Friday, December 26, 2008

சுயமுயற்சி சொல்லும் வெற்றி

சுயமுயற்சி சொல்லும் வெற்றி: 07

பாதையிற் திட்டம் இன்றேல்?


திட்டமிட் டெதையும் செய்தால்
தோல்விகள் மறைந்தே போகும்
பட்டவேர் மடியில் நின்று
பசுந்தளிர் மீண்டும் தோன்றும்
நட்டநல் விதையே என்றால்
நாற்றிடும் விளைச்சல் காண்பாய்
கெட்டது கனவென் றெண்ணு
கீற்றென உதித்து வாராய்!

வட்டிலைப் பார்த்து நின்றால்
வாய்க்குளே சோறா போகும்
முட்டியைப் பனையிற் கண்டால்
முகவாயிற் கள்ளா சிந்தும்
எட்டிநீ ஏறு ஏறு
இயலெது கணக்குப் போடு
தொட்டது துலங்கும் காலம்
தூரனின் சலவைக் கல்லே!

தூங்கினால் தூங்கிச் சாவாய்
சோம்பினால் சோம்பிச் சாவாய்
ஏங்கினால் ஏங்கிச் சாவாய்
இயலிது அறிவாய் தம்பி
மூங்கிலில் துளைகள் போட்டால்
மொய்குழற் கீதம் போடும்
காங்கையில் ஊதி னாற்றான்
கடும்சுடர் விளாசும் எம்பி!

தளமதின் சிறப்பே ஆடும்
தாரகைப் பரதம் பாயும்
உளமதும் கணக்கே வெற்றி
உதிப்பதும் மதியின் நுட்பம்
அளவுகோல் முதலிற் பொள்வாய்
அறிவுளே படிமம் சொல்வாய்
கொளமிகக் கொள்ளும் எண்ணம்
குதித்திடும் கயலைப் போலே!

கணக்குகள் இல்லாக் கப்பல்
கடிமனம் சொல்லாக் காதல்
பிணக்குகள் தீர்க்காப் போதம்
பேச்சிலே அளக்கும் வாதம்
மணக்குகை யாகிப் போகும்
மனச்சிற கொடிந்து போகும்
பணச்சிற கிழந்து நாறும்
பாதையிற் திட்டம் இன்றேல்!

-புதியபாரதி

No comments:

Post a Comment