கல்விமான் செல்வரத்தினம்(செல்வரத்தினம்) ஆசிரியர்
மறைந்தநாள் கவிதை.
இலங்கையன் வணக்கம்!
மனிதரில் நேயம் மிக்கோர்
மாமனி தன்னே என்பார்
புனிதராய் நிற்போர் எல்லாம்
புத்தனாய் மதிக்கக் காண்பார்
கனிதரும் சுவைபோல் கல்வி
கண்டவர் பயனே ஈவார்
இனியதின் மகிமை எல்லாம்
இலங்கையன் கொண்டான் என்பேன்!
எறும்புகள் ஊர்தல் போன்று
இவன்நடை இருக்கும் சின்னக்
குறும்புகள் சிரிப்பி னோடு
குறுமொழி கனமாய் மின்னும்
பெறும்புகழ் இவனைச் சார்ந்து
பெரும்தமிழ் அறிஞன் ஆனான்
தொறும்நிலக் கனடா மன்றில்
செந்தமிழ் மனிதம் தந்தான்!
கரும்புகள் இனிக்கா திந்தக்
கல்விமான் கதைக்கும் போதில்
அரும்புகள் விரிதல் போலே
அழகுற மொழிவான் சாதி
நொரும்புகள் நிலத்தில் கண்டு
நொடிந்தனன் அதற்குள் நின்றும்
திரும்பினான் செல்வா என்னும்
சிந்தனை யாளன் என்பேன்!
ஆயிரம் குடங்கள் வைத்து
அளன்கின்ற ஓமம் தோற்கும்
பாயிரம் கொண்டு இந்தப்
பரிதியின் பாடல் பூக்கும்
தாயினும் சிறந்தான் இந்தத்
தமிழறி வாளன் கண்டீர்
நோயினை வென்றான் ஆயின்
நின்றவன் போயே விட்டான்!
ஊன்றிய தடியே இல்லான்
உலவிய அறிஞன் எங்கே?
வான்மடி சென்றார் மன்றில்
வந்துநின் றழுவான் எங்கே?
கூன்பணி கொள்ளான் தேசக்
கூட்டமாய் நிற்பான் எங்கே?
ஏன்இவன் சென்றான் என்றே
என்னுளம் கனக்கு தம்மா!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
ஒரு தூயனின் இறப்பில் இதயத்தால் வணங்கி
புதியபாரதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment