Saturday, December 27, 2008

தேசியக் கீர்த்தனைகள்

தேசியக் கீர்த்தனைகள்

(01)
இன்றைய இடப்பெயர்வு நாளைய சுதந்திரம்!

(மாட்டுவண்டியில் ஒரு இடம்பெயர்வு)
பொங்குநடை போட்டுவர
பூச்சதங்கை தாளமிட
சாலையிலே துள்ளுநடைச்
சந்திவரும் காளைகளே!

இன்றுஎன்ன சோகமடா
இடம்பெயரும் வேகமடா
சொந்தமனை விட்டுவண்டி
தெருநீளம் போகுதடா!

தென்னையிலே பைங்கிளியின்
தீங்கூடு கலைந்ததடா
அன்னைமுலை காய்ந்துவிட
ஆர்மழலை சாகுதடா

மண்ணினிலே பேய்புகுந்து
மதம்பிடித்து ஆடுதடா
குண்டுமழை கொட்டிவிடக்
குடும்பமாய்ச் சாகுதடா!

நாளையொரு வேளைவரும்
நம்நாடு பாளையிடும்
காளைகளே உங்களுக்குக்
களனியிலே புல்விளையும்

சூழ்ந்தவினை போகுமடா
சுதந்திரப்பண் பாடுமடா
ஆழ்ந்ததுயர் நீயகற்றி
அஞ்சாமல் நடந்திடடா!

தர்மமென்றும் தோற்றதில்லை
தாய்மண்ணும் வீழ்ந்ததில்லை
கர்வனாட்சி இரும்பெனவே
காலம்விட்டு வைத்ததில்லை

காதல்நிலம் ஊர்திரும்பும்
காலம்வரும் பாருங்கடா!
சோதனையில் தீக்குளிக்கும்
தேசம்வரும் நாளையடா

(02)
காலமிட்ட கட்டளை!
எடுப்பு

காலமிட்ட கட்டளையை
காளை வெல்லுவான்-எங்கள்
கனகமணித் தேசம்தன்னை
நாளை சொல்லுவான். இன்று.. -காலமிட்ட

தொடுப்பு
நீலக்கடல் தானுமது
நெருப்பு அல்லவா-எங்கள்
நிலமடியும் தாய்மறவர்
இருப்பு அல்லவா? இன்று.. -காலமிட்ட
முடிப்பு
மானிடத்தின் மகுடமிட்டு மன்னர் ஆகுவோம்-எங்கள்
வாஞ்சைநிலம் சுதந்திரத்தின் வண்ணம் பாடுவோம்!
ஆனமட்டும் நீதிசொல்லி அரசம் போடுவோம்-பெண்
அடிமையென்ற காலமில்லை ஆடிப் பாடுவோம்!...-காலமி

சீதனத்தைத் தொலைத்துவிட்டு தேசம் காணுவோம்-தீய
சிந்தனைகள் அற்றதொரு நீதி பேணுவோம்
சாதியென்ற சாத்திரத்தை சாடி அழிப்போம்-தம்பி
சரித்திரத்தி;ன் நாடுஎன்று கூடி ஒலிப்போம்!... -காலமிட்ட


(03)
அடிமைத் தளையை அகற்று!


மனிதா உன்னைத் திருத்து-இல்லை
மடிவாய் மண்ணை விடுத்து
அலையாய் வந்தான் பகைவன்-எமை
அழிக்கத் துணிந்தான் எழியன்!

கொடுவாய் விரித்த வலையில்-எங்கள்
குலத்து மண்ணை விடவோ?
நெடுவான் பிளந்து வந்த-அவன்
நெருப்புச் சாம்பல் இடவோ?

மரணம் என்ப தென்ன?-எங்கள்
மண்ணின் படிகள் அன்றோ?
கரணம் போடும் தமிழன்-அவன்
காக்கைக் குலத்தன் அன்றோ!

வேங்கைப் படையாய் முகிழ்த்த-எங்கள்
வீரப் பெண்ணே வாழ்க!
தாங்கும் உனது கரமே-எங்கள்
தமிழீ ழத்தின் உரமே!(04)
மோகநிலம்!
எடுப்பு
மோகப்பனி புல்லின்மீது முத்துப் பொழியும்-அந்த
முகமலரில் தாய்நிலத்தின் சொத்துக் குவியும்-மண்ணின்
-மோகப்பனி
தொடுப்பு
தாகச்சுனை தீர்த்துவைக்கத் தென்னை வளரும்-வாழைத்
தண்கதலி மாவினொடு பலா இனிக்கும் ...மண்ணின்
-மோகப்பனி
முடிப்பு
நான்நடந்த வயல்களெல்லாம் நரியி ருக்குதே-இப்போ
நாய்பிய்த்த துணியெனவே நிலமி ருக்குதே
கூன்நிமிர்த்த நின்றநிலம் குருதி யிறைக்குதே
கூத்திபெற்ற காக்கையனும் குலமழிக்குதே -மண்ணின்
-மோகப்பனி

நாளையெங்கள் வேர்மறவர் நாடு வெல்வார்-அந்த
நாளிலெங்கள் சுதந்திரத்தின் சேதி சொல்வார்
பாளையெல்லாம் பூச்சொரியும் பள்ளி சிரிக்கும்-அந்தப்
பசுஞ்சோலை மீதோடிப் பட்சி பறக்கும் -மண்ணின்
-மோகப்பனி..

(05)
நீதியை வகுத்திடுவோம்!


எடுப்பு
சாதியைத் தொலைத்திடுவோம்-பிரிவெனும்
சாதியைத் தொலைத்திடுவோம் நாம்..- சாதியைத்..
தொடுப்பு
சீதனம் தொலைத்திடுவோம் புதுச்
செகத்தினை ஆக்கிடுவோம்..நாம் -சாதியைத்
முடிப்பு
நீதியில் விளைந்ததடா-அதற்கே
நிலப்போர் வெடித்ததடா
பாதியில் நுழைந்துவந்த-முந்தைப்
பழியெலாம் துடைக்குமடா! நாம்.. -சாதியைத்

சாதனை எழுதுமடா-கல்விச்
சரித்திரம் புகழுமடா
மாதவள் சரிநிகராய்-எங்கள்
மண்ணில் வளர்வளடா! ..கொடிய -சாதியைத்(06) மனிதம் மானுடம் வாழ்வு!

மனிதம் என்ப தென்ன?
மனிதம் கூர்ப்பின் மடியா?
புனிதம் என்ப தென்ன?
பேசும் கற்பின் வடிவா?

உயிரே என்ப தென்ன?
உடலை அசைக்கும் விசையா?
உள்ளம் என்ப தென்ன?
உள்ளே இருக்கும் உயிரா?

இதயம் என்ப தென்ன?
இதுவே மனிதக்; கதவா?
கதவம் அடைத்த பின்னால்
காடை தானே முகமா?

காதல் என்ப தென்ன?
கடவுள் தந்த கனியா?
காதல் சாகு மென்றால்
கலசம் உடைந்த கதையா?

மனிதம் காதல் புனிதம் உள்ளம்
இதயக் கதவம் இறைவம் கற்பு
மானுட ஏடாய் மலர்ந்தது அம்மா
வாழ்வொரு தென்றல் வண்ணமே அம்மா!
(07)
ஓ தலைவா எங்கள் தலைவா!
தொகையறா
ஓ தலைவா எங்கள் தலைவா
உண்மையின் ஊற்றே எங்கள் தலைவா
மாசே துங்கன் மண்டே லாவெனும்
மன்றில் வந்த மானத் தமிழா...ஆ..ஆ. –ஓ தலைவா

ஓ தலைவா ஓ தலைவா
இனத்தின் விடிவே எங்கள் தலைவா
வாதலைவா வாநீ தலைவா-உன்
வரவே எங்கள் இருப்புத் தலைவா! -ஓ.. தலைவா

தாயின் நிலத்தை தெறிப்பான் தறித்த
போது வந்தாய் புலியின் தலைவா
தீயில் வெந்து தீய்ந்த வேளை
தேசம் காக்க உதித்தனை தலைவா! -ஓ.. தலைவா

மானத் தலைவா மண்ணின் புதல்வா
ஈனம் ஒழித்த இளம்சந் ததியே
தானம் உயிராய் தமிழ்ப்படை கண்டாய்
கூன்நிமிர் திடவே கொற்றம் அமைத்தாய்! -ஓ..தலைவா


(08)
பிரபா என் பிள்ளை!(தாலாட்டு)


அவன்:
வல்லைக்கடல் துள்ளிவிழ
வாடைவந்து தாலாட்ட
முல்லைமலர் பூத்திருக்க
முகிழ்த்துவந்த மன்னவனோ!

அவள்:
கார்த்திகையின் கார்குளிரோ
கட்டவிழ்ந்த வாடையதோ
நேர்த்திவைத்துச் செண்பகத்தாய்
நெஞ்சுருகப் பெற்றவனோ!

அவன்:
கோண்டாவில் மாம்பழமோ கொடிகாமப் பலாப்பழமோ
தேன்கதலிச் சாவகமோ
திருமலையின் நீரூற்றோ!

அவள்:
காலத்தே கனிந்துவந்த
கனகமணித் தமிழ்மகனோ
கோலமகள் மேனியிலே
கொஞ்சுதமிழ் முத்ததுவோ

அவன்:
ஓடாத கட்டபொம்மன் வீழாத சங்கிலியன்
ஏடாக மலர்ந்தமகன் இன்றுவந்த திருமகனோ!

அவள்:
சேரனோ சோழனோ
செந்தமிழின் பாண்டியனோ
ஆரமாய் உதித்தவனோ
அஞ்சாத புலிமகனோ

அவன்:
தானையிடும் தலைவனோ
தமிழீழத் தத்துவனோ
சேனையொடு பார்புகழும்
செந்தமிழாள் புத்திரனோ!

இருவரும்:
வாழியவே வாழியவே
வண்ணமகன் வாழியவே
தூளியிலே கேட்டுறங்கும்
தெய்வமகன் வாழியவே

ஆதிமுதல் இன்றுவரை
ஆனமண்ணின் தூரிகையை
நீதிமணி ஆக்கவந்த
எல்லாளன் வாழியவே!

வல்லைக் கடல்பெருக
வாடைப் பனியுருக
நல்லையிலே தொட்டுவந்த
நாயகனே கட்டிமுத்தே!


(09) எங்கள் தலைவனுக்கு..!


எங்கள் தலைவனுக்கு
ஏறுபோல் வீரனுக்கு
சங்கத் தமிழெடுத்துப் பாடுவோம்-அவன்
பொங்கி எழுந்தகதை பேசுவோம்!

அங்கம் குறுகிச் சிங்க
அடிமையிலே கிடந்தவரை
எங்கள் தலைவன் வந்து மீட்டவன்-தமிழ்ச்
சிந்;துப் பரணியிடும் பாட்டவன்!

அகிம்சை கொண்டவரை
அடித்துவைத்த ஆட்சியிலே
குதித்துப் பதைத்துவந்தான் கோமகன்-புலி
அதிரும் படைசமைத்த தாய்மகன்!

வானிற் பறந்துநின்று
வல்லபடை கொண்டு சென்று
சேனை எழியவரை அடித்தவன்-தமிழர்
கூனை நிமிர்த்தவலு வெடுத்தவன்!

பாட்டெடுத்துப் பாடிநின்று
பரணிகளம் கோடிகண்டு
மீட்டெடுத்து வருகிறானெம் வேந்தனே-எந்த
நாட்டினிலும் கீதையிடும் காந்தனே!

(10)
தமிழ்ச்செல்வா..
மறப்போம் அல்லோம்!


சொல்லிலே தெறிக்கும் உண்மை
தெளிவது காட்டும் எண்ணம்
கல்லிலே வார்க்கும் சிற்பிக்
கணக்கதாய் நறுக்கின் தேடல்
வில்லது பறக்கும் அம்பு
வேகமாய் உரைக்கும் தெம்பு
முல்லைபோல் சிரித்த வண்ணம்
மொழிவைநீ மறப்போம் அல்லோம்!

தலைவனின் நெஞ்சில் ஆர்க்கும்
தமிழீழ வார்ப்பின் தோற்றம்
அலையெனக் கொள்வாய் அந்த
அடித்தளம் பலமாய் வைத்து
உலைக்களம் எதுவந் தாலும்
உயிர்ப்பெனும் தேசம் செய்தாய்
மலைப்பகை எதற்கும் அஞ்சா
மறவனே மறப்போம் அல்லோம்!

காலொடு விழுப்புண் பெற்ற
காலத்தும் களத்தே நின்றாய்
கோலொடு ஊன்றி நின்று
கும்பத்தில் சுடுகண் ஏற்றாய்
ஆலொடு விழுதே போன்றே
அரும்படை தன்னைச் சேர்த்தாய்
நூலொடு உலகம் சென்றாய்
நூதனே மறப்போம் அல்லோம்!

முள்ளிலே பிய்ந்த சேலை
முடிச்சுகள் அவிழ்க வென்றே
வெள்ளைமா மனிதர் வந்தார்
வேதனை தோய்ந்த சிங்கக்
கொள்ளையர் கொலையர் காதைக்
கொடுமைகள் எடுத்துச் சொல்லி
தௌ;ளுமாத் தமிழர் ஈழம்
தீட்டினை மறப்போம் அல்லோம்!

(11)
தமிழ் அன்னை


தேவதை போலே அவள் நடந்தாள் -ஈழத்
தெருவெலாம் பூக்களாய்த் தானளந்தாள்..அவள்..-தேவதை..

ஆவது ஒன்றில்லை அடிபணிந்தேன் அவள்
ஆடையின் மீதுநான் குடிபுகுந்தேன்..அழகுத் -தேவதை

மேவி நடந்தாள் விளக்காய் ஒளிர்ந்தாள்-கவி
விளைத்திடு என்றே வேய்ங்கிளை மலர்ந்தாள்
தாவிடும் தென்றல் தாவணி அசைக்கும்-வீணைத்
தந்திபோல் என்மனம் தழும்புகள் விதைக்கும்.. –தேவதை போலே

தேரே குலுங்கத் திரும்பிய தோகை
செந்தமிழ் மங்கைநான் என்றே பகர்ந்தாள்
நேரே தரிசனம் நித்திலம் கொடுத்தாள்-அன்னை
நினைப்பில் அழகாய் நேரிழை உதித்தாள்..அவள்- தேவதைபோலே

12)
தேசப் பிரகடனம்..
எடுப்பு

பிறந்தது பிறந்தது தமிழீழம்-தலைவன்
பிரகட னத்திலெம் தமிழீழம் -பிறந்தது..
தொடுப்பு

எழுந்தது எழுந்தது ஈழமண் கொடியே
இனித்தமிழ் ஒலித்திடும் அய்னாவின் மடியே. -பிறந்த
முடிப்பு

பறந்தது பறந்தது புலிக்கொடி அசைந்தே
பரந்தது பரந்தது பாரெலாம் இசைத்தே
முரசம் அறைந்தது முத்தமிழ் கொடுத்தே
முழங்கிய தலையாய் வெற்றிமண் உரைத்தே..-பிறந்த

காவிய நங்கை கனித்தமிழ் மங்கை
கவியழ கானநம் கார்நில நங்கை
தேவி நடந்த திசையெலாம் ஈழம்
திக்குகள் ஆகின தேசத்தின் நாதம்..-பிறந்தது..

(13)
இதயம் வரித்தவள்..!எடுப்பு
என்னிதயம் வரித்தவனே இன்பத் தமிழே –எனை
ஈன்றபொழு துவந்தவளே ஈழ மகளே..! -என்னிதயம்
தொடுப்பு

மன்னர்மணி மாளிகையில் வசித்தவளே.-பொதிகை
மலையுதித்த செந்தமிழே செம்மொழியே -என்னிதயம்


காலளந்த போதுமெந்தன் கண்மணியில் நீயிருந்தாய்
நூலளந்த போதுவந்து நூலிடையே அருகிருந்தாய்
வேலெடுத்த மறவர்படை வில்லினிலே வழிதொடுத்தாய்
சேலெடுத்த மான்விழியே செந்தமிழே செண்பகமே..-என்னிதயம்

சேரசோழ பாண்டியர் சிம்மாச னத்திருந்தாய்
ஈழமன்னர் மாளிகையில் இளவரசி யாயிருந்தாய்
ஆரமுதே அங்கையளே ஆய்பலகைச் செங்கலையே
ஆடலமு தாகவந்து அரங்கமிடும் பொற்குவையே..-என்னிதயம்..


(14)
மாவீரர் கோவிலிலே..!


