Wednesday, March 18, 2009

எத்தனை காலம்தான்?




எத்தனை காலம்தான்?-01

கிழக்குக் கொடுத்த பிந்திய உதிரம்..!

வர்சா..!

கப்பம் கேட்டுக் கடத்திக் கொலையிடப்பட்ட
கனியா மொட்டு..

இன்னும் உலகம் தெரியாத-புரியாத
ஆறுவயது அழகின் மொட்டு-சின்னச் சிட்டு!

கொலையைச் செய்தவன் கொலையில்
விழுந்தான் எனினும்..
அலை அலையாய் வரும் செய்திகள்..
அதிர்ச்சிகளாய்..

இவனுக்கும் கருணா குழுவுக்கும்
இருக்கின்ற தொடர்பும், அவர்களும் இவனுமாய்
ஆற்றிய கடத்தல், கொலை, கப்பம், கற்பழிப்பு என
முப்பத்தைந்து குற்றங்களுக்கு
ஒப்புதல் கொடுத்திருக்கின்றன இந்த
ஊத்தை முகம்கள்..

தமிழனை அழித்துக் காட்டி ஒரு அமைச்சுப் பதவிக்கு
கருணா அரச முகங்களைப் பார்க்கிறான்..

தமிழனைக் கொல்வதாலேயே இந்தத் தாடனை
கோட்டும் கழுத்துப் பட்டியுமாய்
அலங்கரித்திருக்கிறது அரசாட்சி..

இதையெழுதுகின்ற நேரம்,
ஆயிரம்கிலோ நிறையுள்ள
பன்னிரண்டு குண்டுகளை,
வன்னியின் தலையில் இட்டுக் கொண்ட
வதைபடலத்தில்...
இந்தச் சிங்கள
அடிவருடிகள்..ஆகா..இன்னும் இன்னும்
என்று ஆட்சிக்குச் சங்கம் வாசித்துக் கொள்கிறார்கள்..

உதவாக் கரைகளோடு ஓடிப்போனவன்,
இலண்டனில் மனைவி இருக்க, கொழும்புக்
கடற்கரை விடுதியொன்றில்
காரிகை ஒருவர் தோள்பற்றி நிற்கக் கண்டதால்
லசந்தா என்ற இலங்காலீடர்
பத்திரிகையாளனைக் கொன்றான் என்று
அரசாங்கத் தரப்பில் இருந்து
அறிவித்தல் வந்தபோதும்
இந்த அடிமைப்பிரகிருதி சிரித்தபடி நின்றான்..!

கருணாபோல் எத்தனை கயமைக் கூட்டங்கள்..

எத்தனை மானிடங்களுக்கு இந்த எட்டப்பர்
இயமன்களாக வந்து கொண்டார்கள்..

குமார், யோசப், ரவிராசன், சிவராம், வெலிக்கந்தையில்
கொலையுண்ட தொண்டர்கள் என நீண்ட வரிசையைக்
கணக்குப் போட்டால் .....?

விரிந்து பரவும் இந்த
விசமிகளின் நஞ்சு..
பல்லாயிரம் விசப் பாம்புகளாய்..விரிகிறது!

வீராவேசமாக ஒரு விடியலுக்குப்
போராடுகின்ற ஒரு இனத்தை..
அதன் தலைவனை...
இந்தா அங்கே இருக்கிறார்..
இங்கே இருக்கிறார்..என்று
எல்லாம் தெரிந்தவனாக
இராசபக்சாவுக்குத் தன்னைக் காட்டிக்கொள்ளும்
இந்தத் தமிழ்த் துரோகி..
கிழக்கின் விடிவெள்ளி என்றல்லவா
கீதம் பாடுகிறான்..

புலிகளை ஒடுக்க,
இரண்டு கிழமைகள் போதுமென்றவன்
இப்பொழுது ஒரு ஒன்றரை ஆண்டு என்று
இராசபக்சா வீரத்திற்கு
இதிகாசம் உரைக்கிறான் இவன்...!

பிரபாகரன் கோழையல்ல என்று
அரசுக்குக் கூறிய பிள்ளையான் என்ற
கிழக்கின் முதலமைச்சர் பதவிக்காக
முகம்காட்டுபவர்..சிலநேரங்களில்
ஒரு வித்தியாசமானவனாக..

இருந்தாலும் இரண்டும் ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்தாம்..!

ஒன்றரை இலட்சம் தமிழர்கள் ரொறன்ரோ வீதியை
நிறைத்து நின்றார்கள்..

நாற்பதினாயிரம் பெல்ஜியத்தில்..!

ஐம்பதினாயிரம் செனீவாவில்...!

ஒரு நாற்பது பேரை உலகநாடுகளில்
எங்காவது ஒரு சந்தியில்
ஏற்படுத்தக் கூடிய வக்கில்லாத
நாயகர்கர்கள் எல்லாம் என்னமாதிரி
இனநாயகர்கள் என
இராசபக்சா சால்வைக்கு
சாம்பிராணி விசுக்கும் சல்லாரிகளாக
இன்னும் நின்றபடி..!

குண்டைப்போட்டு நசுக்கும்
கொடிய அரசைக் கண்டு
எல்லாத் தமிழர்களும் ஒரே
இனமாக மாறுகிற பொழுது..
இவர்கள் மட்டும் பதவிகளுக்காக...

உலக வரலாற்றில் தமிழினத்தின்
மிகப்பெரிய சாவை இராசபக்ச குடும்பம்
அரங்கேற்றுகிறது..

கதறியழும் தமிழினத்தைக்
காக்கின்ற கரங்களாய் உலகம் முழுவதும்
தமிழன் முகம்காட்டிக் கொள்ளுகின்றான்..

சங்கரிகளாக-சிங்க நரிகளாக
கொழும்பைச் சுற்றிவாழும் சிங்க இறால்களுக்கு
வரலாற்று வலை இறுகத்தான் செய்யும்..!

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
எங்க நாட்டிலே-
எங்கள் இனத்திலே...?
-எல்லாளன் எழுதுவது

No comments:

Post a Comment