Sunday, December 28, 2008

வருக தைமகளே..!

வருக தைமகளே..!

முன்முகம்


பாரதி பாடல் படித்துப்பார்
பாரதி வருவான் ஆசானாய்
பாரதி தாசன் படித்துப்பார்
]பாரதி தாசன் தானாசான்
சாரதி கண்ண தாசன்சேர்
சாறாய் வருவான் பேராசான்
யாரவர் யாரவர் நூல்தரினும்
யாப்பும் உணர்வும் அவரேயாம்!

காதல் வயத்தை கற்பனையைக்
கண்ண தாசன் கவிவரியைக்
காதல் கொண்டு நானழைந்த
கவிதான் சிந்தை மயலாகி
போத விழ்ந்த புதுமலராய்
புத்தக மெல்லாம் அவனானேன்
தாத விழ்ந்தே மலராகி
தங்கத் தாசன் அழகானேன்!

சின்ன விழிகள் மோதிய-அந்தச்
சித்திரக் கோதை கண்டேன்!
என்னை உசுப்பிய பேரழகில்-யான்
இதயம் மகிழ நின்றேன்!
எண்ணச் சரளம் ஓடிய-எந்தன்
இருப்புக் கலைய நின்றேன்!
மின்னும்காவிய மேடையில்-யானவள்
மிதப்பில் இருப்பு வைத்தேன்!

வாராய் தைப்பாவாய்!

வாராயோ தைப்பாவாய்
வண்ணத் திருப்பாவாய்
ஆராத பொன்னூஞ்சல்
ஆடிவா எம்பாவாய்
தேரோடும் வாஞ்சைநிலம்
திருவீதி வாமகளே!
நீரோடி வேரெறிந்த
நெஞ்சப் பெருவீதி
சீரோடித் திரும்பாயோ
செல்வத் திருமகளே!
கூN;ராடு மாங்கனிகள்
கூத்தாடும் சோலையெலாம்
போரோடு வந்தரக்கம்
புகுந்த நிலம்மாறி
ஊரோடு மகிழ்ந்திருக்க
உலாவருவாய் தைப்பாவாய்!

வயல்வெளிகள் மீதேறி
வழிவாய்க்கால் ஒடியதும்
அயல்முழுக்க கைகோர்த்து
அழைந்தமண் ஆடியதும்
முயல்கணக்கில் பாய்ந்து
மோதிவிளை யாடியதும்
மயல்மடியில் வார்பெடுத்து
மங்கைவழி வீதியர்கள்
கயல்விழியில் கைகோர்த்து
காதல்வழி மேய்ந்ததுவும்
புயல்பிடித்துப் போனதம்மா
பெற்றமண் எரியுதம்மா
கயல்விழியாள் காதலெதிர்
கட்டழகன் தலைசாயும்
உயிர்நிலத்தை மீண்டும்நீ
உருவிலிடு தைப்பாவாய்!

வாடை உறைக்குமடி
வளர்நிலவு பாலிறைக்கும்
மூடிவரும் காரிருட்டில்
முத்தாடும் மங்கையர்கள்
தேடும் இரவுவரும்
திருத்தாலி போட்டமைந்தன்
கூடவரும் திக்கில்
கொண்டு வழிவருவான்
ஆடை புனைந்த
அழகுமணித் தேவியர்கள்
சூடவரும் மல்லிகையும்
சுடர்நெற்றிக் குங்குமமும்
பாடிவரத் தோயும்நிலம்
பைங்கிளியர் காதற்கதை
கோடிவர மீண்டும்
குதித்துவா தைப்பாவாய்!

இரவு பகலுழைப்பில்
எழுந்த வயல்நிலங்கள்
துரவோடு மிதிகால்கள்
தேசமிட்ட சோலைவனம்
துருவி; இரும்புருகி
தெருவார்ந்த மாளிகைகள்
அருவித் தடைமறிப்பு
ஆயரிடைக் கோகுலங்கள்
குருவிக்கும் கூடிட்டுக்
குவிந்த நிலமரங்கள்
செருவில் எரியுதம்மா
செந்தமிழர் திருநாட்டில்
பொருதப் பகைவரவோ
புதுமகளே மீண்டும்நம்
மருதாணித் திருநாட்டை
மன்றிலிடு தைப்பாவாய்!

வானம் மறிகடல்கள்
வளமார் பெருநிலங்கள்
ஞாலத் துறைவிளற்க
நயந்த ஆலயங்கள்
கானப் பரதங்கள்
கலையார்ந்த சாலைமுதல்
தானம் தவம்விளங்க
தந்ததிருப் பூமியெங்கும்
தேனமுதக் குருவிகளாய்
திரிந்ததொரு காலம்போய்
ஊனும் உயிருறைய
உயிர்நிலத்தில் வந்தபகை
தேனருவித் தமிழ்நிலத்தை
தீயிட்டு அழிப்பதுவோ?
மானத் திருநாட்டை
மறுபடிதா தைப்பாவாய்!

எந்தமிழர் இல்லத்தே
இனிமைத் தமிழ்முழங்க
எந்தமிழர் கரங்களிலே
இளமைத் தமிழ்வளர
எந்தமிழர் நாமடியில்
ஏழிசைகள் கொண்டார்க்க
எந்தமிழர் நிலத்தோடும்
ஏரோடும் புகழ்விளங்க
எந்தமிழர் புயங்களிN;ல
எழுமரசம் களம்வெல்ல
எந்தமிழர் துறைகள்
ஏழுலுலகம் வென்றுவர
இந்து சமுத்திரத்து
இனியதமிழ்ப் பொன்நாடு
வந்தாளப் பூமியதில்
வாசலிடு தைப்பாவாய்!

நீரோடு உதித்தவளே
நெருப்போடு பிறந்தவளே
ஏரோடு சிறந்தவளே
எழிலோடு இணைந்தவளே
சீரோடு செறிந்தவளே
சிறப்போடு வாழ்ந்தவளே
காரோடு வாழ்ந்தநிலம்
காதலொடு வாழ்ந்தநிலம்
வாரோடும் வண்டல்
வாவிகளில் வந்தநிலம்
போரோடு அழிந்துபட
பேரரக்கம் வந்ததினால்
வேரோடு இருந்தநிலம்
வேங்கைநிலம் ஆனதடி
தேரோடும் தமிழ்நிலத்துத்
தேசம்தா தைப்பாவாய்!
இருப்புக் குலைந்துபட்டு
எழுந்து அலைகடல்கள்
பரப்பி உலகெங்கும்
பைந்தமிழர் இடம்பெயர்வில்
நெருப்புக்குள் உறைநாளும்
நெருடல் பொழுதுகளும்
வருத்தித் தொலைக்க
வாழ்விடங்கள் ஆச்சுதம்மா!
கருக்கித் தொலையுமந்த
கனித்தமிழர் வாழ்வெல்லாம்
பெருக்காகி இன்பப்
பொழுதுவர அவர்மழலை
விரும்பித் தமிழை
வீட்டுமொழி யாயுரைக்க
அரும்பும் புதுவாழ்வை
அகிலமிடு தைப்பாவாய்!

எங்கள் நிலங்கள்
எரிந்து எரிதழலாய்
குஞ்சும் குருமானும்
கொட்டுண்ட மண்கருகி
அண்டத்து வானில்
அடுக்கிவரும் வல்லூறாய்
சிங்கத்து விமானங்கள்
செய்யும் நிறுதூளி
சொந்தக் குடிமனைக்குள்
செல்வீழ உடல்சிதறி
வெந்து கருகுமுயிர்
வேதனைகள் அறியாயோ
முந்தைத் தமிழ்நிலத்தை
மூடிநிற்கும் பகைவெல்ல
இந்தப் பொழுதிறங்கு
எமதுநிலம் தைப்பாவாய்!

நூலகத்தை எரித்தார்கள்
நூற்றுவரும் சாலையெலாம்
காலவராய் வந்துற்றுக்
கல்வியெலாம் புகைத்தார்கள்
ஆல்விருட்ச மாகிநின்ற
அறிவுக்குத் தடைக்கல்லாய்
மூலகங்கள் மாற்றிவந்து
முடித்துவிடச் சட்டங்கள்
காலடியில் சங்கிலியாய்
கட்டியர சாண்டதினால்
வேலெடுத்து வேங்கைகளாய்
வெல்லநிலம் வந்ததம்மா
சேலெடுத்த பைங்கிளியே
செந்தமிழர் திருநாவே
நூலெடுத்த நாடுவைத்து
நூற்றுவா தைப்பாவாய்!

நித்திரைகள் இல்லாமல்
நிலத்துயர்கள் மடிகொண்டு
இத்தரைகள் மீது
எங்கள் நிலவிருப்பின்
தத்துவங்கள் செய்வானாய்
தானைப்படை உயர்த்தி
யுத்தநிரை கொடுத்த
யுகநெருப்புச் சிங்களத்தை
புத்த இனவாதம்
போர்கள் வசப்பேயை
மொத்தும் தலைவன்
விழிகணங்கள் ஆறுதலாய்
சத்தம் வையாமல்
சாமரைகள் வீசடியோ
வித்துவத்துத் தலைவன்
விழிகாப்பாய் தைப்பாவாய்!

கால வசந்தத்தை
கற்பழித்து வந்தபகை
நீலவிசும் பேறிவந்து
நின்றெறியும் ஏவுகணை
ஓலப் பெருநெருப்பில்
உயிர்குடித்தல் பாரடியோ!
வாலை இளம்பிஞ்சு
வயதுப் பெரியவர்கள்
காலிடறிப் பாய்ந்துவிழக்
கரைகாணா தோடநிதம்
சோலை வளநாட்டில்
துயர்எழுந்த தம்மாவே!
காலமிட்ட கட்டளையில்
கனிந்த பெரும்தலைவன்
கோலமிடும் சுதந்திரத்தை
கொண்டுவா தைப்பாவாய்!

பிரபாகரம் கற்றுப்
பேசும் இளம்புலிகள்
உரமாயெழும் கனல்கள்
உயிரிட்ட யாகத்தில்
சுரமாகிச் சுதந்திரத்தீ
சொல்லும் திறம்பாராய்!
அறமாய் இருந்தவர்கள்
அரசியலில் மானிடங்கள்
திறமாய் எடுத்துரைத்தும்
திருந்தாத சிங்களத்தை
வரமாய் எழும்புதல்வர்
வாகைநிலம் வந்தனர்பார்!
சரமாய் இரும்புவியின்
சரித்திரங்கள் திரும்பநிலம்
கரமா யெழும்தலைவன்
காதலிடு தைப்பாவாய்!

வாராய் தைப்பாவாய்
வாகைநிலத் தமிழர்படை
ஆரத் தழுவியுயிர்
ஆக்கும் கொடைபாராய்
நேரத்துறு உணவும்
நீரும் நாட்கணக்கில்
பாராதிருந்து நிலப்
பட்டுக்குள் தாள்புதைந்து
சேரக் குறிபார்த்து
சிதறிவிழ இராணுவன்கள்
ஊர்குடிக்க முன்னம்
உயிர்எறிந்து தான்காக்கும்
போரெழுதிப் புலிகள்படை
புதுப்பரணி பாடிவரும்
ஆரத் திருநாட்டை
ஆரமிடு தைப்பாவாய்!

எங்கள் தலைவனடி
இருப்பாய் இருந்துமடி
தங்கி அவன்தமிழின்
தாலாட்டு நிலம்பார்ப்பாய்
பொங்கி வரப்பெடுத்த
பொன்னாகும் நெல்வயல்கள்
செங்கை நெருப்பேந்தும்
சுதந்திரப்போர் பாராடியோ!
முங்கியெ ழுந்துஎம்
முத்தாடும் தாய்நிலத்தை
அங்கிப் புத்தரசம்
அழிப்பதற்கு ஏவரக்கம்
நுங்குச் சிதறல்களாய்
நேரடிக்கும் வேங்கைபடை
தங்கியவர் தாளணையில்
தாங்குவாய் தைப்பாவாய்!

கச்சுவார் மாதர்தம்
கவிதைக் குலமாக்கும்
அச்சுவார் அன்னமென
அழகோடும் தேவியர்கள்
பச்சைப் பயிர்வகைபோல்
பட்டுவர நெருப்பாகி
இச்சைக் கினியதெல்லாம்
இன்று துறந்தார்பார்
மொச்சைப் பகைவந்து
மொய்நிலங்கள் மீதோடி
எச்சிற் குதறுபடை
இயமங்கள் வந்ததினால்
அச்சில் இருந்தகற்பு
ஆபத்தில் கண்ணகிகள்
மெச்சும் படைகண்ட
மேதினிவா தைப்பாவாய்!

கைவளை யோடுறாவிக்
கைக்குடம் மேவுகைகள்
தைவரப் பரதப்பாதம்
ததிங்கிணம் ஆடும்கால்கள்
மைவிழி மேவுமையில்
மையலர் ஓடுகண்கள்
தையலர் கொண்டமேனித்
தடயங்கள் போச்சுதாமே!
கைகளில் ஏந்தியம்புக்
கனித்தமிழ் நாதமங்கை
பைகளில் ரவைகளோடு
பாய்புலி யாகவந்தாள்
தைநிலம் தீயைத்தாவ
தாதையர் மஞ்சம்ஏகா
நெய்நிலப் பாதம்பார்த்து
நேசம்கொள் தைப்பாவாய்!