மாவீரர் கோவிலிலே மணியொலிகள் கேட்குதம்மா-எங்கள்
மறவர் சிதைமடியில் மண்ணினிசை யார்க்குதம்மா ..அம்மா.. –மாவீரர்

பூவிரியும் ஓசையிலே புலிமுகங்கள் சிரிக்குதம்மா-தமிழ்ப்
பொன்னீழம் மலர்ந்ததென்று பொற்கரங்கள் அழைக்குதம்மா. அம்மா-மாவீரர்..

கார்த்திகைத் தூபமிடும் காலையிசை யாகுதம்மா-பனி
போர்த்திவைத்த புற்களெலாம் போர்மறவம் பேசுதம்மா
நேர்த்திவைத்து உயிரிறைத்த நிலமலர்கள் பாதத்திலே
நெஞ்சுருகப் பாடுமொலி நித்திலமாய் விரியுதம்மா.. மாவீரர்..

கார்த்திகைப் பூக்களெலாம் கண்விழிக்கும் நேரமிது
வார்த்தைகள் இன்றியெங்கள் வணக்கமிடும் காலமிது
நேர்த்திவைத்துத் தமிழினத்தின் நிலத்துமலர் ஆனவரை
பார்த்தொருகால் விழிபெருக்கிப் பதிலுரைத்துத் தீபமிடும் -மாவீரர்

ஓ..உயிர்தந்து உறவீந்து உரிமைப்போர் ஆர்த்தவராம்
உயிர்வெடியை உடைக்கவைத்து எதிரியிடம் காத்தவராம்
மாவீரர் ஆனவெங்கள் மண்வயத்தின் சுவடுகளாம்
வயல்மடியில் குருதியிட்டு;த் தற்கொடையில் மலர்ந்தவராம் -மாவீரர்
(15)
சிதைமலரும் மாவீரர்


உன்னை எப்படி இதயம் மறக்கும்
உயிர்க்கொடை தந்து ஈழம் பதிக்கும்.. - உன்னை

அன்னை மடியின் முலைப்பால் மறந்தாய்
ஆடித் திரிந்த முற்றம் துறந்தாய்.. –உன்னை எப்படி

எல்லையில் வந்த எதிரியின் முனைப்பை
கண்களில் வரித்துக் களத்தினில் புகுந்தாய்
சொல்லொணாத் துயரம் தேசத்தின் உதயம்
சுதந்திர இருப்பில் குருதியே இறைத்தாய் -உன்னை எப்படி

புதைகுழி அல்ல விதைகுழி என்று
சிதையினிலே நீ சித்திரம் செய்தாய்
கதைகளிலே நாம் காணாப் பரணி
களத்திலே புலியாய்க் கண்டதே தரணி -உன்னை எப்படி

கண்ணீர் மழையில் கற்சிலை நனைய
கற்புரத் தீபம் கரங்களில் விரிய
சிறுத்தை உனக்கு திருப்புகழ் பரவச்
சிந்தையில் தெய்வச் சொரூபம் கண்டோம் -உன்னை எப்படி

(16)
பிறந்தநாள் காணுகின்ற பிரபாத்தம்பி


எடுப்பு

பிறந்தநாள் காணுமெங்கள் பிரபாத் தம்பி-தமிழன்
பிறந்தநிலம் இருக்குதடா உன்னை நம்பி.. -பிறந்தநாள்
தொடுப்பு

அறம்படைத்த போர்மறவம் அறிந்தாய் அம்பி-நீ
அவதரிக்க முன்னால்நாம் அழுதோம் வெம்பி ...!-பிறந்தநாள்

முடிப்பு

முகையரியும் சிங்களத்தே முகமே பட்டோம்-எங்கள்
மூதாதை நிலமனைத்தும் முடியப் பார்த்தோம்
வகைதெரியாக் காலமதில் வரவே வைத்தாய்-நீ
வந்துதானே செந்தமிழின் வாழ்வே தந்தாய் –பிறந்தநாள்

ஐம்பத்தி நான்காகும் அகவைப் பூக்கள்-உனக்கு
அகிலமெலாம் இசைக்குதடா அழகுப் பாக்கள்
சிங்களத்தின் கொடுமையில்நாம் சாகும் ஈக்கள்-சூரியன்
பிள்ளைநீ தோன்றிவந்தாய் செய்தோம் விடியல்.. –பிறந்தநாள்

No comments:

Post a Comment