பிரகடன ஆண்டாகப்
பிறந்துநீ வருக!
பிரகடன ஆண்டாய்ப் பேறு சொல்லி
இரண்டாயி ரத்தொன்பத் தெழிலாய் மலர்க!
முரண்டு பிடித்த மோடய இனத்தில்
திரண்ட கொலையே தீர்வாய் மகிந்தன்
ஆட்சிக் கவளம் அளித்தது எனினும்
மீட்சி ஒன்றே வேதமாய் ஒலிக்க
தமிழர் நிலத்தில் தானைபு லிப்படை
அமிழ்தாம் மக்கள் அனைவரும் ஒன்றாய்
நிற்கும் வேளையில் நீவந் தாகினை!
கொலைவெறி ஆடிய கூட்டம் மகிந்தன்
புலையன் என்றவர் போக்கினைக் கண்டோம்!
குலைந்து குலைந்து அகதிகள் ஆக
அலைந்து திரிந்த அரும்தமிழ் மக்கள்
ஒதுங்கிய இடத்திலும் எங்கும் குண்டுகள்
பிதுக்கித் துப்பும் பேயர்கள் மத்தியில்
தமிழர்கள் இனிமேல் தங்களைக் காப்பது
இமியும் உண்டென இனிமேல் இல்லை!
யாழ்குடா அவர்களின் யமக்களம் தினமும்
ஏழ்எட் டென்று இழுத்து அடித்து
பாழ்பட் டவர்கள் பார்க்கவே வைத்தார்!
கீழ்படத் தமிழன் கிழக்கை உழக்கிய
சூழ்வினை வந்து திருகிடும் போதில்
ஊழ்வினை என்று இருந்திடல் ஆகுமோ?
சோறும் அவிழும் தீண்ட அந்நியன்
நாறும் கொடுக்கில் நாதியே இன்றி
எட்டப்பர் துட்டர் என்று ஒட்டுக்
கெட்டவர் வரிசைக் கின்னும் தமிழரா?
சிங்களத் தொட்டிலில் திரவிய அரசியல்
மங்களம் பாடும் மதியிலார் பாராய்!
நுங்கறுத் தல்போல் நிலமெலாம் ஆட்சி
எங்ஙணும் கொட்டும் இடறுவார் கண்டும்
தமிழனை எண்ணாத் தறிகெட் டவராய்
சுமையினை எழுதிச் சரித்திரம் சொல்வதா?
இந்தவோர் ஆண்டு எங்களின் விதியை
தந்திடும் ஆண்டாய்த் தமிழன் எழுதப்
பொந்தெலாம் எழுவோம் புகலாய் அகதிகள்
சிந்திய அழுகுரல் தீண்டிய சிங்களம்
அட்டியை நொருக்கி அன்னை ஈழத்தில்
கொட்டிய முரசக் கொற்றவம் செய்வோம்!
உலகம் முழுவதும் ஓங்கிய தமிழரீர்
அலகாய்ப் புதிய ஆண்டினை எழுதுவோம்!
தமிழகத் தமிழா தாரணி எங்ஙணும்
கமழும் தமிழா கைகொடுத் தகிலம்
எழுந்திடும் இனங்கள் எங்களின் சுயத்தின்
விழுமியம் காட்டி விதந்திடும் பல்லோர்
தமிழீ ழத்தின் தாரகம் ஏற்று
தமையே தந்த தனித்துவம் வாழ்த்தி
வேங்கைத் தமிழரும் விடியலுக் காக
ஏங்கித் தவிக்கும் எங்கள் மக்களும்
வெற்றிகள் கண்டு மகிழ்ந்திடும் ஆண்டாய்
பற்றிநீ வருக பாவைபுத் தாண்டே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment