Friday, January 9, 2009
லசந்தா மரணம் ஒரு மானுட அழிப்பு..
லசந்தா மரணம் ஒரு மானுட அழிப்பு..
ஆடு இறந்ததென்று
ஓநாய் அழுததென்றால்...
விழுங்கிய தவளைக்காக
பாம்பொன்று
வேதனை உகுத்து
விழிபெருக்கிக் கொண்டால்..
சிறுவனை விழுங்கிய முதலை
அனைத்து முதலைகளையும் கூட்டி
அஞ்சலிக் கூட்டம்
நடத்திக் கொண்டது..என்றால்..
கவ்விய மீனுக்காக கொக்கு
கவலை தெரிவித்துக் கொண்டது என்றால்..
வாளொன்று தான் அறுத்துக்கொன்ற
ஒரு மனிதனுக்கு
வருத்தம் தெரிவித்த
வரலாறு உண்டென்றால்..
லசங்தாவின் மரணத்திற்கான
மகிந்தாவின் கண்டனத்தையும்..
கசங்காமல் எடுத்துக்
கையில் பத்திரப்படுத்துங்கள்..
தமிழனின் இரத்தத்தைக் காட்டி
சிங்களத்தைத் தாலாட்டியபடியே..
காட்டுமிராண்டிக் கொலைகளை
கக்குகிறது மகிந்த அரசு..!
அநியாயத்தை அக்கு வேறாக
அச்சடிப்பவனை
துரத்தி அடித்திருக்கிறது இந்தத்
துட்டகெமுனுக் கூட்டம்..
குற்றவாளியே நீதிபதி
ஆகிக் கொண்டால்..
கொலைகாரனே
கதா காலட்சேபம் செய்தால்..
கற்பழிப்பவனே கண்ணகிக்குச்
சிலை வைத்துக் கொண்டால்..
கருச்சிதைவைச் செய்பவன்
மழலைகளுக்கு
மன்றம் வைத்துக் கொண்டால்..
கசாப்புக் கடைக்காரன்
கொல்லாமைக்குக்
குறள் எழுதிக் கொண்டால்..
அமைச்சனே
ஆட்கடத்தி என்றால்..
எல்லாமும் இந்த
இயமர்களுக்குப் பொருந்தும்...
ஒரு யோசப் பரராசசிங்கம்..
ஒரு திருமலை விக்கி..
வெலிக்கந்தையில் கௌசல்யன்..
சந்திரநேரு, ரவிராசன்,
குமார் பொன்னம்பலம்,
நடேசன், சிவராம், நிமலராசன்.
அற்புதன்,
மகத்துவன் மகேஸ்வரன்..
இந்த மனிதர்களின்
கொலைகளில் எல்லாம்
துட்டகெமுனுக்களும்,
ஒட்டர் எட்டப்பர்களும்
நீக்கமற நெளியும்
கொத்தும் பாம்புகளாய்...
கொப்பளிக்கும் கொடும் விசங்கள்
அப்பழுக்கில்லாத சால்வைகளாய்..
கொலையாளிகளை பிணையில் எடுத்து
வெளிநாடுகளுக்கு
அனுப்பி வைத்தன இந்த
விபச்சாரங்கள்..
லசங்கா விக்கிரமசிங்கே என்ற
அசையா மானிடம் இந்தக்கிழமை
மட்டும் அசையாமல் இருப்பான் ஆகில்..
மகாராசா தொலைக்காட்சியை விழுங்கிய
மலைப்பாம்புகள் தெரிய வந்திருக்கும்,
ஆசனங்கள் அகற்றப்பட
ஓடும் வண்டியில்
கால்கள் இல்லாமல் கட்டில் இல்லாமல்
வன்னியில் இருந்து வந்த
அந்த வைத்திய வாகனங்களின்
வடிவுப் படங்கள்
வரலாறு படைத்திருக்கும்..
லசந்தா இந்த வரலாற்றின்
நிசங்களின் நிறம்..
சிகப்புச் சால்லை மகிந்தா
தொலைபேசியில் எடுத்துத் திட்டியவை
எல்லாம் ஒலிப்பதிவில் இருக்கிறது..
கோத்தபாயா பலகோடிபணம் கேட்ட
வழக்கு இன்னும் நிலுவையில்
இருக்கிறது..
மகிந்தக் கூட்டம்..
கொலைப் பூதங்களின்
கழுகுக் கூட்டம்..
இரண்டாயிரத்து ஒன்பது தையெட்டு
முரண்டு பிடித்த ஒரு
மொக்கனின் ஆட்சிக்கு
முகமூடி கிழிந்திருக்கிறது..
சிங்களத்தின் அடுத்த வலையில்
மங்கள நிற்பதாக கொழும்புச் செய்திகள்
இன்று மடை திறந்து கொண்டன..
மனோ கணேசனுக்கும்
முதலைவாய் திறந்தே இருக்கிறது..
புத்தப் பிறப்புக்களுக்கு
அகிம்சை இம்சையாயிருக்கிறது..
காலா காலத்திற்கும்
காலம் கடந்தும் இந்த நாள்
கணிப்பில் இருந்து கொண்டே இருக்கும்!
-சுந்தரபாண்டியன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment