Monday, January 5, 2009

நிசங்களின் நிறங்கள்..!

நிசங்களின் நிறங்கள்..!

அப்புகாமி பதட்டமாகவே காணப்பட்டார். 'சுதுமெனிக்கா..சுதுமெனிக்கா...'என்ற அவரது குரல் கூடமெங்கும் அலறிவீழ்ந்தது..

சுதுமெனிக்காவின் கண்கள் அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்க.. 'இப்ப என்னப்பா செய்கிறது..யார்சொன்னது சரத்தைக் காணவில்லையென..' மனைவியின் கேள்விக்கு மறுமொழி சொல்ல அவருக்கு நேரம் இருக்கவில்லை.
.
அப்புகாமியும் ஆடிப்போய் விட்டிருந்தார்.
'என்ன.. தேசத்திற்காகப் போராட என்றே சரத் போனவன்.. எங்களுக்கு ஒரே பிள்ளை என்றாலும் படையிலே சேர்; சேர் என்று மன்றாடினாங்கள்..மாதா மாதம் சுளையான காசு என்று ஆசைவார்த்தை காட்டினாங்கள்.. இப்போ சரத்தும் போய்விட்டான்..' அடக்கிவந்த அழுகை வெடித்து விழுந்தது..

'இவங்க.. யாருக்காகப் போராடுகிறாங்கள் ..'என்றாள் சுதுமெனிக்கா..

'அதுதானே.. இந்தியா பாகிஸ்தான் போரா.. அல்லது சீனா இந்தியப் போரா..நாட்டுக்கு நாடு சண்டை பிடிக்கிறமாதிரி நாட்டுக்குள்ளேயே சண்டை நடந்துகொண்டிருக்கு..'

இதுகளைக் கதைக்க இப்ப நேரமா? சரத் இப்ப எங்கையெண்டு பாருங்க..அல்;லது யாரிட்ட எங்க போய்க் கதைக்கிறதெண்டு பாருங்க.. என்றாள் சுதுமெனிக்கா..

அநுராசிறீ என்ற ஒருவன்தான் ரெலிபோண் செய்தான்..கொஞ்சம்பொறு அவனுக்குப் போண்பண்ணிப் பார்க்கிறன்...
0000
'யார் கதைக்கிறது..

நான் இங்கே அனுராசிறீ கதைக்கிறன்...'

'நான் அப்புகாமி தம்பி.. சரத்தின் அப்பா.. சரத்தைப் பற்றி நீங்கள் சொன்ன செய்தி உண்மையா தம்பி...' மல்லி..மல்லி..என்று அழுதழுதுகேட்டார் அப்புகாமி..

இப்ப ஒரு கிழமைக்குள் ஆயிரத்தி ஐநூறு இராணுவம் செத்தும் காயப்பட்டும் போய்விட்டது மாத்தயா.. காயப்பட்ட பல நூற்றுக்கணக்கான இராணுவம் செயவர்த்தனபுர வைத்தியசாலையிலும், இன்னும் பல வைத்தியசாலைகளிலும் நிரம்பி வழிவதாகச் சொல்கிறார்கள். காயப்பட்டவரைப் போய்ப்பார்க்க விடுகிறார்கள் இல்லை. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய சிகிச்சை பெறும் படையினரைப் பார்க்கவெண்டு வந்தவர் சனம் முகத்தைத் திருப்பியபடி நின்றதால் ஒருவரோடு ஒன்றும் கதைக்காமல் திரும்பிவிட்டார் என்று செய்திகளில் வந்திருக்கு.. மாத்தயா..

.. அப்ப சரத்தைப் பற்றி நீ சொல்கிற செய்தி பொய்யாய் இருக்காதா என அழுதபடி கேட்டார் அப்புகாமி..

'அதுதான் சொல்கிறேன்..வைத்தியசாலையில் கிடக்கும் ஆமிக்காரர் பலர் மூளை குழம்பியபடியும் சிலர் கிடக்கிறார்கள்.. சஞ்சலத்தோடு கதைக்கிறார்கள்.. மன அழுத்தம் அவர்களை வாட்டுகிறது. போரில் இறப்பதை விட அங்கு நடக்கும் கொடிய காரியங்கள் மனதை இடிப்பதாக ..அவர்களைச் சந்திப்பவர்களிடம் கூறுவதாக இணையத்தளங்களின்வருகின்றன. அப்படியான ஒருசெய்தியில் அக்கராயன் போரிலே காயப்பட்ட பலரை சில பத்திரிகைகள் பேட்டிகண்டு எழுதியிருக்கிறார்கள்..அதனூடாகத்தான் காலி அப்புகாமியின் மகன் சரத்தும்...'

'என்ன சொல்தம்பி .. என்புத்தாவுக்கு என்ன நடந்தது...'அலறினார் அப்புகாமி.

'செயவர்த்தனபுர ஆஸ்பத்திரி படையினர் வைத்தியப்பிரிவில் விசாரித்துவிடுங்கள்..'என்று சொல்லியபடி அனுரசிறீ போணை வைத்துவிட்டான்.
0000
'என்ன...' என்று கேட்டாள் சுதுமெனிக்கா.

அநுரசிறீயும் கேள்விப்பட்டதைத்தான் சொல்கிறான். கொழும்பு போவதைத் தவிர வேறுவழியில்லை. இப்ப..காசுக்கு எங்க போறது என்றார் அப்புகாமி..

காலி மார்க்கட் கந்தையா மாத்தாயாவுக்கு ஒருக்கால் போன்செய்யுங்க என்றாள் சுதுமெனிக்கா..
ஹலோ..ஹலோ கந்தையா மாத்தயாவா..

யாரது அப்புகாமியா.. என்ன ..என்ன இந்தநேரம்..?

'அடுத்த முறை புகையிலை வாங்கையிக்கை தந்துவிடுறன் மாத்தயா.. என்ரை மகன் படையிலை சேர்ந்து வன்னிப்போருக்குப் போனவன் அங்கை.. அவiனைக் காணவில்லை என ஒரு செய்தி வந்திருக்கு.. இப்ப உடனடியாகக் கொழும்புக்குப் போகவேண்டியிருக்கு..கையிலை சல்லிக்காசுமில்லை.. அதுதான் உங்களைக் கேட்கலாம் என்று...'அழுகையும் அவலமுமாய் இழுத்தபடி நின்றார் அப்புகாமி..'

'அட கடவுளே.. ஒரே புத்தா அல்லவா அப்புகாமி.. உனக்கா இப்படி.. எனக்குத் தெரியும் அப்புகாமி வன்னிப்போர் சாதாரணமானது இல்லையென்று..நீதான் சொன்னாய் படையிலை நிறையச் சம்பளம் கொடுப்பதாக.. சரத் புத்தா விரும்புறான் ஒன்றும் செய்ய இயலாமல் இருக்குது எண்டு.. இப்ப உடனடி அலுவலைக் கவனி அப்புகாமி...

இடைமறித்தாள் சுதுமெனிக்கா 'பஸ் எடுக்க அங்கைதான் வாறம்.. உங்களை நம்பித்தான் வாறம்..'

'இப்பவே புறப்படுங்க..' கந்தையா மாத்தயா போணை வைத்துவிட்டு..பாவம் ஒரே மகன்.. என்று கண்கலங்கினார்...

ஒரு பயணப்பெட்டியில் உடுபிடுவைகளை மட்டும் வைத்துக் கொண்டு கந்தையா புளத் ஸ்டோருக்கு வந்துவிட்டனர் அப்புகாமியும் சுதுமெனிக்காவும்..

கொழும்பு பஸ் இன்னும் அரைமணியில் என்று சொன்னார்கள். விசாரித்தனான்.. உனக்கு ஒன்றும் நடக்காது அப்புகாமி.. நீ.. அப்படி மனுசன்... போய் விசாரித்துவிட்டு உடனே எனக்கொரு போண்கொடு.. பார்த்திருப்பன் என்று ஒரு இலட்சம் ரூபாவை அப்புகாமியின் கையில் கொடுத்தார் கந்தையர்..