வாலை யரும்பிவர
வசந்தத் துகிலுடுத்து
மூலை யரும்புகளாய்
முகைமாம் பிஞ்சுகளாய்
சேலையரும்பி வராச்
சிட்டுஎலாம் தேசநலம்
சாலச் சிறந்ததெனச்
சமராடப் பறந்துவிட்டார்!
காலம் கொடுத்தபணிக்
கரும்புலியாய்க் கன்னிமகள்
சூலத்தாள் துர்க்கா
துரந்தரியாய் நாடெல்லை
ஏலப்பணி செய்ய
எழுந்தாரே யங்கேபார்
வாகைப் புலிமங்கை
வாழ்த்தவா தைப்பாவாய்!

fhjw; nghOjpiwf;Fk;
கண்வயலில் மீதுறைவன்
வாதைப் பொழுதுகளை
வஞ்சியவர் மறந்தார்காண்
சாதற் பொழுதுவந்தாற்
சரிநிலத் திற்காகவரும்
போதில் மகிழ்ந்தேற்றும்
புலியாக உயிரிறைக்கும்
மாதை வேறெங்கும்
மன்றிலிட மாட்டாதே
ஆதி மருங்காலம்
அடுத்த சரித்திரங்கள்
ஏதும் இன்றிந்த
ஏந்திளையர் போற்பரணிப்
போதுண்டோ தாயே
புகழ்பாடு தைப்பாவாய்!

காதற் பயிர்நிலத்திற்
காக உயிர்கொடுக்கும்
மேதைப் பெண்ணிளவர்
வேறெங்கும் இல்லையடி!
போதைப் பொருளாகப்
போகாமல் பெண்தளிர்கள்
நாதப் புரட்சிகளாய்
நயந்தமண் மேனியிலே
மோதிப் படையார்க்கும்
மெல்லியலர் ஊதுசங்கம்
சாதியது ஆண்போலே
சரிநிகர்கள் ஆகுதம்மா!
மாதர்பேர்ப் படையணியாய்
மறப்போராய் காதல்நிலம்
மீதோடும் சுதந்திரத்தை
வென்றுவா தைப்பாவாய்!

கையேர் உழவெடுத்துக்
காலளந்த வயற்போதில்
மைவார் தடங்கண்
மனக்காடு மீதுறையும்
மெய்ஞான் இளைஞர்
மேதினியைத் தேடுகிறேன்
தையத்தோம் பாடித்
தமிழாடித் தோகையர்மேல்
நெய்யிறைத்த கூந்தல்
நெளியும் அவைக்களத்தே
கைநிறையக் கவிதை
கட்டவிழ்க்கும் இளமறவர்
செய்வார் திருநிலத்தில்
செருவாக வந்தபகைப்
பொய்யரசம் விட்டோடப்
புயலாடு தைப்பாவாய்!

விசுவமடுக் காடெறிந்து
வேரோ டொருகாலம்
பசுமைப் புரட்சிகண்ட
பாடல்நிலம் வாராதோ?
கொசுவைத் துரத்திக்
குலையெறியும் வாழைகளை
வசமிட்டுப் பார்த்த
வண்டல் மண்உழவர்
புசமின்று போர்ப்பாவாய்
போய்விழுந்த தம்மாவே
தசங்கள் நூற்றாண்டாய்
தமிழ்நிலத்தில் பேரரசம்
விசக்குண்டால் வீசும்
வெங்களத்தில் நீராடி
நிசத்தில் முரசறையும்
நிலமாடு தைப்பாவாய்!

அரும்பாத மீசைக்குள்
அரும்பாத வசந்தங்கள்
செருக்காட வந்தபகைச்
செருக்காட ஓடுகிறார்
கரும்பாகத் தற்கொடையில்
கனிநிலத்தில் உயிர்கொடுக்கும்
விரும்பியவர் நிலமுறையும்
வேங்கைகளின் பக்கம்போ
மருப் பார்வையோடி
மங்கைமனம் நாடாமல்
நெருப்பாகிப் பந்துறைய
நேராக்கும் உயிர்வெடியை
பொருந்தி நிலம்மேவும்
புலிகள்மண் மேனியிலே
இருப்புவர விடியலையே
இயம்பிடுநீ தைப்பாவாய்!

காதற் திருத்தலைவன்
கட்டளையை அமிர்தமென
போதவிழ்ந்தே புலியான்
பொழுதரும்பத் தேடுகிறான்
மாதவிழும் பார்வையதும்
மன்றில் வரும்சுகமும்
ஆதனங்கள் மீதும்
அலங்கார வாழ்வதிலும்
சீதனங்கள் வைக்காது
சிலம்பாடச் சேரிழைஞர்
மோதலதை ஏற்றுவர
முன்மொழியும் தாயகத்தில்
சாதலிலே மீள்உயிர்க்கும்
சரிதமென வாழ்புலியான்
சீதளப்பண் பாடியவர்
தேசம்வா தைப்பாவாய்!

அடிமை வாழ்வினுக்குள்
அகப்பட்டுச் சிங்களத்துள்
படிமமாய்க் கிடந்தவர்கள்
பாராளும் மன்றமதில்
குடிமமாய் கிடந்தரசில்
கோடியதோர் காலத்தும்
மிடிமைக்குள் தமிழர்களை
மிதித்துத் தலைவர்களை
தடிகொண் டடித்தவர்கள்
தாக்கிவந்த காரணங்கள்
இடிபட்டுச் சிங்களத்தில்
இறந்த நாட்கள்போய்
அடிபட்டுச் சுதந்திரப்பண்
ஆக்குதடி புலித்தேசம்
கொடிகட்டி இறங்காயோ
கோலோச்சும் தைப்பாவாய்!

எங்கள் நிலங்கள்
எரிந்து எரிதழலாய்
தங்கண் மேனித்
தழலாடக் காணுதடி!
அங்கை நெருப்பேந்தும்
அனர்த்தப் பொழுதுகளில்
மங்கையவர் கற்புக்கும்
மரணப் பகைகண்டார்
நுங்கை அறுத்தல்போல்
நேரிழையர் தலையறுத்து
சிங்கை இராணுவன்கள்
சிதறாடக் கண்டோமே!
எங்கள் குலமாதர்
இயற்றும் விழிமடைகள்
பொங்கும் கண்ணீரைப்
பூவாக்காய் தைப்பாவாய்!

பள்ளிப்பூ வார்க்கும்
பாவைப் பூமேனிகளை
அள்ளும் கழுகுகளை
அரசனுப்பி வைக்கிறதே
வள்ளிக் கிழங்காய்ந்து
வள்ளிவரும் சோலைகளில்
தள்ளிப்போய்க் குதறும்
தசைப்பேய்கள் வந்ததடி!
தௌ;ளுதமிழ் வாழ்வு
தேவாங்குக் காமுகரால்
கொள்ளையிடப் போகும்
குடிநிலங்கள் ஆகுவதோ?
துள்ளிவரும் அம்மன்
தூரிகைகள் போல்மாதர்
விள்ளும் வாஞ்சைநிலம்
மீட்டுவா தைப்பாவாய்!

உழவர் வயற்போதில்
உழுதுவரும் அந்தியிலே
அழகுத் திருமேனி
அழகிடுவர் மைதிலிகள்
பழகும் இராப்போதில்
பண்பட்டு வைகறையில்
விழியில் நிறைகாட்டும்
வேய்ங்கிளையர் திருநாடு
அழிவின்று காணுதடி
அர்த்த இராத்திரிக்குள்
நுழையும் இராணுவத்தால்
நேரிழையர் கதறுகிறார்
மழைத்தூறல் கண்டு
மதனிட்ட அணைகைகள்
குலைத்தாடும் பகைவர்களை
கூட்டியெறி தைப்பாவாய்!

காலைக் குயிN;லாடு
காதற்பண் நீக்கியவள்
வாலைப் பிடியகன்றாள்
வாயிலிலே கோலமிட்டாள்
ஆலைப் பெருமிரவை
அணைத்த பெருமானை
தாளைப் பொழுதுகளில்
தானேற்று நாள்முழுதும்
சேலைப் பிடிகாட்டிச்
செவ்வரத்தம் பூச்செருகி
ஆலம் இலைஎடுத்து
அட்டியிலே கூழ்வார்த்து
மாலன் திருமனையில்
மங்கை வாழ்வியத்தை
காலன் பிடியிருந்து
காப்பாற்று தைப்பாவாய்!

சங்கிலியன் ஓடியஅச்
சரிதம் காக்கையினை
இங்கும் தரப்பார்க்கும்
இயமங்கள் வந்ததடி
வங்கப் போரொன்றின்
வடிவப் பொருளாடி
எங்கள் புலிமறவர்
இயற்றும் விடியலிலே
சிங்களத்துப் பகைவாயில்
சேரிடங்கள் காட்டுகிறார்
மங்கை தமிழிச்சி
மானப் புகல்நிலத்தில்
தங்கள் குலத்திற்கே
தமிழன் கோடரியாய்
பங்கமிடும் சரிதப்
பகைவிரட்டு தைப்பாவாய்!

