Friday, December 26, 2008

சுயமுயற்சி சொல்லும் வெற்றி:04

உனக்குளோர் உலகம் உண்டு!


உன்னைநீ அறிவாய் தம்பி
உனக்குளோர் உலகம் உண்டு
சின்னவன் என்று நீயும்
சினந்திடில் அதுவே குண்டு
மன்னவன் என்றே எண்ணு
மலையையும் சுமக்கும் சக்தி
தன்னிலே வந்து சேரும்
தடையெலாம் பொடியாய் ஆகும்!

மழையிலை என்றால் உந்தன்
மண்ணையே விட்டா செல்வாய்
உழுதுபண் பாடு செய்து
எருவொடு பசளை இட்டால்
மழைவரும் காலம் மீண்டும்
வளர்பயிர் இரட்டிப் பாகும்!
அழுதிடத் துணிந்தால் உந்தன்
அழிவுதான் ஈற்றில் முட்டும்!

படிபடி மீண்டும் மீண்டும்
பாடங்கள் மனதில் நிற்கும்
கடியது கணக்கு என்றால்
கனவதாய் முடியும் காலை
விடியலில் எழுந்து தேற்றம்
விடையிடு வெற்றி தோன்றும்
நெடியதாய் நினைத்தால் ஒன்றும்
நிசமில்லை வாழ்வு மில்லை!

இருளது விளக்கும் சோதி
இலந்திரன் கலங்கள் எல்லாம்
குருடராய்ப் பெற்ற தில்லை
குறைவிலா முயற்சி என்ற
உருவிலே கண்டார் இந்த
உண்மைதான் ஞானம் என்பேன!
அருவமும் உருவம் ஆகும்
அம்பிநீ சிற்பி என்பேன்!

எண்ணுதல் முதலில் வேண்டும்!
இயலிடத் துணிதல் வேண்டும்!
மண்ணுதல் தோறும் பிய்த்து
மடையென வாய்தல் வேண்டும்!
கண்ணுதல் போல வீச்சுக்
கருவியாய்ப் பகுத்து ஆய்ந்தால்
நண்ணுதல் ஆகும் வெற்றி
நாளிடும் சரிதம் தானே!

No comments:

Post a Comment