Tuesday, June 30, 2009

மனமும் கனமும்..



இறந்தகதை சொல்லி அல்லது சொல்ல இத்தனை நாட்களா..?

மறக்க முடியாத ஒருவனுக்கு மரண வாய்ப்பாடா?

பெற்ற பிள்ளையைத் தளபதியாக்கிப்
பெற்ற மண்ணுக்குக் கொடுத்த தலைவன்
புராணங்களிலும் உண்டா..?

உலகப் போரியல் வரலாற்றில்
இந்தச் சூரியத் தேவனின் தளபதிகள்போல்
எந்தநாட்டு விடியற்போர் வைத்திருக்கிறது..?

இடுப்பில் இருந்து பிரிந்த கருணா என்ற
கசங்கட்டியால்தான் எட்டப்பத்துக்கூட
இந்த மவுசு..

பழியின் வரலாறுகூட
பாடத்திற்கு வந்திருக்கிறது என்றாலும்..
இரவு வந்துவிட்டால் ஆதவன்
இறந்தா படுவான்..

தேசியத்தை தெரியவைத்தனுக்கு
எதற்குத் தீர்த்தாஞ்சலி..?

பேரியக்கத் தலைவனுக்கு எதற்குப்
புறமுதுகுக் கதைகள்..

பணிக்குப் புறப்பட்டவர்களை
பகலவனுக்கப் பாடை கட்டிக்
காப்பாற்றப் போகிறார்களாம்..

கரும்புலியைத் திரும்பிவா என்று
கரிகாலன் அனுப்பியதில்லை..

திரும்பிவருவேன் என்று எந்தக்
கரும்புலியும் திரிந்தது இல்லை..

சீனம்-பாகிஸ்தான்-இந்தியம் என்ற
ஆனானப்பட்ட வல்லரசுகள்..
ஒரு அடுப்பில் சமைத்தது கிடையாது..

ஆனால் புலிகளைச் சமைக்கப் புறப்பட்டார்கள்..

அட..ஒரு விடுதலைக்கான
அரிச்சுவடிக்கும் சேகுவேரா என்ற
சிறப்பியலாளனுக்கும்..
சுடச்சுட வரிகொடுக்கும் கியூபாவும்..
ஒரு இனப்படுகொலையைத் தெரியவில்லை என்றால்..

ஆம் ..சுயநலங்கள்
சேர்ந்து கொடுத்த இரசாயன
எறி-எரிகுண்டுகள்..
பிச்சையெடுப்பவன் தெரியாத
புண்ணிய பூமியைச்
சாம்பல் மேடாக்கி விட்டார்..என்றால்

சத்தியபூமி சரிந்துபோக வேண்டியதுதானா?

நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரத்தில்
பொல்லுக் கொடுக்கப் புறப்பட்டால் என்ன செய்வது?

நாட்டில் இருக்கும்போது
கூடியிருக்க முடியாதவர்கள்..
எரிந்த வீட்டில் கூடுகட்ட நிற்கிறார்கள்..

யோசப், ரவிராசன், சிவராம்...
குமார், நிமலராசன், லசந்தா..
போன்ற மரணங்களின்
கொலைகாரர்கள் எங்கே இருக்கிறார்கள்..?

பாசிசச் சிங்களவனும்..
பாசிசத் தமிழனும் அல்லவா..
இந்தப் பாடைகட்டும் பல்லக்குவாதிகள்..

பக்கத்தே இருந்தபடி எல்லாக்
கக்கத்தும் மரணங்கள்..

இந்தக் கொலைக்காடர்கள் யார்..
எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாதா?

சூரன் மாமரமாய் வந்தகதை மாதிரி
கூட்டமைப்பு என்ற பெயரில்
காட்டிக்கொடுப்பவன் செய்திபோடச் சொல்லுகிறான்..

இவர்கள் யாரென்று
யாருக்கும் தெரியாதா?..

பாசிச ஏட்டய்யாக்கள் யாழ்ப்பாணத்தில்
பத்திரிகை எரிக்கிறார்கள் பார்க்கவில்லையா..?

ஒருபக்கம் பத்திரிகை எரிப்பு..
மறுபக்கம் காரியாலயத்திற்கு
பாதுகாப்பு..

எரிப்பவனைக் கக்கத்தில் வைத்து..
நரிக்கவசம் போடுகிற..முட்டாள்கள்..
துப்பாக்கிக்குள்ளே நப்பாசை கொண்டுவிட்டால்
தப்பாக்கிகள் என்ன தெரியாமலா
போய்விடும்..

இராணுவ ஒட்டடையில் பட்டடை போட்டுவிட்டு
தேர்தல் கிராணம் கௌவுகிறது..

அட..
வெறிகாறன் எழுதிகிற வியாக்கியானங்கள்..

விற்பனைக்காக பிரபாகரன்..
விமானத்தில் களத்தைப் பார்த்தார் என்ற எழுதுகிறவன்..
வெறியில் வானொலி நடத்துகிறவன்..
சூசை மட்டக்களப்பில் நிற்கிறாரா? என்று
கேள்விக்குறிபோட்டு எழுதுகிறவன்.. என்றும் பல
கண்முன் கரிபோடும் வாலாயங்கள்..
புண்ணாய் பிடுங்கித் தள்ளுகின்றன..

இன்றைய காலத்தில்..

