Sunday, March 15, 2009

மனிதத்தின் வெற்றி


மனிதத்தின் வெற்றி காண்பாய்!

முத்துகுமார் எரிந்தான்தீ எங்கே போச்சு?
முத்தமிழா உன்கதிதான் என்ன ஆச்சு?
சத்தியத்தை எழுதியவன் தர்மம் போமோ?
சரித்திரத்தைக் காட்டியவன் வேள்வி போமோ?
செத்தவர்கள் எதையெண்ணித் தீக்கு ளித்தார்?
சிங்களத்தைத் தூண்டுபவர் வெல்லத் தானோ?
எத்துபவர் எத்தட்டும் ஈழம் எண்ணி
இருப்பவர்க்கே தமிழகமாய் ஏற்று வாரீர்!

அமைதிபடை என்றுவந்த அம்சம் விட்டு
ஆறாயி ரம்மக்கள் அன்று கொன்றார்
மமதைப்பேய் கொண்டவர்கள் மாதர் தம்மை
வல்லுறவில் சீரழித்தார்; வாட்டி வந்தார்
சுமையெல்லாம் கொடுத்தவரே சிங்கப் பேயைத்
தூண்டியின்று ஈழத்தின் சாக்கள் வைத்தார்
எமையெல்லாம் இறப்புக்கே இட்டார் தம்மை
இன்தமிழா வாக்கிட்டு ஏற்பாய் தானோ?

ஓருகையாய் ஈழமதை எண்ணி நிற்கும்
எழும்தமிழர் கையோங்கக் காண்பீர்; எங்கள்
இருகையால் தொழுகின்றோம் எங்கள் முந்தை
இன்பிறப்பே தமிழகமே உங்கள் வெற்றி
தரும்வாக்கில் எங்களுயிர் தங்கும்; இல்லைத்
தறிக்கும்கைச் சூனியமே தாக்கும்; அந்தப்
பெரும்சாவைச் சுமப்பதற்கே பெற்ற மண்ணின்
பெருங்கதைகள் இருக்குமடா புக்காய் நெஞ்சே!

பத்துத்த லைமுறைக்கும் பட்டே போகப்
படுபாவிக் கோத்தபாயன் பார்க்கச் சொன்னான்
செத்துப்போ என்பதுவே தீர்ப்பே என்று
சொல்லுகின்ற சிங்களத்தில் என்ன உண்டு?
கத்துமணித் தமிழ்க்கடலம் கண்ட மண்ணே
கதறியழும் தமிழர்களைக் காண்கப் போமோ?
முத்துமணித் தமிழகத்தின் முன்னே நிற்கும்
முழுப்பணியும் மானத்தின் வெற்றிக் காப்பே!

-புதியபாரதி

(சகல தமிழக ஊடகங்களுக்கும் செல்வதாக)

No comments:

Post a Comment