Friday, December 26, 2008

தந்தை மாம்பழம்


தந்தை மாம்பழம்
தரணியில் மறைந்தார்!

காலத்தில் உதவும் தந்தை
கனிந்திடும் மகவின் சிந்தை
ஞாலத்தில் மனிதர்க் காக
நலிந்தவர் உளத்திற் காகப்
பாலமாய் நின்ற செம்மல்
பாருளோர் தம்மை விட்டுச்
சோலையாம் யேசு மன்றில்
சேர்ந்திடப் பிரிவு கண்டோம்!

மாம்பழம் என்றால் நல்ல
மனிதமே என்றே யாகும்
பூம்பொழில் தமிழீ ழத்தின்
புத்திரன் என்றே யாகும்
காம்பொடு பூக்கள் ஆகிக்
கனிநிலச் சாலை விட்டுப்
போம்பொழு தாற்றா தெண்ணிப்
பூமியில் வாடு கின்றோம்!

மாம்பழப் பூக்கள் நூலும்
விடியலின் வாயில் என்ற
தீம்தமிழ் நூற்கள் யாத்துத்
திவ்வியத் தமிழீ ழத்தின்
தேம்பிய பக்கம் எல்லாம்
தேடலாய் நின்ற சோதி
சாம்கொடை எய்தி விண்ணின்
சரித்திரம் கொண்டான் அம்மா!

மற்றவர் உதவிக் காக
வாழ்ந்தவர் மரித்துப் போனார்
பெற்றமண் நிலத்திற் காகப்
பேணிய உள்ளம் போனார்
உற்றதோர் நண்பன் என்று
உயர்ந்தவர் விட்டுப் போனார்
பெற்றதாய் மண்ணின் தெய்வப்
போதகர் நெஞ்சில் வாழ்வார்!

No comments:

Post a Comment