தேசியத் தலைவனால் நியமிக்கப்பட்டவர் என்ற
காரணத்திற்காக தன்னைப் பேசவைத்தவரும்..
அவரின் அழைப்பாளர்களும்..
இன்னும் அசையாத கட்டுக்கோப்போடு நிற்கும்
ஊனாத்தானா அமைப்புகளும்
ஒன்றாக வரவேண்டும்..

நிலம், தேசியம், தன்னாட்சி, சுயம் கொண்ட
ஒரு இனத்தின் வரலாறு இந்த
நாடுகளுக்குச் சொல்லிக் கொண்டே
இருக்க வேண்டும்..

ஒன்றுபட முடியாவிட்டால்
தின்று முடிக்கத் தினவெடுக்கின்றன துரோகங்கள்..

பத்மநாதன் எடுத்த முயற்சியில்
எல்லோரும் பங்குதாரராக வேண்டும்..

நினைத்தபாட்டுக்கு யாரும் எதையும் கதைக்காமல்
எல்லோரும் ஒன்றாக வருவோம்..

வெறிக்கூத்து ஆடுபவர்கள் சிங்களத்தின்
விசக்கூலிகள் ஆகிவிட்ட நேரமிது..

நிசத்தைத் தமிழன் வெல்ல..
உலகத்தில் ஒன்றாகி நிற்போம்...

-எல்லாளன்..
(நம்நாடு தளத்திற்காக..)

Sunday, June 28, 2009

பரணித் திருவெண்பா


பாவலன் நெஞ்சம்: முடிவுரை
இந்திய இந்தநூற்றாண்டுக் கயமை

ஈழத்தின் மீதான இந்தியக் கொல்கயவர்
கூழாடல் இந்நூற்றின் கீழாமே-பாழாக
மண்ணும் நிலமும் மரணநெடி ஊற்றுவித்த
புண்ணும் அழியாத பேய்!

தமிழன் நிலங்கள் சிங்களர்க்குத் தாரைவார்க்க..
புரையேறி விட்டதொரு புத்தநெடி யுத்தம்
கரையேறி விட்டதில்லைக் காணீர்-நிரையேறி
செந்தமிழர் வாழ்விடத்தைச் சிங்களர்க்கு விற்பதற்கு
கந்தகத்தான் எண்ணுகிறான் காண்!

புலிகள் விடவில்லை என்றழுத மேற்குலகம்..இன்று..
புலிகள் விடவில்லை போன்றழுத மேற்கு
கிலியாக்கும் சிங்களத்தைக் கேளார்-எலிப்பொறியாய்
முட்கம்பிக் குள்ளேதான் மேடிழந்த செந்தமிழன்
பட்டழித்தான் சிங்களத்தான் பார்!

இராட்சதன் இராசபக்சன்
பிச்சை மனிதர் பிறக்காத பூமியதை
நச்சு மகிந்தனவன் வந்துகண்டான்-இச்சான்
இராசபக்சன் இந்நாள் இராட்சதனாய் நின்றான்
தராசறிவீர் வற்பகைவன் தாக்கு!

இந்தியப் பழியும் ஈனமும் போக..
இந்தியா செய்தபழி என்றும் அழியாத
இந்தநிலை மாற்றுதற்கம் ஏதுஉண்டு-வெந்தநிலம்
சொந்தத் தமிழர் சுதந்திரமாய் வாழ்விடலே
இந்தியத்துக் குள்ளபணி ஏர்!

தேசத்தின் ஆத்மா தேசியத் தலைவன்!
வானம் இறுகி வரைகடலும் செங்குருதி
ஆன ஒருநிலத்தின் ஆத்மாவாய்-மானமொடு
போர்நின்ற மாத்தலைவன் பெற்றமகன் தன்னோடு
நேர்நின்றா ரென்பரணி நீளும்!


மாபெரும் தளபதிகளின் மானமண்!
பொட்டம்மான் தீபன் புலித்தேவன் சூசையொடு
மட்டற்ற வேங்கைகளின் மானமண்ணை-திட்டத்தால்
சீனாபா கிஸ்தான் சிறுமதியார் இந்தியமும்
தானாகி வந்தழித்தார் தான்!

அன்னைபடை மீண்டும் அவதரிக்கும்!
அறுபது ஆண்டாக அன்னைத் தமிழன்
சிறுமை படைத்தவரால் செத்தான்-குறுமதியார்
இந்தியத்தைக் கூட்டி இனக்கொலையை வைத்திடினும்
செந்தமிழன் வந்திடுவான் சொல்!


வேங்கைத் திருநாடு வெற்றிபெறும்!
கண்ணீர் உகுத்தநிலம் கற்பகத்து மான்புலிகள்
தண்ணீர்ச் சுனையாய்த் தரித்தநிலம்-மண்ணளந்த
வேங்கைத் திருநாடு வெற்றிவரும் நாளொன்றே
தீங்கான் மகிந்தனுக்குத் தீ!

புலிவீரன் மரணம் அடைவதில்லை..
போர்ப்புலியாய் நின்றரிய பொன்னுயிரைத் தானீந்து
வேர்ப்புக் கரையாத வித்துடலாய்-ஈர்ப்பு
அறுந்தெழிய எட்டப்பர் ஆகாத வேங்கை
மறத்தமிழர்க் கில்லை மரணம்!

