Monday, December 29, 2008

நிலப்பூக்கள்

நிலப்பூக்கள்

ஆக்கியோன்: புதியபாரதி
பாரதிவயல் வெளியீடு
2004

பிரபா காலம்..

போர்இலக்கியத்திற்கும்,
போர்க்கால இலக்கியத்திற்கும்
இவன் ஒரு உலக வளாகம். போர் இலக்கியம்
நிலத்தில் பிறந்தது.
போர்க்கால இலக்கியம்
புலத்தில் பிறந்தது.
இவனுக்கு நிகராக எந்தத்
தமிழ்த் தலைவனும்
பாட்டுடைத் தலைவனாக
இருந்ததில்லை.

இவனுக்குப் புகழாரம்
சூட்டிய பாடல்கள்
பல ஆயிரங்கள்.
இசையும் கலையும்
எடுத்த பரிமாணம்
இவனைத் தலைவனாகக்
கொண்டதாலேயே
பரிணமித்திருக்கிறது.

சங்க காலத்திற்குப் பிறகு
பல்லாயிரம் பாடல்களில் இவன்
ஒருவனே பதிவாகி வருகிறான்.
என் இலக்கியத்திற்கும்
இவனே தகுதி தந்தான்.

மானத்தின் மீதும்,
மணி நிலத்தில் கருவான
தமிழன்னை மீதும,;
வானும் மறிகடலும்
வந்துதித்த தமிழர் படையின்
சேனைக்குள் உள்ளும்,
செந்தமிழின் கூன் நிமிர்த்திய
பிரபா என்னும்
பெருந்தலைவன் உருவாக்கிய
நிலக்காவியத்தில்
எங்கோ ஒரு துளியாக நான்.....

என்னுரை...

அல்லற்பட்டு ஆற்றாது அழுது அழுது
வல்லதாய் எழுந்தோம்! வள்ளுவம் இப்படை
வள்ளுவம் தமிழ்ப்படை என்பது மட்டுமல்ல
என் வரலாறும் எழுத்துக்களும் தான்!

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ
செல்வத்தைத் தேய்க்கும் படை.
ஐம்பத்தியெட்டு அலற வைத்த கண்ணீரை
கும்பத்தில் ஏற்றியது இக் குறள்.
தெய்வத்தால் ஆகாது எனினும் நாம்
கைவைத்தால் ஆகுமென்று காட்டியது வரலாறு.

சிங்கள இனத்தில் ஒரு சமான்யனிடம்
இருக்கின்ற சிநேக பாவம்
அரசியல் மட்டில் இருப்பதில்லை.
போர் எழுந்து இலட்சம் உயிர்களைப்
பறித்தபோதும், இன்னும் திருந்தாத
செம்மல்கள் கொழும்பைப் புரட்டுகிறார்கள்.

சமாதானமாய் இருக்கவிடு என்ற
செல்வாவின் வேள்வியிலே உதித்தவர் பிரபாகரன்.

மனித மனங்களைச் சுத்திசெய்த தலைவன்
என்று சிங்களப் புத்திஜீவிகள்
விதந்துரைக்கும் ரணில் என்ற
புதிய சரித்திரம், உலகத்தால் அலசப்படுகிறது.

ஐம்பத்தியெட்டில் இருந்து
ஐம்பது ஆண்டுகால கலவரங்களை
அரக்கமாகவே சரித்திரம் கருதுகிறது.
ஒரு தேசியத் தேச இனத்தைப்
போரா சமாதானமா? கேட்பதற்கு
சிங்களத் தீவிரவாதம் துணிந்தபோதுதான்
தமிழரின் ஆயுதக் கவசம்
அதிகமாகிக் கொண்டது.

இப்பொழுது,
அழுத நாட்கள் இறந்துகிடக்கக்
காணப்படுகின்றன. சிரித்தபோது
வந்தவைகளை எல்லாம்
ஒருசேரத் தொலைத்துவிட்டேன்.

அன்பார்ந்த தமிழுலகே,
காலம் கடந்து என் ஞானம்
உங்களை அடைகிறது. நிலப்பூக்கள்
உருவாக உழைத்த- உரமாக நின்ற
அனைவருக்குமான
நன்றிகளோடு,

-புதியபாரதி

(01)
தமிழீழம்


தமிழே ஈழத் தாயகமே-எங்கள்
தாயே தமிழ்நிலமே
அமிழ்தே இனிதே ஆருயிரே-உனை
ஆரா தித்தோமே! -தமிழ் ஈழ

வேங்கைகள் விதை யாக்கிய-நில
வேரே விருட்சகமே- உயிர்
தாங்கிடும் நெஞ்சக் கோவிலே-எம்
தாயே தமிழமுதே! -தமிழ் ஈழ

உன்பாதங்கள் துதி ஆக்கினோம்-உயிர்
உமதே நாமானோம்
மன் பூமியின் புதுத்தேசமே- உன்
மனமே வசமானோம்! -தமிழ் ஈழ

குருதியின் புயல் வார்ப்பிலே- எம்
கொற்றம் ஆனவளே
பரிதியாய் உயர் மானுடம் -பார்
பதித்த தேனவளே! -தமிழ் ஈழ

தேவே தேவநற் திருவே- விடியலின்
தேசம் வாழியவே!
பாவே பாயிரத் தமிழே -இயலிசைப்
பண்பே வாழியவே! -தமிழ் ஈழ

பிர பாகரம் பிர வாகமாய்-உரம்
பெற்ற பெருங்குவையே
சிரம் தாளிட உன் பாதங்கள்-துதி
செய்தோம் திருநிதியே! -தமிழ் ஈழத்

2-தமிழே வாராய்

தாயே தமிழே தண்ணளியே ஆரமுதே
வாய்மைக் கனியமுதாய் வாய்த்த திருமுகமே
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் வையப் பெருஞ்சாரல்
நீள்பட்டு யர்ந்த நிலக்காந்தட் சுவடுகளில்
பாழ்பட்டுப் போகாது பண்பட்டு இலக்கியங்கள்
சேரச் சிறந்தோங்கிச் சிறப்புற்றுக் காவியமாய்
வாழ்வுற்று நிற்கும் வரலாறே, வரலாற்றில்
தாழ்வுற்றுப் போகாத தாரணியின் இலக்கியமே
உயிரில் உயில்எழுதும் ஈழத்து மறவர்களின்
பயிரில் விளைமுற்றம் பார்க்கின்ற நாயகியே
நெஞ்சம் மருவகலா நீதித்தாய் ஆனவளே
அஞ்சாப் புலிகளுக்கு ஆகுதியாய் வேதமிட்டு
போராயெழுந்த போர்முகத்து இனப் பேயை
நீராய் உருக்கும் நெருப்புத் தலைவனையே
பிரபா கரமாகப் பிரவாகம் செய்தவளே
உரவேக நெஞ்சை உரமூட்டிக் கொடுத்தவளே
சின்ன வயதிருந்து சேவித்த தாயெனக்கு
அன்னப் பொழுதுமுதல் அளித்த தமிழணங்கே
ஊனைப் பிழிந்து உதிரத்தே நெய்யாகி
வானக் கவிபுனைய வாய்திறந்த மென்மகளே
ஊரை உறவை ஊர்ந்த வயல்வெளியை
நாரை பறந்ததுபோல் நான்பறந்த காரணத்தால்
துருவத்துக் கடலில் செல்வக் கனடாவில்
உருவம் வாழ்வதுவும் உள்ளம் தாய்நிலத்தை
காதல் வயமாகிக் கண்ணயர மறுப்பதுவும்
சீதக் குளிர்தென்றல் நெருப்பாய் சுடுவதையும்
பாடி என்தேசத்தைப் பாட்டில் எடுத்துவர
ஏடி தமிழே இருந்தமிழே எனக்கருள்வாய்!
வாராய் என்னுளத்தே வடிவுக் கரசியடி
தாராய் என் இதயம் தாங்கும் தமிழவளே!
மஞ்சள் நிலவும் மருட்காந்தட் பொன்நிலமும்
கொஞ்சிக் குலவ கொடிகட்டி நிலமடந்தை
தஞ்சத்தில் விழுந்த தளிரும் செந்நெல்லும்
விஞ்சப் பசுமைநிலம் வேரிட்ட வாழ்வியலில்
சிட்டுப் பறந்ததுபோல் சேயிழையார் நடைபயில
பட்டு மயல்கொடுக்கும் பாதைக்குள் மச்சானை
விட்டு விலகி வேலிக்குள் நிலவெறிக்கும்
மொட்டுக்கள் பூத்த மெய்நாடு போயகல
வந்தான் பகைவன் வரலாற்றை ஏமாற்றி
சொந்தக் குடிநிலத்தை சிங்களமாய் ஆக்கியவன்
வெந்து உயிர்கருக விளைநிலங்கள் நெருப்பாக
குண்டுகளைப் போட்டுநிலம் கொழுத்தும் பேயாக
இன்றைக்கு வந்ததடி இனவாதப் பூதங்கள்
நண்டும் படம்கீறும் நமதுகடற் கரையேறி
மொய்த்தான் பகைவன் மோகநிலம் அழிந்ததுவே
பெண்டுகள் பிள்ளை பெருவயதுத் தாத்தாவை
அண்டி அயல்நிலங்கள் அஞ்ச எறிகணைகள்
ஆட்டுக் கழிவுகள்போல் ஆகாயம் ஏவிவிழ
ஓடிஉயிர் கருகும் உருக்குலைய என்தேசம்
வாடிப் பதறும் வாஞ்சைநிலம் போரெறிய
நான்படிக்கா விட்டால் நன்றி மறந்தவனாய்
உண்டு உறங்க ஊரைவிட்டு ஓடியவன்
என்றே வசைவாழ என்தமிழுக் கிழுக்காவேன்
என்தமிழர் எல்லாம் இருப்புக் குயிர்துறக்கும்
துன்பத்தில் நானிங்கே துடித்தேன்டி தாயவளே
ஊன்கருக உயிர்கருக உன்பிள்ளை விழிசோர
தான்கருகி ஆறாகத் தனியாய் வாடுகிறேன்!
வான்கலந்த துயரத்தால் வாஞ்சை நிலம்நோக்கி
சென்று துயர்தழுவிச் சேதிசொல்ல வாராய்நீ
எந்தன் உயிரே உயிர்கலந்த மென்காதற்
சிந்தா மணியே செந்தமிழே வாருமம்மா!
வேரெறிந்த என்நிலத்து வேதனையைச் சொல்லவிடு!
சீரெறிந்த செப்புகவிச் சிந்தனைக்குள் வந்துவிடு!

நிலமகள் காவியத்தின் தொடராக வரும்
நிலப்பூக்கள் என்ற புத்தகத்தின்
பாடல்கள் இன்னும் தொடரும்..

No comments:

Post a Comment