நீல விசும்புக்குள்
நேரெடுத்த இயமங்கள்
வாலின் அருகிருந்து
வழிகாட்டும் தமிழர்கள்
தூலத் திருமண்ணில்
தூவிவரக் கந்தகத்து
காலன் அருகோச்சும்
காட்டும் மனிதர்களாய்
ஆளன் அடிவருடி
ஆயிரம் படிவங்கள்
தாளை விதந்தோத்தித்
தமிழன் பேராடுகிறார்
காலத்தின் விடியலிலே
களத்தில் உயிராடும்
சீலத் திறம்பாடச்
செய்வாய்நீ தைப்பாவாய்!

அங்கென்று எழுந்ததடி
அருந்தமிழர் புரட்சியிலே
எங்கென்று இல்லையது
எல்லாமே நம்மாட்சி
சிங்கை அரசாட்சிச்
சீறிவரும் பகையை
எங்கள் குலக்கொழுந்து
இளமாதர் ஒற்றுமையாய்
பொங்கி எழுந்தார்கள்
பூத்தமடி மண்ணினிலே
தங்கத் தமிழ்மாதின்
தானைவழி உலகத்தின்
எந்தவொரு மூலையிலும்
இல்லாஇச் சரித்திரத்தில்
எங்கள் இனமொன்றாய்
இயற்றிவா தைப்பாவாய்!

பகைமைப் புலத்தில்
பாயாகி நம்மவரின்
தகமைப் போருக்கு
தான்விலங்கு போடுகிறார்
சுகமிட்டுப் பார்க்கச்
சூதுக்குத் தான்வாழ
அகமிட்டுப் பார்க்கும்
அநியாயம் ஆனதடி
நுகப்பிடியில் மண்ணோடி
நிலமுழுத என்தமிழை
வகைகெட்ட சிறுக்கருக்கு
வசைபாடப் போடுவதோ?
முகம்கெட்ட விசர்கர்கள்
முத்தமிழுக் கிழுக்காகும்
வகையாகும் கரங்களுமாய்
வந்ததடி தைப்பாவாய்!

கூத்தில் முகம்விற்ற
குலம்விற்ற மூதேவி
வாத்துகள் தேடிப்போய்
வழக்காடப் போவேனோ?
ஏத்தும் தமிழை
நானேந்தும் செந்தமிழை
சீத்தைக்காய்ப் பக்கம்
செய்வேனோ நிலமகளே
தோத்திரங்கள் பாடி
தேவாரப் பண்ணியற்றி
ஏத்தித் தொழுதாற்கும்
இறைமை நிலப்போரை
வாழ்த்துவோர் போலே
வசதிக் கிருந்துவிட்டு
தூற்றுவோர் பாராய்
தேசத்துத் தைப்பாவாய்!

வாக்கியங்கள் செய்த
வாக்கியங்கள் தெரியாத
பாக்கியங்கள் செய்த
பஞ்சாங்கம் வந்ததடி
ஆக்கற் பிழையோடும்
அந்தணர்கள் மீதோ
தாக்கிப் பிழைக்கும்
தரித்திரங்கள் வந்ததடி
நாக்கில் வாய்மைகளை
நாளறியா துக்கேடு
போக்குகள் கூட்டம்
புலமெல்லாம் பாராயோ!
வாக்கும் மனதுடலும்
வாய்மைக்குள் ஆகாது
ஆக்கும் சிறுமை
அகற்றிவா தைப்பாவாய்!

குருவைக் கோடிட்டுக்
கோணங்கி வாய்போட
எருமைக்குத் தோல்போலே
இருப்பர் விசாதியென
தறிகெட்ட மாந்தர்
தான்கொண்டு பார்வைக்கு
நெறிகெட்டு எழுதும்
நீசர்கள் தீப்பிழம்பாய்
துறைகொண்ட உலகம்
தெருநீளம் வந்ததடி
மறைகொண்ட வாழ்வும்
மனதும் இறையாடி
முறையிட்டு வாழும்
முதுசமயம் இழுக்காட
பறைகொட்டு மாடலெலாம்
பாரகற்று தைப்பாவாய்!

சமயத்துள் வௌ;வேறு
சாரைகளாய் ஊர்ந்தோடி
தமைவெல்லக் குழிவைத்த
தறிகெட்ட வலயங்கள்
அமைவுக்குப் புறம்பான
ஆக்கத்தில் ஆடுதடி!
எமையிட்ட பெருவாழ்வில்
எந்தை திருநெறியில்
சுமையிட்டுப் பொய்கூறி
சேராத இடம்சேர்ந்து
குமைகின்ற மாந்தர்கள்
கோழைகளாய் போய்நின்று
மமதைக்குள் எழுதும்
மதக்கோடல் மாயைகளை
எமது நிலம்தழுவி
இலையாக்கு தைப்பாவாய்!

கண்ணகியை மண்ணார்ந்த
கனகத் திருமகளார்
எண்ணங்கள் மனையோடு
இலங்கும் கமலங்கள்
தண்ணார் தமிழோடு
தமிழ்பாடும் பொற்கிளிகள்
நண்ணுவார் பொழுதோடி
நாளுறையத் தொழுதோடும்
பெண்கள் நிலவேரை
பெரிதும் உவந்தநிலம்
மண்ணின் சமுதாய
மாந்தருக்குத் தான்நடுவே
புண்ணுடை யாள்களிடும்
புரிதுப்புத் தான்பாராய்
கண்ணுதலாய் தையெடுத்துக்
களம்வாநீ தைப்பாவாய்!

அறமே அறமாடும்
அறமாடும் செந்நெருப்பே
இறையே இறைநிலத்து
ஏரோடும் கொழுமகளே
முறையிட் டழைத்தால்
முகம்காட்டும் கண்ணகியே
துறைகொண்ட வாழ்வில்
துருவங்கள் அலையாடிச்
செறிகின்ற போதும்நாம்
சிந்தாத வேருயிரை
முறிகின்ற வரைக்கும்
முறிக்கின்ற மாந்தர்கள்
எறிகின்ற நாற்றங்கள்
இந்நாடு வரக்கண்டும்
பொறையாகி வாழ்மனங்கள்
போய்வாழ்த்து தைப்பாவாய்!

வாஞ்சைநிலம் மீதும்
வைகறையின் மீதுயரும்
ஏஞ்சல்கள் வாழ்வியலும்
இல்லப் பெருக்கோடும்
நோஞ்சல்கள் வந்து
நேர்வாழ்வு கோடுதடி
மாஞ்சுளையும் பலாவும்
மருதமடத் தேன்கதலி
பூஞ்சிறகும் படைத்துப்
பெய்த நிலக்கற்பில்
காஞ்சோண்டி மீதாகிக்
காதல்வயம் போடுகின்ற
பூஞ்சாண்டிக் கோலம்
பேய்பிடித்த மாய்மால
நோஞ்சாண்டி போயகல
நீவாராய் தைப்பாவாய்!

காதில் தூக்கணமும்
கடைவழித்த சிரசோடும்
பாதிக்கு வளர்த்துப்
பகுதிக்குத் தலைவழித்து
கூதிக்கும் வேடங்கள்
கூட்டம்போல் நமதிளைஞர்
சோதிக்கக் கண்டேன்
துயரோடிப் பெருகுதடி ]
ஆதித் தமிழனுக்கும்
அலங்கார நாகரிகம்
போதித்த அரசாட்சிப்
பேருண்ட சமுதாயம்
நாதிக்கும் வழுவாடி
நாயாகிப் போய்வாழும்
சாதிக்கு முகம்மாற்றிச்
சரிதம்வா தைப்பாவாய்!

குங்குமத்தை நெற்றிக்
குலமாதர் கனல்வாளை
தங்குமடம் மீது
தமிழாள் அழிப்பதுவோ?
எங்கள் மனையிறகில்
இயன்ற காப்பியத்துள்
பங்கம் இடும்கணக்குப்
பதரலவோ எம்பாவாய்!
துங்கக் கரிமுகத்துத்
தூமணியின் தீபமென
அங்கைப் புனிதத்துள்
அகலப் பெருவாழ்வை
நுங்கை அறுப்பதுபோல
நேரிழையர் சிலர்மாறி
இங்குற்றார் புலம்மீது
எழுந்துவா தைப்பாவாய்!

பூங்குவியல் தான்வார்த்து
புத்தகங்கள் போடுகிற
வீங்குவார் கூந்தல்
வெட்டி நறுக்குவதோ?
ஆங்குவார் கரத்தில்
அள்ளி நீரெடுக்கும்
மாங்குவளை விரல்கள்
மன்றில் புகைப்பதுவோ?
தேங்கி நிதம்மாறித்
தேரோடும் வாழ்வுக்குள்
காங்கை நெருப்பாகிக்
கன்னியர்கள் மாறுவதோ?
தூங்கி நிலம்மாறி
தேசநலம் கோடுகிற
பாங்கிகள் பக்கம்போய்
பாதைசொல்லு தைப்பாவாய்!

கூட்டங்கள் கூடி
கூடுகிற நம்மிளைஞர்
ஆட்டங்கள் குடிகள்
ஆயுதங்கள் சேராடி
வாட்டங்கள் போடுகிற
வடிவத்தால் வெளிநாடு
நோட்டங்கள் போட்டு
நீறாக்கல் பாராய்நீ
நாட்டிலுயர் தாயகத்தில்
நாளும் உடன்பிறப்புக்
கூட்டுக் குயில்களெலாம்
குதிக்குதடி மண்ணுக்காய்
பாட்டு விடுதலையை
பக்கங்கள் வீடமைக்கும்
ஏட்டுக்காய் இவ்விளைஞர்
இயலவா தைப்பாவாய்!

