அற்புதம் நிகழும் தம்பி!
(நன்றி: வானமே எல்லை-02)
அடுத்தவன் பணத்தை நம்பி
அல்லவன் கரங்கள் பற்றிக்
கொடுத்தவன் காசி னோடு
கொள்ளலாம் தூக்கம் என்றால்
நடுத்தெரு வந்தே அந்த
நல்லவன் திருப்பிக் கேட்பான்
உடுப்புனக் குரிய வென்றே
ஒருநிலை அவனே கொள்வான்!
திருப்பிநீ கொடுத்தாற் கூட
தீயதாய் மாறும் நட்பு
கருத்தது மாறிப் பின்பு
காழ்ப்பதாய் மாறும் புத்தி
பெருத்திடக் காணும் அந்த
பீடைநீ கைக்கொள் ளாதே
பொருத்துநீ சிறுகச் சின்னப்
பொருளைநீ முதலில் தேடு!
வைப்பகம் தன்னில் போடு
வளரும்பின் வளரும் தேடு
ஒப்பிலா வங்கித் தேட்டம்
உருப்பெருத் தாகும் தோட்டம்
செப்பிடும் வெற்றிப் பாதை
செல்லலாம் என்றும் உந்தன்
கப்பிய சோகம் தீரும்
களித்திடப் படிகள் நீளும்!
காசினைக் கடனாய்ப் பெற்றுக்
காணிலக் கியங்கள் செய்தால்
பாசியாய்ப் பனியாய்த் தேயும்
படைப்புனக் காட்டம் காணும்
ஊசியாய்க் குத்தும் மாந்தர்
ஓடினும் விடவே மாட்டார்
வீசியே நடப்பாய் தம்பி
வீதியில் உன்னை நம்பி!
சுயமிடும் முயற்சி ஒன்றே
தோகையாய் விரியும் இற்றைச்
செயலெது உனக்கு உண்டோ
தேர்ந்திடு அறிவை நம்பி
முயலது போலே ஓடு
முடிவிலே வான எல்லை
அயலிலே வந்து நிற்கும்
அற்புதம் நிகழும் பாராய்!
-புதியபாரதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment