல்வித் தமிழ்மாந்தர், காட்டும் இளங்குருத்தர்
வல்லோர் கணினியிலே வாய்பாடு கொண்டவர்கள்
எல்லோர்க்கும் இந்த இராசபக்ச கூற்றுவனாய்க்
கொல்லும் சிறுமைக் கொடியவனாய்க் கண்ணுற்றோம்!
இத்தனைக்கும் மேற்துன்பம் ஏதும் இருக்கிறதா?
நத்துக் கரையும் நடுமிரவாய் ஆய்ச்சுதடா!
அறுபது ஆண்டுகளாய் ஆய்க்கினையும் கொல்லும்
உறுவதையும் ஆக உரிஞ்சு விழுகிறதே!
முந்தைப் புராணமதை மொய்த்த அரக்கர்போல்
இந்தப் புராண இராசபக்சா வந்தான்காண்!
அய்ம்பதி னாயிரம் ஆர்தமிழர் சாகவென
வெய்ம்குண்டு போட்டு விழுத்தியவன் கோத்தனெனும்
தம்பி இரசாபக்கா, தக்கரினப் பொன்சேகா
கும்பரெலாம் அந்தக் குலமே, அரக்கரென
அன்றைக்குச் சொன்ன அடுக்கில் முளைத்தவரே!
இற்றை அரக்கம் இராசபக்சா கொல்குடும்பப்
புற்றை எழுதிடுவாய் பேய்இந்தி யர்நாடு
சோனியளே வந்து செகத்தீழம் தானழிக்க
கூனியளாய் நின்றாள்பார்! இத்தாலி யூர்ப்பாளின்
சாதிக்கு எங்கள் சரித்திரங்கள் தேராதே!
மோதி அழித்துவிட்டு மேடாக்கிப் போனாரே!
ஈழப்போர் மண்ணில் இடர்பெற்ற தாயின்எம்
ஆழமன தெங்கள் அறம்தர்மம் வீழாதே!
சாகாத தேசச் சரித்திரத்தின் சூரியனாம்
பாகாக நிற்பான், பரிதவிக்கும் எம்மினத்தின்
தேசாக நிற்பான், திருத்தமிழர் பட்டமரம்
ஆகாரே என்பதினால் அண்ணன் கரிகாலன்
வேகாத தெய்வன் வீற்றிருந்து, பாருலகில்
போரும் மணிநிலமும் போற்றிவைத்த ஆட்சியாய்
யாரும்கா ணாதவொரு யாப்பைஉரு வாக்கியவன்!
சேரும் திருவினையும் சேர்த்தெழுதும் வெண்பாக்கள்
காரும், விசும்பினொடு, கார்வளியும் காத்திருக்கும்!
எட்டப்பம் வந்து இனத்தை அழித்தகதை
கெட்டப்பர் கொட்டம், கொடியர் அந்நியனுள்
வட்டம்பம் சுட்ட வரலாறும் இன்றிருக்கும்
அட்டியிலே அந்நியரின் ஆட்சியிலே வீற்றிருக்கும்
சொந்த இனமெரித்த செல்லருக்கும் உண்டேயாம்!
இந்த வரலாறும் எம்மினத்தின் சாவினிலே
நொந்த வரலாற்றின் நெடும்பக்கம் தானறிவீர்!
இந்த வகையாக ஈற்றில் தமிழ்மண்ணை
சந்தியிலே வைத்துச் சவக்கிடங்கு ஆக்கியவன்
எந்த உலகத்தும் இல்லாத காரணத்தால்
இந்தப் பொழுது இவரே அரக்கரடா!
மானமொரு கையில் மறுகையில் தன்முயற்சி
ஆன இனச்சிறகை அகிலத்தின் கண்முன்னே
ஈனப் பிறவி இராசபக்ச அழித்தான்காண்!
அய்நாவின் பான்கிமூன் அச்சச்சோ என்றுசென்று
பொய்முகத்தைக் காட்டிப் புழுதியிலே நீர்வார்த்து
மூன்று இலட்சம் முகாமில் இறந்தோரைப்
போன்று இருந்தோரைப் பேன்பார்த்து விட்டதுபோல்
பத்து நிமிடத்தில் பான்கி திரும்பினர்காண்!
செத்த உலகத்தைச் சீருலகம் என்றார்காண்!
வெள்ளைக் கொடியோடு வெளியே புகுந்தவரை
தள்ளிச் சவக்கிடங்காய்ச் சரித்தவரைக் கூட்டாக
அய்நாவும் பொய்நாவும் அச்சுவெல்லம் என்கின்ற
செய்வினைகள் தன்னாலே செத்ததுபார் மானுடங்கள்!
அகிம்சை தொடங்கி அறுபதாண் டீறாக
மகிந்தக் குகைவரைக்கும் வாதையிலே மாய்ந்தோம்நாம்!
காலப் பெரும்புதரில் கட்டவிழ்ந்தோம், பல்நாடு
மூலம் வெடித்துவிழ மூச்சாகி வந்ததினால்
தர்மப் பெரும்போர்த் தமிழரே சாவடைந்தார்!
வர்மப் பகைவன் வடித்தழித்தான் இற்றைக்கும்
இந்தியமும் எங்கள் இனம்கொடுத்த எட்டப்பர்
பந்தியிலே சிங்கப் பகைவன்கால் நக்கியதால்
நாடாகக் கோடிட்ட நம்மீழச் சக்கரங்கள்
கூடாக வீழ்ந்த குலப்பரணி ஆனாலும்
ஞாலக் கருவிளக்கும் நற்பணியும் மாஞ்சிறகின்
ஈழக்கதை ஆர்த்து எழும்முரசு கேட்குதடா!
நாடு கடந்து நலத்தமிழர் நல்லரசைக்
கூடும் வகையாகக் கோடிட்ட போதுவரை
மேன்மைப் புலிவெண்பா மேவி வருகுதுபார்!
கோன்மை மனிதவளம் கொண்ட நிலச்சிறகை
ஏழுலகும் வாழ்தமிழர் ஏற்றுப் புதுயுகத்தைச்
சூழும் அரசமைப்பார் சொல்!


(புலிவெண்பா முன்னுரை)