என்றாலும் தையே
ஏராடும் தமிழ்க்குடிகள்
வென்றாடும் தெய்வத்து
வேங்கை நிலப்பாவாய்
அன்றெம் பதிமனையில்
அடுப்புக் குடிசையிலும்
நின்றெழுந்த தமிழன்
நிலைத்த பொழுதேபோய்
கொன்று குவித்துக்
கோதைநிலம் தீயாகி
இன்று சிறீலங்கா
எடுத்த இனவழிப்பில்
சென்று சிதறாடித்
தேசமெலாம் ஏகிடினும்
நின்று நிலைக்குமவர்
நீவாழ்த்து தைப்பாவாய்!

தந்தையெனும் செல்வா
தமிழரசுத் தொட்டிலிலே
எந்தை எமக்களித்த
எம்முயிரின் நிலமாடி
சிந்தை மனமாடிச்
செந்தமிழாற் பாடுகிறோம்
நொந்து இனநெரிப்பில்
நெரிக்கும் கொடுவாளில்
வெந்து மனமுருகி
வீறிட்டு விழிபெருகி
அந்தப் பொழுதுகளில்
ஆண்டவனைக் கைநீட்டி
சென்ற திருக்காட்சி
செல்வாவின் பதம்பாடி
இந்தப் பொழுதாற்கும்
எழுச்சிவா தைப்பாவாய்

சுதந்திரங்கள் வந்துற்ற
செய்திகளே ஆறுமுன்னே
விதந்தரு தமிழரினை
வேறாக்கிச் சட்டமிட்ட
குதம்பை அரசியலைக்
கோடாக்கிச் சிங்களத்துள்
மதம்புத்த வாதங்கள்
மறைந்திருந்து ஆடுதடி
வதைபட்ட தமிழனுக்காய்
வதைபட்ட தலைவர்கள்
உதைபட்டு இராணுவத்தால்
உயிரை இழந்தார்பார்
நிதம்பட்ட நேர்துன்பம்
நின்றாடித் தலைவர்கள்
பதம்தந்த நன்றிகளைப்
பாடிவா தைப்பாவாய்!
பண்டா கிழித்தான்
பார்த்திருந்த ஜேயார்தான்
இந்தா யாத்திரைதான்
என்றானே இனவாதம்
கொண்டுவாள் கொண்டு
குத்திக் கிழித்ததுவே!
ஐம்பத்தி எட்டில்
அலறியது இலங்கையடி!
செம்பருத்தித் தமிழன்
செத்தான் வீதிகளில்
கும்பிட்டும் தமிழிச்சி
கொங்கை அரிந்தார்கள்
எண்பத்தி மூன்றில்
இறைத்த தமிழ்இரத்தம்
எந்தப் பொழுதுமில்லா
இறைமைதா தைப்பாவாய்!

இயக்கங்கள் பலவாகி
இறந்தவர்கள் பலராகி
மயக்கங்கள் இல்லாத
மறப்போரில் பகைநாடி
புயக்கம்பில் ஏற்றுப்
போன தமிழுயிர்கள்
நிசக்கம்பில் பார்த்தேயான்
நிலவாளாய் நூலளந்தேன்
வசம்நின்று வாழ்வியத்தில்
வாழ்ந்தால் ஒருகாலம்
திசைமாறிப் போனாலும்
தேசத்தில் ஊர்ந்துவரும்
இசையாகிச் சிற்றெறும்பாய்
என்றும் இருப்பேன்யான்
தசையாடும் தாய்நிலத்தின்
தானாடல் இதுதையே!

தாயே தமிழ்மழலைத்
தங்கமே தைப்பாவாய்!
தூயவளே தமிழன்
துறையாடும் செம்பாவய்!
சேயோன் துயரமது
செப்பிவரக் கேட்டவளே
ஆயர்நிலப் புலவன்
அழைப்புக்கு வந்தவளே
பாயமரக் கொடுக்கும்
பனைநாடு தான்சுமக்கும்
தாயர் சுதந்திரப்பண்
தாங்கிவரும் விடியலிலே
காயம் விழுப்புண்ணைக்
கண்டவர்கள் தனைவழுத்தித்
தோயும் நிலம்பார்த்துத்
தேசம்தா தைப்பாவாய்!

(தைப்பாவை- முற்றிற்று)

No comments:

Post a Comment