சுயமுயற்சி சொல்லும் வெற்றி:08
சுயமுன்னேற்ற ஏடுவாழ்க!
வானமே எல்லை என்ற
மகத்துவக் கோடு வைத்து
தேனது போலே கல்வித்
தேடலின் மகிமை கொண்டு
கானமே வாழ்வும் வல்ல
கணிதமே முயற்சி என்றும்
ஆனதே வெற்றி என்ற
அறிவியல் ஏடு கண்டேன்
காலிலை என்றால் என்ன?
கரமிலை என்றால் என்ன?
போலியோ பிளவு நோய்கள்
பிடித்தவர் என்றால் என்ன?
ஆலையாய் முயற்சி செய்தால்
அகிலத்தை வெல்வார் என்ற
நூலையே எழுத்தில் தந்த
நுண்ணறி வாளன் கண்டேன்!
படித்தவர் எல்லாம் வெற்றிப்
பாதையைக் கண்டார் இல்லை
படித்திலார் எல்லாம் தோல்விப்
பத்திரம் கோண்டோர் இல்லை
இடிப்பொடு சுயமு யற்சி
இயற்றிய மனிதர் மட்டும்
பிடித்தனர் வாகை என்றே
புத்தகம் தந்தார் வாழ்க!
நாதமே முயற்சி என்ற
நரம்பிடும் இ;சையே ஆகும்
போதமே அறிவுத் தாய்க்குப்
பிரசவம் புதிதாய்த் தோன்றும்
ஊதினால் நெருப்புத் தோன்றும்
உந்தலில் கணைகள் பாயும்
சாதனை முயற்சி உண்டேல்
சரித்திரம் உலகம் வைக்கும்!
வானமே எல்லை பார்த்தேன்
வடிவிலே புதுமை பார்த்தேன்
ஊனமே இல்லை ஆக்கும்
உடையவர் அதர்வாய்ப் பூக்கும்
ஆனவர் கதையைச் சொல்லும்
அறிவியற் கிரியின் ஏடு
கூனது நிமிர்த்தும் தெம்புக்
கோலதாய் நிலைத்து வாழ்க!
-புதியபாரதி
வானமே எல்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment