குக்கூ குக்கூ குயிலக்கா..!
எடுப்பு
பூங்குயிலே பூங்குயிலே-நீ
போனஇடம் தெரியலையே -பூங்
தொடுப்பு
ஏங்கியுனைக் குக்கூ வென்ற
என்னழைப்பும் கேட்கலையே? -பூங்
முடிப்பு
ஓரிரவுக் குள்ளேயெங்கள்
ஊர்விழுந்து போச்சுதடி
வேர்பிளந்த மாமரத்தில்-உன்
வேய்ங்குரலும் போச்சுதடி! -பூங்
தாயிருந்த மணிநிலத்தில்
நீயிருக்க வழியில்லையே
கூவியுனைக் குக்கூவென்று
கூப்பிடநீ ஊரில்லையே! -பூங்
குமரக்கோட்டம் முருகன்மணிக்
கோவிற்பக்கம் போகவில்லை
ஆமிவந்து போதையிலே
அடிதடிகள் முடியவில்லை -பூங்
நானிழந்த நிலமடியில்
கானிழந்து நீபறந்தாய்
தேனழைந்து குக்கூவென்று..
குக்கூவென்று குக்கூவென்று
நீயழைக்கும் நாள்வருமா?-அடி
நீயழைக்கும் நாள்வருமா? -பூங்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment