சுயமுயற்சி சொல்லும் வெற்றி: 06
திரவியம் சிகரம் வைக்கும்!
அயர்ந்துநீ சோம்பி நின்றால்
ஆயுளெல் லாமும் தூங்கும்
பயந்துநீ தளம்பி நின்றால்
பாதையில் பேயே தோன்றும்
மயங்கினால் என்றால் ஓடும்
வண்டியே பழக மாட்டாய்
சுயத்திலே எதுகொண் டாயோ
செயலதே ஆகும் தம்பி!
முயற்சிசெய் அதுவே போதும்
வெறும்கையே முதலாய் ஆகும்
வயற்புரம் செல்வாய் நெல்லின்
வளர்பயிர் பணமே காட்டும்
அயல்நகர் செல்வாய் ஆங்கே
அங்காடி வணிகம் ஊட்டும்
கயல்விழி மாதர் நோக்கக்
காசிலே இமயம் தோன்றும்!
அச்சக ஒப்பில் கற்ற
அறிஞரே மாபொ சீயார்
பிச்சிடும் தாளில் பொட்டர்
பெருங்கதை எழுதப் கற்றார்
உச்சியில் சிலந்தி பார்த்து
உயர்ந்தாரே றொபின்சன் குரூஸ்
வைச்சது எல்லாம் ஏணி
வரைகடல் ஏறும் தோணி!
காற்றென ஊதித் தள்ளும்
கண்ணதா சன்போற் பாட்டில்
ஈற்பெயர் பட்டம் வைத்தார்
எவர்வந்து கவிதை மீட்டார்?
ஆற்றலில் கணனிப் பில்கேற்
அகிலத்தில் சிகரம் வைத்த
ஊற்றெலாம் முயற்சி என்ற
ஒன்றதே வேறொன் றில்லை!
ஊனங்கள் குறைபா டில்லை
உயரங்கள் குறைபா டில்லை
கூனலும் குறைபா டில்லை
குவலயம் அறிவின் கல்லை
வானமே எல்லை வைத்து
வரைவிடு வெற்றி தோன்றும்
தேனது போலே வாழ்வுத்
திரவியம் சிகரம் வைக்கும்!
-புதியபாரதி
நன்றி: வானமே எல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment