Tuesday, December 30, 2008

வரலாற்று ரீதியான ஒரு சாதனை.


வரலாற்று ரீதியான ஒரு சாதனை.
எழுதுவதை அச்சாகப் பதியும் தமிழ் மென்பொருட்கள்.

இன்றைய நாள். 29-12-2008. இந்த ஆண்டின் இறுதி நாட்கள் ஒரு வரலாற்று சரிதமாக அரங்கேறியது. கணினி அல்லது கணனி எது சரியென்பதை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கணினி இப்பொழுது ஈழத்தமிழனின் ஒரு அங்கமாக மாறிவிட்டிருக்கிறது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

கனடா ரொறன்ரோவில் வாழும், வாழ்ந்து கொண்டிருக்கிற இரண்டு கணினி வல்லுனர்கள் விஜயகுமார், சசி.பத்மநாதன் என்ற இருவரதும் தமிழ் எழுத்தாக்கமே
தமிழ் தட்டச்சு வடிவை உருவாக்கிக் கொண்டதை நாம் அறிவோம்.

அவர்களுக்குப் பின்னர் பலர் எழுத்து வடிவமைப்பைத் தமிழில் உருவாக்கிக் கொண்டாலும், கனடாவில் தமிழர் மத்தியில் இந்த இருவரது எழுத்தாக்கங்களே பத்திரிகை, எழுத்து, அச்சு, விளம்பரம் என பல துறைகளில் மைற்கற்களாக விளங்கிக் கொண்டன எனலாம். உலகம் முழுவதும் இவர்களின் எழுத்து வடிவங்கள் வலம் வருகின்றன என்பது அடுத்த உண்மையாகும்.

அதுதவிர, வரலாற்றுப் பொறிமுறை தத்துவ வாதிகளாய் பல்துறை சார்ந்த விற்பன்னர்களாக தமிழர் தனித்துவம் பெற்று வளர்கின்ற காலப் பதிவேட்டில் சர்வதேச கற்கை நெறிகளில் தமிழர்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் மூன்று மென்பொருட்களை இன்று சிவா.அனுராஷ் என்ற இளைஞர் வெளியிட்டதின் மூலம் ஒரு வரலாற்றுப் பதிவை எடுத்திருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்.

பொன்மொழி, பொன்விழி, பொன்பேனா என்ற பெயரோடு இந்தக் கணினி மென்பொருட்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

தமிழ் ஊடக, வாழ்வியல் கல்வித் துறையில் பெரும் மாறுதலைக் கொண்டு வருகின்ற-ஆங்கில மைக்குறோசொப்ற் வடிவத்துக்கு நிகரான தமிழ் வடிவத்தைப் புகுத்தும் ஒரு சாதனையாக இந்த மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கணனிப் பலகையில் கையால் எழுதப்படும் தமிழ் வார்த்தைகள், கணனியில் அதே தமிழ் எழுத்து அச்சாக மாறும் அல்லது மாற்றக் கூடிய பக்கமாக உருப்பெறும் மென்பொருள் பொன்பேனா என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருகிறது. அதாவது நீங்கள் கையால் எழுதுவது உடனடியா அச்சுக் கோர்க்கப்படும் என்று சொல்லுங்கள்.

இரண்டாவதாக பொன்மொழி மென்பொருள். இந்த மென்பொருள் மூலமாக பழமொழிகள், சொற்தொடர்கள், இன்னும் நீங்கள் ஒரு ஆக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டிய சொற்றொடர்களின் ஒரு சொல்லை பதிந்தால், அதன் மூலம் உருவாக்கக் கூடிய முழுவதுமான முழுமையான வடிவத்தை கணினிப் பக்கத்தில் எழுதித் தந்துவிடும்.

மூன்றாவதான மென்பொருள் பொன்விழி என்பதாகும். ஒரு பதிவேட்டில் இருக்கும் விடயத்தை, அல்லது புத்தகத்தின் பக்கங்களை ஸ்கானரில் பதிந்து அனுப்புகிற பொழுது அதன் எழுத்து வடிவங்கள் கணனிப் பக்கத்தில் அச்செழுத்தாக அந்த விடயங்கள் பதியப்படும்.

மூன்று மென்பொருளும் தமிழுக்காக, தமிழில் வடிவமைக்கப்பட்டது ஆகும்.

மூத்த பத்திரிகையாளர் தமிழர் தகவல் ஆசிரியர் எஸ்.திருச்செல்வம் தலைமையில் நடந்த இவ்விழாவில், அருள் சுப்பிரமணியம், பொன். விவேகானந்தன், விஜய் குலோத்துங்கம், பொன்.பால்ராஜன், குயின்ரஸ் துரைசிங்கம், கணா.ஆறுமுகம் ஆகிய பல்துறை அறிஞர்களால் பெரிதும் விதந்து உரைக்கப்பட்டன இந்த மென்பொருட்கள்.

தமிழில் முதன்முறையாக வெளிவரும் மென்பொருட்கள் என்ற-தமிழர்களது சாதனையில் முதன்முறையாக என்பதான சிறப்புக்களை விளக்கவுரையாளர்கள் எடுத்துரைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னுமாக, இளைஞர் சிவா.அனுராஜ் அவர்கள் வாயால் உரைப்பதை தட்டச்சாக மாற்றும் மென்பொருள் ஆராய்ச்சியில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார்.

சிவா.அனுராஜ் நன்றி தெரிவித்துப் பேசினார்.

கணினிக்கான துறையில், உத்தமம் என்ற அமைப்பில் இருக்கும் ஒரே ஒரு தமிழ் உறுப்பினர் சிவா.அனுராஜ் அவர்கள் என்பது தமிழருக்கான பெருமை ஆகும்.

அவரோடு நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

Tel: 416-273-5811
info@pontamil.com
www.pomtamil.com
www.pontamil.com


-புதியபாரதி

No comments:

Post a Comment