கந்தையற்றை மண்ணிலே போர்நடக்குது..என்ரை மகனைப் பார்க்கக் காசு கொடுக்கிறார்..இவன்தான் தமிழன்.. தமினென்றால் இவன்தான் என நினைத்தபடியே..கந்தையரின் இரண்டு கரத்தையும் கைப்பற்றி நன்றிசொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினர் சரத்தின் தாயும் தந்தையும்...
0000
இடம் கொழும்பு பதின்மூன்று கொட்டகேனா.. என்ற கொட்டாஞ்சேனை..
அப்புகாமியின் அக்கா மகள்வீடு..

'...ஹலோ இது கோத்தபாயா கந்தோரா.. நான் இங்கே சுரங்கா பேசிறன்.. எங்க மாமாவின் மகன் ஒருவர் படையிலை வன்னிக்குப் போனவர்..அவர் பற்றிய தகவல் அறிய வேணும் அதுதான்..' அப்புகாமியின் அக்கா மகள் சுரங்கா பாதுகாப்புச் செயலர் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டாள்..

'யார் யார் இறந்தது.. யார்யார் காயம் என்ற விபரங்கள் உடனடியாக எடுக்க முடியாதிருக்கிறது. நூறு பேருக்கை நாம் இப்ப தேட முடியாது.. ஆனால் தகவல் வரும்போது தெரியப்படுத்துறோம்.. விபரம் விலாசம் தொலைபேசி இலக்கத்தைத் தாருங்கள்..' சொல்லிவைச்ச மாதிரியே கந்தோரில் பேசினார்கள்..

பலநூறு இறந்து.. பல ஆயிரம் காயப்பட்டதென தமிழ்நெற் சொல்லுது..இவனென்ன நூறுக்கணக்குப் பேசுறான் என முணுமுணுத்தாள் சுரங்கா..

'இஞ்சை பாருங்க மாமா..இவங்களிட்டை ஒண்ணும் எடுக்க முடியாது.. எனக்குத் தெரிந்த லீடர் பத்திரிகை நிருபர் ஒருவர் இருக்கிறார்..என்ன செய்யலாம் எனக் கேட்கிறன் ..' என்றாள் சுரங்கா... உடனே இலக்கங்களை அழுத்தினாள்..

'நான் சுரங்கா கதைக்கிறன்..மகிந்து.. எனது உறவினர் ஒருவர் படையிலை இருந்து காணாமல் போய்விட்டார்.. அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பதை அறியவேண்டும். செயவர்த்தனபுர ஆஸ்பத்திரியில்..' இழுத்தபடி நின்றாள் சுரங்கா..

'ஓ. சுரங்காவா.. அதையேன் கேட்கிறாய் தங்கச்சி.. காயப்பட்டவங்கடை கதையைக் கேட்கிறதே பெரிய வேதனையாய் இருக்கு... மனநிலை குழம்பியபடி கிடங்கிறார்கள் பலர் .. என்ன நடந்தது என்று தெரியாமல்.. உணர்வற்றுச் சிரிச்சபடி இருக்கும் பலர்.. என்ன பெயர் அந்த ஆமி இளைஞனுக்கு என்று சொல்வாயா..'

'அப்புகாமி சரத்பக்ச , பிறப்பிடம் காலி.. வயது இருபது..போர்முனை அக்கராயன் வன்னி..' என்று தொடர் விளக்கம் கொடுத்தாள் சுரங்கா..

நேற்றைய ஊடகவியலாளர் சிலர் படையினரைச் சந்தித்ததில் சில செய்திகள் வந்திருக்குதான்.. அதிலை வினோத் என்ற படையினன் கொடுத்த சில தகவல்கள் அதிர்ச்சியாய் இருக்கு சுரங்கா..

எந்த ஆஸ்பத்திரி என்று தெரியாது.. மனம் குழம்பிய அவனைப் பல நிருபர்கள் பேட்டி கண்டார்கள்.. இப்ப இரண்டு கிழமையாய் ஆயிரக்கணக்கான இராணுவர்கள் இறந்தும் காயப்பட்டும் கொழும்புக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்..ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் இழுத்து மூடிவிட்டது.. எனது சக்திக்கு ஏற்றவாறு இன்றைய பொழுதை உனக்காச் செலவழிக்கிறன் சுரங்கா என்றபடி நிறுத்தினான் லீடர் நிருபர்.

அப்புகாமியும் சுதுமெனிக்காவும் தொலைபேசிக்கு அருகிலேயே குந்திவிட்டார்கள்..சுரங்கா சாப்பிடச் சொல்லியும் சாப்பிடாதவர்களாய்.. அழுதபடி.. இன்னும் சொல்லப்போனால் பிள்ளைத் துயரம் அவர்களை இப்பொழுது முற்றிலுமாக வாட்டியபடி ..சரத்தின் இளமைப் பராயத்தை எண்ணியபடியே..அழுதழுது ..

தொலைபேசி.. அவசரமாகவே ஒலித்தது..

உடனே வரும்படி அழைப்புக் கொடுத்தார் முத்தெட்டு..
0000
ஆஸ்பத்திரி: இராணுவப்பிரிவு வைத்தியசாலை..நாலாவது வார்ட்.. ஏழாவது கட்டில்..முதுகுப்பக்கம் கட்டுப்போட்டிருக்க கிடக்கமுடியாதபடி கிடந்தான் வினோத்..
எல்லோருமாக வினோத்தின் கட்டிலைச் சுற்றியபடியே.. நின்றிருந்தார்கள்.

வினோத் நான் லீடர் நிருபர்..முத்தெட்டுப் பேசுறன்.. நீங்கள்.. காலி அப்புகாமி சரத்பக்ச என்ற படையினனைப் பற்றிச் சொல்லியதாக ஒரு செய்தி இணையத்தளங்களிலும் பத்திரிகையிலும் வெளியாகி இருக்குதென நினைக்கிறன்.. சரத்தைத் தெரியுமா உனக்கு..

..தெரியும்.. ஆவலோடு கிட்டக் குழுமினார்கள் எல்லோரும்..

எந்தப் போர்முனை எனத் தெரியுமா?

தெரியும் அக்கராயன்குளம்..

'அதிகம் உங்களை வருத்தாதீர்கள்.. நீங்கள் ஆறுதலாக. நினைவுக்கு வருபவையிட்டு நிதானப்படுத்திச் சொல்லுங்கள்..' என்றார் முத்தெட்டு..

'கிளிநொச்சி நோக்கிய நகர்வு என்றார்கள்.. கோத்தபாயவும் சரத் பொன்சேகாவும் வவுனியாவுக்கு வந்து போர்பற்றிய வியூகங்கள் வகுத்தபின்பு இந்தப் போர் நடப்பதாகவும் எங்களுக்கு கிளிநொச்சியின் எல்லை விளம்பரப்பலகையோடு நின்றாவது படம் எடுத்து அனுப்புங்கள் என்றுதான் அனுப்பி வைத்தார்கள்..'

அப்பொழுது..?

சரத்தை எனக்குத் தெரியும். போர்முனை நண்பர்கள். நான் அம்பலாந்தோட்டை.., பக்கத்துப் பிரதேசங்கள் என்றபடியாலும் ஒரு பாசம்..எனக்குப் பின்னால் வந்த நிரையில் வந்து கொண்டிருந்தான் அவன்..புறம்படும்போது சைகை காட்டினான் அவன்..

அப்புறம்..?

ஒரு நூறு மீற்றர்தான் சென்றிருப்போம்..முதல்நிரை முன்னுக்குப் போக அனுப்பினார்கள்.. மின்னுவது போலத்தான் தெரிந்தது.. வெடிச்சத்தங்கள் காதைப் பிளந்தன.. எங்கிருக்கிறோம் என்ன செய்கிறோம் என்பது கூட சிந்திப்பதற்கிடையில் முன்நிரையில் சென்றவர்கள் ஐயோ அம்மே என விழுந்து கொண்டிருந்தார்கள்.. என்னால் முன்னேறிச் செல்ல முடியவில்லை...திரும்பி ஓடினேன்..

என்ன நடந்தது..?

வந்த வெளி அனைத்திலும் பிரேதங்கள்.. சிறீலங்கா ஆமி செத்து விழுந்துகொண்டிருந்தன.. இருபத்தி ஐந்து வரைக்குமான பிரேதங்களை நான் பார்த்தபடி பின்னோக்கி ஓடினேன்..

சொல்லுமல்லி என முன்னுக்கு நகர்ந்தார் அப்புகாமி..

சட்டென்று கவனித்தேன்.. என்முன்னே நிலத்தில் கிடந்த அந்த சக படைஞனைப் பார்த்தேன்..
என்ன..? சுதுமெனிக்கா அழுதாள்..

ஆமாம் அவன்தான் சரத்.. உணர்வற்றுக் கிடந்தான்.. தொட்டுப் பார்த்தேன். தேகத்தில் சூடு இருந்தது.. எனது அதிகாரி பந்துல முன்னால் நின்றார்.

இந்தா மண்வெட்டி உடனடியாகப் புதை

மாத்தயா.. தேகத்தில் சூடு இருக்கிறது.. எப்படி..?

அதுதான் சொல்கிறேன்..நான்சொல்கிறேன்.. நீ.. புதை..

நான் இழுத்துக் கொண்டே வருகிறேன்..

நீ.. உயிரோடு திரும்பப் போகிறாயா? அல்லது..

அழுதழுது அவனைப் புதைத்தேன்.. அவனது தேகச் சூடு அவன் இறந்திருக்க முடியாது என்றே கருதுகிறேன்..ஆனால் அவனும் வன்னிப் புதைகுழியில்...
வினோத் விக்கி அழுதான்..

அவன் மட்டுமா எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள்.
0000
யாரு கந்தையா மாத்தயாவா ..நான் அப்புகாமி...என்ரை பிள்ளை போயிட்டான் மாத்தயா.. அவன் இறந்ததிற்கான சாட்சியை நேரிலை பார்த்திட்டன்..
சொல்லு சொல்லு இஞ்சை காலியிலை பதட்டமாயிருக்கு..வன்செயல் வெடித்தாலும் வெடிக்கலாம்.. வன்னிப் போரிலை பல நூறு ஆமி இறந்திட்டுது அப்புகாமி..

ஐம்பத்தி யெட்டில் இருந்து இந்த வன்செயல் மூலம்தானே தமிழன் போர்செய்ய வெளிக்கிட்டவன் எனப் பொருமினார் அப்புகாமி உடனை வெளிக்கிடுறன் மாத்தயா...?

நான் இருந்தால் சந்திக்கிறன் என்றார் கந்தையா மாத்தயா என்ற கந்தையர்..

ஒன்றும் நடக்காது. பயமில்லாமல் இருங்கோ இங்கை நாங்கள் நாலுபேரும் வந்துவிடுகிறோம்..
0000
காலி கந்தையா புளத் ஸ்டோர் முன்பாக அப்புகாமி, சுதுமெனிக்கா, சுரங்கா, முத்தெட்டு, இன்னும் பல சிங்களவர்கள்..
முத்தெட்டுப் பேசினார்.. 'தமிழர்கள் வர்த்தகம் செய்யத்தான் வந்தவர்கள் அல்ல, எங்களோடு வாழவும்தான் வந்தவர்கள். கொஞ்சமென்றாலும் உணர்ந்து கொள்ளுங்கள். காலிமுகத்திடலில் போட்டு அடித்தோம். பாணந்துறையில் கோவிலுக்குள் ஐயர் எரியூட்டப்பட்டார். செஞ்சோலைக் குண்டு, நவாலித் தேவாலயம், ஆயிரம் இரண்டாயிரம் இந்துக் கோவில்களை அழித்துப் போட்டம்.., இப்பொழுது தமிழனைக் கடத்திக் கடத்திக் கொலைசெய்கிறம்.. கப்பம் வாங்கிறம்.. இதெல்லாம் எங்கைபோய் முடியும் என நினைக்கிறியள்..இதெல்லாம் தமிழ்நாடு உருவாக்கும் தடயங்கள்..தமிழரை ஆதரியுங்கள்.. அவனும் இந்நாட்டு அரசியல் சாசனத்தின் பிள்ளைகள். அப்பொழுதான் உங்கள் பிள்ளைகள் போரில் மடிவது நிறுத்தப்படும்..'
பொல்லுகளோடும் தடியோடும் வந்தவர்கள் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்கள்.!
(இதுவொரு நிசங்களுக்கு நிறம்சேர்த்த கதை)
-தீவகன்
(நன்றி: முழக்கம்)

No comments:

Post a Comment