Friday, December 26, 2008

வானமே எல்லை காண்பாய்!
சுயமுயற்சி சொல்லும் வெற்றி: 05

வானமே எல்லை காண்பாய்!


சாதனை என்ப தென்ன?
சரித்திரம் என்ப தென்ன?
நீதனி ஆளா என்ன?
நிதிமுடை கொண்டால் என்ன?
வாதைநோய் வந்தால் என்ன?
வலதுதான் குறைந்தால் என்ன?
மோதுநீ மோது உந்தன்
முயற்சியில் தோன்றும் வெற்றி!

நீரிலா வனத்தைத் தோண்டி
நீரொடு ஆறு வைத்தார்
ஊருலாப் போகும் கப்பல்
உலவிடப் பாதை கண்டார்
வேரிலா நிலத்தின் பொன்னாய்
வேரொடு பயிர்கள் கண்டார்
சோரிலா ரஷ்ய நாட்டார்
சுடுமண்ணை விளைய வைத்தார்!

ஏறவே முடியா தென்ற
இமயத்தை முடவர் தொட்டார்
பாறையை இடித்து மண்ணைப்
படைத்தவர் பச்சை கண்டார்
நூறது வயது வந்தும்
நூற்றவர் பட்டம் பெற்றார்
வாறொடு முயற்சி செய்தால்
வானமே எல்லை காண்பாய்!

நோயது மாறா தென்ற
நுவல்தனைப் பலபேர் வென்றார்
ஆயதோர் அறிவே கொள்ளும்
அளவதே மனிதம் வெல்லும்
போயது வாழ்வே என்ற
பேயது உன்னைக் கொல்லும்
காயது கனியாய் மாறும்
காலமே தொட்டில் ஆகும்!

மதியினைக் கீறு பட்ட
மரத்தினில் தளிர்கள் தோன்றும்
அதிசயம் கடவுள் தாரார்
அறிவதே உனக்குக் காட்டும்
விதியது என்றே எண்ணி
வீழ்கிறாய் எழுந்து வாடா
எதுவெது இலையோ வெற்றி
இயற்றிடும் முயற்சி ஒன்றே!

புதியபாரதி
நன்றி: வானமே எல்லை

No comments:

Post a Comment