இன்றுநீ.. நாளை நாங்கள்...
வரலாறு சில சிறப்பு நாட்களுக்கே
சில்லுப் பூட்டியிருக்கிறது..
இரண்டாயிரத்து ஒன்பது சனவரி இருபது
என்ற இந்தநாள் சரித்திரத்தில் புதியநாள்..
ஆபிரகாம் லிங்கன் பிறந்த பூமியில்
அதே அடிச்சுவட்டில்,
சனநாயகம் என்ற தொட்டிலில்
ஒரு கருப்புக் குழந்தை ஒபாமா..
ஆமாம்..
அமெரிக்க என்ற வல்லரசு நாடு
சமமாக வைத்து இல்லை இல்லை..
சராசரிக்கும் உயரமாக வைத்து
நாற்பத்தி நான்காவது சனாதிபதியாக
சத்தியப் பிரமாணம் செய்வதற்கு
ஒரு கறுப்புத் தோன்றல் என்ற
காலவரலாற்றை எழுதிநிற்கிறது..
இன்றைய நாள்..
புயல் ஓய்கிறபோது புழுதி பறக்க அல்லது
பொங்கி அடிக்கும் பனிக்காற்றோடு
போகக் காட்டும் காலக் கண்ணாடிபோல்..
ஜோர்ச் புச்சுக்கு ஒரு பிரியாவிடை..
குண்டு நொருக்கில் கொடிகட்டிய இசுரேல்
கொட்டுமட்டும் கொட்டி முட்டி தட்டிக்கொண்டது..
மும்பை நகருக்குள் கம்பெடுத்து வீசிய
விம்பன் முடுக்கு விலாசம் கொடுத்தது..
பாகிஸ்தான்..
அப்பாவிகளைக் கொன்று புலிகள் என்ற
கணக்குப் போடுகிறது மகிந்தக்
காட்டாட்சி..
இந்த ஒபாமாவின் வருகையோடு
வாலை இழுத்து வந்தவழி போயிருக்கிறது..
இசுரேல்..
விடியலுக்கு முந்திய
விடிவெள்ளிபோல்
அநியாயச் சிக்குதலுக்கும்
அதிரடியா ஒரு ஒளிக்கீற்று..
ஒபாமாவாக..
அமெரிக்கம் என்ற தத்துவத்தின்
பொன்னெழுத்தின் இன்றையநாள்
பூவுலகத்தின் ஒரு திருப்புநாள்..
நாமும் நம்புவோம்..
இனஅழிப்புச் செய்கின்ற
இராசபக்ச ஆட்சியில் இருந்து
விடுபடும் நாளாக-
வேதனையின் விளிம்பில் இந்தச்
சாதனையாளனிடமிருந்து
சத்தியம் செய்வோம்..
நாங்களும் வெல்வோம். எங்கள்
சத்தியம் வெல்லும்..
இன்றுநீ ஒபாமா..
நாளை நாங்கள்..
எழுந்து நிற்போம்..
-வன்னிமைந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment