Sunday, January 4, 2009

நீறும் நெருப்பும்

நீறும் நெருப்பும்

விடியற் பூக்கள் மலரும் நேரம்
விழித்து எழடா தோழா!
அடிமை விலங்கு உடையும் நாட்கள்
ஆர்த்து எழடா தோழா!

அழுவதற் கில்லை எங்கள் தேசம்
எழுவோம் நாங்கள் புயலே!
விழுவதற் கில்லை சுதந்திர தாகம்
வேங்கை வெல்லும் குயிலே!

தோல்விகள் எதுவும் தோல்விகள் இல்லை
விலங்கு உடையும் ஒருநாள்!
சேல்விழி சிறுத்தை ஆகிய தேசம்
சுதந்திரம் எழுதும் திருநாள்!

சிதையில் தோழன் மடிவதும் உண்டோ
சிறுத்தைக் கேது மரணம்!
விதைப்பின் உயிர்கள் வீழுவ தில்லை
விடியல் எங்கள் சரணம்!

உண்மைகள் நீறு பூப்பதாய் இருக்கும்
ஒருநாள் நெருப்பாய் மாறும்
எண்ணாப் பொழுதில் எகிறும் புலிகள்
எழுதும் வெற்றி சீறும்

போவார் பின்னர் புலியாய் வருவர்
பிறக்கும் களத்தின் நெருப்பு
தாவும் படையாய் தடைகள் உடைப்பார்
தருவார் நிலத்தின் இருப்பு!

அந்நியன் படையில் அடுக்களை தின்னி
அரசொடு மலிந்தான் ஆயின்
இந்நாள் புலிகள் எழுதும் கரங்கள்
எழுதும் நிலத்தின் சுரங்கள்..

-புதியபாரதி
(நிலப்பூக்கள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

No comments:

Post a Comment