பெற்றமண் எங்கும் பூக்களாய்...
என்னினிய செந்தமிழீர் எங்கள் அரும்புதல்வீர்
பொன்னாய் விடியல் பொறித்தவரே-இன்னுயிரால்
பெற்றமண் வார்த்துப் பெரும்பரணி ஆர்த்தோரே
நிற்பீரே என்றும் நிலம்!

கயமை அழியும்..
கண்ணீர் மலிந்து களச்சிறகில் நன்றிறுகி
மண்ணீர்க் குருதி வடித்தகதை-எண்ணீர்
கயமை கொடுத்தானைக் காலமது கொல்லும்
நியதி இதுவேதான் நில்!

புலிப்பரணி..!
பரணித் திருவெண்பா பாத்தொடுத்தேன் இந்நாள்
தரணிக் குரைத்தேன்யான் தாயீர்-முரசாய்
இருந்து முகவரிக்கு இட்டகரி காலன்
மருந்தாகி நிற்பானே மன்!


நிலத்தின் நேசர்க்கு வணக்கம்..!
இன்னுயிரைத் தந்தார்க்கும் எங்கள் சுதந்திரத்தின்
தன்னகத்தில் எங்கும் தரித்தார்க்கும்-மன்புலியாம்
தேசத் தலைவன் திரளாம் தளபதிகள்
வாசற்காய்த் தந்தேன் வணக்கம்!

-புலிவெண்பா முற்றிற்று-
ஐநூறு வெண்பாக்களுடன் புலிவெண்பா நூல்
விரைவில் எதிர்பாருங்கள்.

நற்கருத்து இட்ட நல்லோர்க்கு என் நன்றிகள்.
தமிழ்மணம் இணையத் தளம் மற்றும் எல்லா வகையிலும்
உலகம் பரவிய எண்ணவியல் மானிடர்க்கும் என்வணக்கம்.

சோலைக்குயில்

Saturday, June 27, 2009

புலிவெண்பா...!




இனப்பழிப்படலம்
ராசபக்சனும் கூனியுள்ளமும்..

அள்ளிவைத்த இந்தியமும் இத்தாலிச் சோனியளும்
கொள்ளிவைத்த போர்ப்படலம் கொள்ளீரோ-முள்ளிவாய்க்கால்
எல்லாமும் தீயாய் எரிந்தகதை கூனியளின்
சொல்லாம்ம கிந்தன் சுதி!

எல்லாம் தெரிந்தும் சதிசெய்த பான்கிமூன்
பான்கீச் சதியில் விசய்நம்பிக் கேடான
கூன்பட்ட அய்நாவின் கூத்தடிப்பில்-ஏன்சென்றார்
இன்றுவரை சொல்லால் இழுத்தகதை அல்லாமல்
துன்பத்தில் என்னமயிர் ஆச்சு!

ஆயிரம் இறந்தால் போர்க்குற்றம் இலட்சம் இறந்தால்..?
போர்க்குற்றம் என்றேதான் போட்டார் இசுரேலைக்
கூர்க்குற்றம் என்றதிந்திச் சோனியமே-மூர்க்கமென
எம்பதியில் வந்து இலட்சமாய்க் கொன்றோரைக்
கும்பத்தில் ஏற்றிவைத்தார் கொள்!

இந்தியத்தின் போர்க்குற்றம்..
இத்தா லியறுப்பாள் எம்தா லியறுத்தாள்
கொத்தாகக் குஞ்சுளைக் கொன்றாளே-இத்துணையில்
போர்க்குற்றம் இந்தியர்கே போடுவீர் மன்மோகன்
கூர்க்குற்றம் சோனியட்கும் சேரும்!

கருணாநிதி செய்த காலப்பழி..
செந்தமிழர்க் கென்று சிறப்புக் கடைவைத்த
நந்திகரு ணாதிக்கும் நாய்க்குற்றம்-சொந்தமக்கள்
பிள்ளை நலம்கருதித் தில்லிக்குப் போனாரே
கொள்ளிவைத்தார் ஈழமென்றே கொள்!

வெள்ளைக் கொடியுடனே வந்தோரைக் கொன்றசதி..
வெள்ளைக் கொடிகொண்டு வேளைவா என்றுவிட்டு
தள்ளிச் சுடவைத்தான் தக்கனுமே-முள்ளியிலே
தேவன் நடேசன் திசைவந்து கொன்றோர்க்கு
பாவபழி தீயுமிழும் பார்!

தமிழினக் கொடியரைத் தன்மடியில்..
நிலத்தை இனத்தை நிசத்தில் அழித்த
மலங்களைச் சேர்த்தான் மகிந்தன்-குலமாம்
தமிழர் குடிக்குத் தமிழெதிர் ஆன
உமிழெலாம் சேர்த்தான் உறி!

கிழக்கும் வடக்கும் கிடைத்த பழிகள்..
கிழக்கின் உதயம் உழக்கி நிற்கும்
முழக்கும் வடக்கின் வசந்தம்-அழப்பும்
கருணா இடக்ளஸ் கனிந்தவிக் கூட்டு
இருமும் கசங்கள் ஏர்!

பத்திரிகைகள் எரிப்பு: தேர்தல் குளிப்பு
செய்தியினைப் போடென்றார் செய்யாமல் விட்டதிற்கு
மொய்யாய் எரித்தார்கள் முட்டைகள்-கையில்
இராணுவம் வைத்து இடராய் வடக்கின்
கிராணமாய்த் தேர்தலாம் கேள்!

பழியர் ஒருநாள் பறப்பர்..!
எல்லாமும் எல்லா இடர்ப்பொழுதும் வல்;லாரின்
பொல்லாய் இருக்காது பெற்றமண்ணே-அல்லாட
வைக்கும் அரசும் வடிகிடக்கும் எட்டப்பர்த்
துக்கும்ஓர் நாளில் துறக்கும்!

ஈழமக்கள் கொன்றபழி இவர்களுக்கே..
ஈழமண் கொன்றோராய் இந்தியமும் பிள்ளைகளின்
வாழவென மட்டும்தீ மூக்காவும்-ஆழமென
ஆட்சிகண்டர் அல்லாமல் அன்னைமண்ணின் சாவெல்லாம்
நீட்சியிந்த நீசர் நிழல்!

-சோலைக்குயில்

படம்: நில்தை அழித்த சுவாமிநாதனும்
தமிழ்க் குலத்தை அழித்த மகிந்தனும்..

Saturday, June 20, 2009

இராட்சதம்!


இராட்சதம்!

இராட்சதன் இராசபக்சன்...
இராட்சதன் காதை எழுந்தது போலே
இராசபக்சன் வந்தான்காண் இன்று-மராட்டிய
மண்போலே வீரம் மலர்ந்த ஈழத்தைக்
குண்டால் அழித்தானே கூற்றன்!

தமிழ்மாதரைக் கற்பழிக்கச் சொன்னான் கோத்தபாயா...
கோத்தபாயா அந்தக் குலக்கழிவுப் பக்சனுமாய்
நாத்திவிட்டான் வன்புணர்ச்சி நாறவே-ஊத்தையர்கள்
பொற்தமிழர் மாதரைத்தான் புத்தபடை தான்குடிக்கக்
கற்பழிக்கச் சொன்னானே காடை!

தாய்முன்னே ஒரு சிறுமியின் கற்பழிப்பு..
தாய்மடியில் நின்றவளாம் தங்கச் சிறுமகளை
பேய்க்கழிவாய்க் கற்பழித்துக் கொன்றாரே-சேய்துடித்து
மாள்வதனைக் காண மனம்பதைத்த அன்னையவள்
தாள்பாறி வீழ்ந்தாளே தான்!

எரிந்து சிதறிய மக்கள்..
இலட்சக் கணக்கில் இடம்பெயர்ந்த மக்கள்
நிலத்தில் கிடந்துயிரை நீத்தார்-மலட்டு
மகிந்தன் இனவழிப்பான் வன்படையை ஏவி
மகிழ்ந்தான் தமிழினமே மாள!

இராசயனக் குண்டு எரிந்தது பூமி...
இரசாய னக்குண்டு ஏவிவிழத் தீயாய்
நரமாமி சப்பக்சர் நட்டார்-மரமாமி
இந்தியக் கூட்டார் எரிகுண்டாய்ப் போட
மந்திக்கை யானதம்மா மண்!

பதின்மூவாயிரம்போர் சென்றதெங்கே?...
வாலைக் குமரியரை வந்தன்னை முன்னாலே
சூலமுனை ஈட்டிகொண்டு சென்றுவிட்டார்-ஆலமென
பத்துமூன் றாயிரமாய் பாவையர் வாலிபராய்
எத்துமுனை கொண்டுற்றார் ஏன்!

கூனி சோனியா...
கூனியாய் வந்து கொடும்;கூற்றம் போலேதான்
சோனியா வாய்த்தாள் சுளையாக-மேனியாய்ச்
சுக்குநூ றாக்கிச் சிதறும் சதைவயலாய்க்
கக்கவைத்தார் எங்கரத்தக் காடு!

சிறுவர்களைப் பிரித்தெடுத்து..
பிஞ்சுகளைக் கூட்டிப் பெயர்ந்து பிடித்திழுத்து
அஞ்சியஞ்சி வீழ அடித்திழுத்தார்-நஞ்சுகளாய்
எங்கே இடித்திழுத்தார் எங்கிருக்கா ரென்றநிலை
எங்கும் குமுறுமலை ஏர்!

உணவின்றி மருந்தின்றியும் இறப்பு...
உணவும் குடிநீரும் இன்றி முதியோர்
கணமும் இறக்கின்றார் காணீர்-வணங்காமண்
கப்பலில் போனதுவோர் காலத் துணவுகளை
ஒப்புவிக்கா ஆட்சியது ஊனம்!

தமிழர்மண் பறித்தெடுக்கச் சதி...
முகாமுக்குள் வைத்து முதுசத்து மண்ணை
தகாது பறிக்கவே தாயம்-புகாவாறு
முள்ளுகம்பி போட்டு முடக்கி அதற்குள்ளே
தள்ளிவதை செய்குதடா தாட்டம்!

எட்டப்பர் கூட்டும் கூட்டம்..
எட்டப்பர் துட்டர் எழியர் அடிமையென
துட்டப்ப ரோடு துகில்கிடப்பார்-பட்டியென
மண்ணைப் பறிகொடுக்க வாய்தொடுக்க மாட்டாதார்
கண்ணிலே குத்துகிறார் காண்!

இருபதினாயிரமும் கருணாநிதியும்..
இருபதி னாயிரம் ஓர்நாள் இறக்க
கருணா நிதியாரும் கண்டார்-பெரும்தில்லை
சென்றார் கதைத்தார் பெரும்பதவி பெற்றாரே
நன்றெம்மைச் சாகவிட்ட நாதர்!

நடிகர்களை ஏவிவிட்டு...
ஆந்திரவில் ஓர்நடிகன் சென்னையிலும் ஓர்நடிகன்
நீந்திவிளை யாடிவைத்து நின்றாரே-சாந்திடலில்
ஈழமண் கொன்றோரை இந்தியத்தில் ஏற்றிவைத்த
ஆழமே எங்களின் ஆப்பு!

சுயமிகளால் வெந்த தமிழீழம்...
சுயநலங்கள் ஏற்றிவைத்த சொந்த நலனில்
அயலீழம் கொன்றாரே ஆரீர்-கயமைகளால்
எட்டப்பர் இந்தியர் ருஷ்யமும் சீனாவும்
கெட்டவராய்த் தொட்டழித்தார் தேசம்!

-சோலைக்குயில்
(picture:Mary statue distroyed by the lanken bombing)

Sunday, June 14, 2009

பிரபாகரம்


பிரபாகரம்!

தேவனெ உதித்த தீரன்!
பிரபாக ரப்புதல்வன் பெட்புமிகக் கொண்டு
வரமாக வந்துதித்த மாறன்-குரலாகக்
கோவில் தரும்தெய்வம் கொற்றமிறை தாம்பாடும்
தேவன் எனவுதித்த தீரன்!

இவன்மொழி மண்ணின் வேதம்
சொல்லில் இவனுரைத்தால் தெய்வமிடும் வீரமொடு
வில்லில் இவனுரைத்தால் வெற்றியிடும்-கல்லிலே
மந்திரத்தில் மாங்காய் மயக்க முடியாதான்
இந்தயுக வார்ப்பே இவன்!

எட்டப்பர் பலர் கட்டபொம்மன் ஒருவனே!
பெண்டுபல் கண்டோர் பிடிமாது கண்டவர்கள்
கண்டவழி கண்டு கடித்தவர்கள்-உண்டுவர
எட்டப்பர் ஆனவர்கள் எல்லோரும் தீயர்எம்
கட்டபொம்மன் மட்டும் கடவுள்!

இவனும் தூயன்..இவன்படையும் தூயபடை
என்றுமிவன் தூயன் இவன்படையில் வந்தாராய்
அன்னமென நின்றோர் அறமாதர்-வென்றபுலி
வேங்கைப் படைவகுத்து வேதமாய் நற்றமிழை
தாங்கிநடந் தானிவனே தம்பி!அறம்வெல்லும் அறிவன்!

நம்புவான் நம்ப நரிவேலை செய்தாலே
தும்பிவான் போலே திரியானே-நம்பியவர்
கெட்டவராய் மாறிக் கிளர்ந்துபடை தந்தாலும்
வெட்டியறம் செய்வான் விரதன்!

போர்க்கைதி கண்ட பிரபாகரன்!
சிங்கப் படையவரைச் துட்போர் பிடித்தாலும்
எங்குமவர்க் கின்னல் இவன்வையான்-சிங்களத்துப்
போர்ப்படஞன் பத்திரமாய்ப் போன்பின்பு தானுவந்து
வார்த்தைகளால் நன்றிசொன்னான் வையம்!

மாதரை மதித்த மாமகான்!
மாதுக்கள் நாடான் மணிநிலத்து மக்களின்பால்
பாதுக்கை யானவனே பாரறியும்-சூதுவைத்துப்
போனவர்போல் போகான் பிரபாகம் ஒன்றாலே
ஆனதிவன் மண்ணின் அறம்!

வேரார் பரணி இவன்!
மூண்ட கனத்தாலே முற்றிலுமாய் இந்தியத்தின்
பேண்ட குணத்தாலே போரிழந்தோம்-யாண்டும்
பிரபாகரத் தோன்றல் பெருநிலத்து வேரார்
பரணிக் கிவன்தெய்வம் பார்!


கூன்நிமிர்த்த வந்த கோ!

பிறந்து வரும்பொழுதே பெய்நிலத்திற் கானான்
இறந்து குறிப்பெழுதான் என்றும்-குறைமனிதன்
தான்சாவான் பாரீர் தலமுறையும் எம்தலைவன்
கூன்நிமிர்த்த வந்திடுவான் கொள்!

பிரபாகரத்தாய்!
பேச்சு எலாம்நீதி பொன்விழியில் மண்சுவடு
மூச்சு எலாம்தூய மேவுமறம்-பூச்சாகிப்
போயகலான் நிற்பான் பிரபாகப் புத்தகமே
தாயகமாய் வந்துதிக்கும் தாய்!

-சோலைக்குயில்

Wednesday, June 10, 2009

காட்டிக் கொடுத்தான்..


இருந்து காட்டிக் கொடுத்தவன்
இறந்ததாயும் காட்டிக் கொடுத்தான்..

--------------------------------
போரில் நடந்த புலிகளின் தடங்கள்
புத்தகங்களாக மலர்ந்தபோதுதான்..
உலகம் வியப்புக்குள் இறங்கியது..

முறிப்புப்போர், முற்றுகைப்போர், உடைப்புப்போர்,
ஊடறுப்போர் என எண்ணற்ற வகைகள்
போர்ப்பரணிகளாக விரிந்தன..

பல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில்
பாடப் புத்தகங்கள் ஆகின.

இழப்புகளிலிருந்தும், இறப்புகளிலிருந்தும்
உயிர்த்தெழுந்தது தமிழினம்.

இருப்புக்கும் உரிமைக்குமான அறுபது ஆண்டுகால
இரத்த இறைப்பு தமிழன் இனத்தின்
தார்மீகத்திற்கானது.

மகிந்த சிந்தனை என்ற மதத்த சிந்தனை
தமிழன் மரணத்திற்காகவே எழுதப்பட்டது.

மண்ணின் அபகரிப்புக்காகவே தமிழனுக்கு
மரணம்படுக்கை கொடுக்கப்படுகிறது.

இராசபக்ச இன்று இராட்சதபக்சவாய்
ஆகிக்கொண்டபோதுதான்
இலட்சம் மக்களின் குருதி
ஆறாய் ஓடியது.

குஞ்சும் குருமானுமாய் தமிழன்
கூட்டி அள்ளப்பட்டான்.

இந்தியக் காந்தி வம்சம்
ஈழத்தமிழனின் இறப்புக்காக
இலங்கைக்கு இறைத்துக் கொடுத்தது.

மேற்குலகம் பார்த்துக் கதைக்க முடிந்ததே ஒழிய
மரண ஓலத்திற்கு ஒரு
மண் அள்ளிப்போடக்கூட முடியவில்லை..

வன்னியில் மரண ஓலம்..
வதைமுகாம்..
கண்டியில் குளுகுளு வெப்பத்தில்
கதைத்துக் கொண்டார் பான்கிமூன்.

எங்களை இறக்க வைத்த இந்தியம்
போர்க்காலக் குற்றங்கள்
போர்த்தப்பட்டிருக்கும் இலங்கவை
காப்பாற்ற நிற்கிறது ..

எங்களுக்கு யார்துணை?

உலகவீதிகளில் நின்று
உரக்கக் கூவினோம். ஆனாலும்
கூட்டி அள்ளிய முள்ளிவாய்க்காலின்
கொடுமையை யார்தான் தடுத்தார்கள்.?

பொங்கி எழுந்த எங்கள்
குரல்கள் பூமிக்கு அடியில்
போடப்பட்டபோதுதான்..
இராசபக்ச எரித்து முடித்தான்.

பாதுகாப்பு வலயமென்று
பாடி அழைத்து
ஊதி எரித்த இந்தக் கொடுமையைப்
பார்த்தபின்னாலும்
அய்யன்னா அமைப்பு
அரச விருந்தாளியாக வந்துபோகிறது..

ஆனாலும்..
தீர்வுகள் மறுக்கப்பட்ட எங்கள்
பூமியில்,

தேச இனம் எரிக்கப்பட
பாச நிலங்களில்..

இனி அந்நியனுக்குப் பாதபூசை
செய்யப் பக்கத்தில் இருக்கின்றன.
பாவ சென்மங்கள்..

இருந்து காட்டிக் கொடுத்தவன்
இறந்ததாயும் காட்டிக் கொடுத்தான்..

ஆமாம் எங்கள் கைகளே
எங்களின் ஒத்தடங்கள்..

அய்நா மன்றை
அரங்காய் மாற்றுவோம்

இணையத்தளங்களில் உண்மையை
உரைப்போம்.

இனத்திற்காக எழுந்து நடப்போம்.

அகிலத் தெருக்களில் அறம் எழுதுவோம்.

உலகத் தமிழா உறக்காதே..
உறங்காதே..

எழுந்து நடப்பாய்..
இனமாய் எழுவாய்..
-எல்லாளன்.
நன்றி: தமிழர் தகவல்..

Sunday, June 7, 2009

இந்தியா.


புலிவெண்பா..
வன்னி வரலாற்றுப்போர்
அத்தியாயம்-04
இந்தியா.


இந்தியா புண்ணிய பூமியா?
புண்ணிய பூமியென்றும் பொற்கீதை நாடென்றும்
எண்ணியதோர் பாரதமின் றிப்படியா?-குண்டெறிந்து
ஈழத் தமிழர் இறப்பில் மகிந்தனுக்கு
சூழக் கைகொடுத்தார் சொல்!

இரசீவ் கொன்றது ஏழாயிரம்
இலட்சம் கொன்றனள் சோனியா கூட்டு
இரசீவார் அன்றேழு ஆயிரத்தைக் கொன்று
சிரசறுத்து வந்தகதை சொன்;னோம்-அரக்கரென
இன்றுசிறீ லங்கா இரசாய னக்குண்டால்
கொன்றெரிக்க இந்தியமே கூட்டு!

இந்தியா உருவாக்கிய இட்லர் இராசபக்சா
இந்தநூற் றாண்டதினில் இட்லர்க்கும் மேலாக
மந்தெரித்தல் போலே மடியவைத்தான்-இந்தியமே
சொல்ல மகிந்தன் சுவடழித்து வன்னிமண்ணை
கெல்லி எறிந்தானே கேள்!

உலகை அண்டவிடாமல் இந்தியா..
இந்தியம்தான் எல்லாம் இரசீவான் பாணியிலே
சந்தி முழுவதிலும் சாக்காடு-உந்துலகம்
ஓடிவரக் கூட ஒருவரையும் அண்டாமல்
மூடி அழித்தாரே மூடர்!

மக்களைப் புதைகுழிக்கு அனுப்பிய இந்தியா
முப்பதி னாயிரமாய் மேல்மக்கள் சாவேற்க
முப்பதி னாயிரமாய் ஊனமுற-துப்பலாய்க்
குண்டு எறிந்துவிழக் குப்பையாய்த் தானீந்து
சண்டி புரிந்தாளே சோனி!

இந்தியா தன்வேலையைப்
பார்க்கவெனக் கூறும் பக்சர்கள்

ஒருவருமே இல்லாமல் ஊரழித்த பின்னால்
செருக்கோடு இந்தியத்தைச் சொல்லிக்-கருக்கோடு
கோத்தபாயா சொல்லும் குறிச்சொல்லில் இந்தியர்க்கு
வாத்தியார் வேலையென்றான் வார்!

சீனா கோர்த்த இந்தியக் கழுத்து முத்துமாலை
சீனாவான் பாகிஸ்தான் சேர்ந்த இலங்காவை
ஏனோதான் அறியாயோ இந்தியமே-மூனாவாய்
முத்து மணிமாலை முடிச்சிறுக்கும் சீனாதான்
குத்திவரப் பாரடிநீ கேடு!

அழப்பிகளே இன்று இராசபக்ச அணி
புலியை அழித்துவிட்டு பேயெல்லாம் கூழாய்
எலியார்க்கு மாலையிட்டார் இன்று-வலிமை
இழந்தானே பிள்ளையான் எங்கோ மறைந்துவிட்டான்
அழப்பிகளே இன்றோர் அணி!


இந்தியப்பழி ஈழமெழுதிய சரிதம்
இந்தியத்தாற் சூழ்ந்தவினை ஈழம் அழிந்துபட
வந்த பழியொன்றும் மாறாது-உந்துலகம்
எங்கும் தமிழர்க்கு இந்தியமே ஊறுசெய்யும்
சங்கறுத்து நிற்குதடா சாற்று!

பாருலகம் எல்லாம் பழியேற்றும் இந்தியா..

வேருலகம் எல்லாம் விதந்துயரும் தமிழர்களை
கூரெறிந்து செயலாற்றிக் கேடாற்றும்-பாருலகில்
இந்தியத்துக் கென்ன இருந்தமிழன் சாவின்மேல்
வந்துபழி யாற்றுதடா வார்!

அய்நாவில் இலங்காவைக் காப்பாற்றி இந்தியா..

போர்க்குற்றம் கொண்ட கொழும்பார் அரசின்மேல்
நூர்க்குற்றம் அய்நா நொடிக்குகையில்-பார்க்குத்தன்
வல்லளவும் சொல்லி மகிந்தரசைப் காப்பாற்றி
கொல்லெழியர்க் கிந்தியமே கோ!

இலட்சம் தமிழ்மக்கள் இறந்ததிற்கு
ஒருவார்த்தை சொல்லாத சோனியா!

இத்தனை மக்கள் இறந்தார்க் கொருவார்த்தை
சுத்தமாய் இல்லாத சோனியா-நத்துகிற
பேயிலங்கை நாடிப் பிடிகையில் சீனாதான்
காயிறுக்கக் காட்டுமடி காதல்!

பிரபாகரனைக் கொல்ல சோனியா-
கருணாநிதி போட்ட கூட்டு

மாநிலத்தில் மூக்கா மனதுபடை யாளுகையில்
பூநிறத்தில் மாற்றமெதும் போடாது-மானமகன்
எம்ஜீயார் போனபின்பு இ;ன்தமிழர் மாநிலத்தின்
செம்மையெலாம் போனதடா செப்பு!
-Solaikkuyil

Friday, June 5, 2009

அய்நா மண்குதிரை


புலிவெண்பா..!
இந்தியக் கொடுமையும்..
அய்நா மண்குதிரையும்..


அய்நாவின் வஞ்சிப்பு
வக்கில்லா அய்நாவும் வஞ்சித்து விட்டதென
இக்கணத்தில் ஊடகங்கள் ஏடுஇட்டார்-துக்களமாய்
ஆயிர மாயிரமாய் அள்ளுமக்கள் தானிறக்கும்
பேயிறங்கப் பார்த்திருந்தார் பித்தர்!

அய்நா ஒரு மண்குதிரை
மண்குதிரை நம்பி மறிகடலை நீந்திவரக்
கொண்டுலகம் பார்ப்பதுவும் கேடாமே-குண்டுகளால்
பிய்த்தெறிந்த சாக்கிடங்கைப் பேசாமற் பார்த்திருந்த
அய்நாவால் என்னபயன் ஆர்!

சதீஷ் நம்பியாரும் விஜய் நம்பியாரும்..
தம்பியாம் நம்பியார் தக்கனுக்கும் தானவனின்
நம்பியார் அண்ணனோ நாயகர்க்கும்-கக்கமிட்டு
ஆலோச னைசொல்லும் அச்சு மலையாளிச்
சாலோச னைக்குண்டோ சாறு!

சரணடையச் சொல்லி சாக்கொடுத்த சதி..
வெள்ளைக் கொடியுடனே வேளைவா என்றபின்னே
கொள்ளிப்பேய் சுட்டுவைத்த கேடுஎன்ன-குள்ளர்
தெரிந்தும் அய்நாவைக் கேட்டபின்னே சென்றோர்
சரிந்ததுவும் நம்பிச் சதி!

கண்டியிலே பேசிவந்தும் காணாத பான்கீமூன்..
அய்நாச் செயல்மூனார் அக்கிரமம் சொல்லாமல்
பொய்நாவாய் நின்றிலங்கா போய்வந்தார்-மெய்நாவாய்
நின்றுலகம் செய்தல் நிகழுலகம் வைக்காமல்
மன்று எதற்கோதான் மன்!

ரைம்தாள் புரிந்த தர்மம்..

திரைம்ஸ்தாள் மானிடத்தின் தேடல் நடத்தி
உரைத்தார் இலங்காப்பேய் உண்மை -வரைந்தார்
இனத்தமிழர் வன்பதைப்பு ஏடெடுத்துக் காட்டி
மனத்தளவில் வென்றார் மனிதம்!

இனத்தைக் கொன்றபின்னும்..
இந்தியா எம்சாவுக்காய்..

பல்லாயிர மாய்மக்கள் பட்டழித்த பின்னாலும்
கொல்லாதி ருக்கக் கொள்ளவில்லை-சொல்லுறுத்தி
இந்தியா மூர்க்கம் இருந்தய்நா மன்றத்தில்
செந்தமிழர்க் கின்னலிட்டார் சொல்!

இந்தியாவின் சதியில் தென்னாபிரிக்கா..
எங்களுக் காக இருந்ததென் னாபிரிக்கா
சிங்களத்திற் காகவெனச் சேர்ந்தளித்தார்-முங்குளித்து
இந்தியா செய்த இயமப்பி ரச்சாரம்
உந்துபழி யாச்சேர் உலகு!

பக்கமிருந்த பன்னிரண்டு நாடுகள்..பன்னிரண்டு நாடுகளாய்ப் பக்க மிருந்துலவி
இன்றிலங்காப் போர்க்குற்றம் என்றுரைத்தார்-இன்கனடா
அய்ரோப்பா ஒன்றியம் ஆர்பிரித் தானியா
மெய்யுரைத்தார் எங்கதுயர் மேவி!

எமக்கு இந்தியா செய்தபழி
என்றும் அழியாது..

பாழ்பட்ட இந்திப் படுபாவிச் சோனியர்கள்
ஊழ்பட்டுப் போக எமையழித்தார்-ஊழ்வாய்
உருச்சியா சீனாவும் உக்குபா கிஸ்தானீர்
இரச்சாய னம்கொடுத்த எத்தர்!
-சோலைக்குயில்.

Tuesday, June 2, 2009

இராணுவக் கடைசிநாள்..



இராணுவக் கடைசிநாள்..

கதறக் கதறக் கருக்குலைத்தான் பெண்கள்
உதற உருக்குலைத்தான் உத்தன்-பதறவே
தாய்முன்னே பிஞ்சை தறித்துப் பறித்தெடுத்து
பேய்போலே வற்பிசைந்தான் பேய்!

பத்துபதி னைந்தான பாற்சிறுவர் ஆயிரமாய்
கொத்துவெனப் பல்லோரைக் கொண்டுசென்றான்-புத்தநில
வீடுகளில் வேலைசெய விட்டிருக்கான் பின்னாளில்
பாடுகிற சிங்களனாய்ப் பார்க்க!

தங்கத் தமிழ்மகளிர் தார்க்கூந்தல் கத்தரித்து
பொங்கும் புலியென்று போட்டழித்தான்-சிங்கபடை
கற்பழித்தான் கொன்றான்காண் கண்டதுண்ட மாக்கியவன்
பற்றைகளில் விட்டெறிந்தான் பார்!

நாளையொரு சந்ததியாய் நம்தமிழர் இல்லாமல்
வேளையொரு தந்திரமாய் வேரழித்தான்-கோளை
இனம்படக் கொன்று இசுத்திரியாய் மாறி
வனத்தரக்க ராய்நின்றான் வார்!

கோத்தபாய வென்ற துட்டப ரம்பரையான்
அத்துபடி கற்பழிக்க ஆணையிட்டான்-மூத்திரமாய்
நக்கிக் குடித்து நமதெட்டப் பர்களெலாம்
பக்கமெனச் சிங்களத்தே பார்!

இருந்தபோதும் காட்டி இடம்பெயர்ந்தான் அந்தக்
கருணாவெட் டப்பன்தான் காணீர்-பெருந்தலைவன்
வார்சடலம் ஈதென்று மார்தட்டிச் சாவுற்ற
ஓர்சடலம் தானுரைத்தான் ஓர்!

இடக்ளசான் துள்ளி எழுந்தான் மகிந்தன்
அடக்கிவைத்த ஆட்சியிலே ஆள்வான்-மடக்காய்
மடக்கென்று செம்புலியை மார்தட்டிப் பேசி
அடக்கென்றான் அந்நியற்காய் ஆ!

அரசியலார் நடேசன் அகிலத்து ஓர்வால்
கரவெள்ளை காட்டவே கண்டும்-பரதேசிச்
சிங்களத்தான் சுடவேதான் சேர்புலித் தேவனொடு
வெங்களத்திற் செத்தாரே வீரர்!

போர்க்கைதி யாயிருந்த பொல்லார் பெரும்படைஞர்
ஊர்ப்பிள்ளை போலே உவந்தளித்து-ஏரேழ்வர்
பத்திரமாய்ப் போகவிட்ட பண்புலியைக் கொன்றானே
புத்திகெட்ட புத்தபடை போ!

சிங்களத்தில் ஓர்மகனும் சாக விலைகொடுக்காத்
தங்கமென நின்றான் தலைவனே-பொங்குமுளம்
ஆரப் பெருங்குணத்தால் ஆரமுதன் ஆனானே
சூரியப் பொன்மகனார் சொல்!
-சோலைக்குயில்.