Friday, March 13, 2009

உலகத்தமிழா..


உலகத்தமிழா..
உன்கையில் விடியல்..

கண்ணில் தெரியும் மனித விளக்கைக்
காண வில்லையடி-எங்கள்
மண்ணில் இன்னும் மரணப் பேய்கள்
வாலைக் காட்டுதடி

சுனையின் ஊற்றுச் சிவந்த குருதி
சீறி வருகுதடி-சேற்றில்
மனையின் கூடு ஊழிக் கூத்தில்
வாதை கொடுக்குதடி!

நெருடும் காற்று குருடாய் வந்து
குடில்கள் அள்ளுதடி-துயரம்
வருடக் கூட மனிதம் இன்றி
மரணம் துள்ளுதடி!

ஊரும் உறவும் பிரிந்த கூண்டு
உடைந்து பறக்குதடி-உரிமை
கோரும் உறவு கூட இன்றிக்
குலைந்து சிதறுதடி!

உலகத் தமிழா இனியும் எங்கள்
உறவு சாகுமோ?-அந்த
இலவம் பஞ்சாய் இராச பக்சன்
எரிப்பில் வேகுமோ?

அகில மெங்கும் துயிலத் தமிழன்
ஆகக் கூடுமோ?-அட
முகிலைக் கிழித்து அதிர்வைக் காட்டு
விடியல் தோற்குமோ?

-புதியபாரதி

No comments:

Post a Comment