Monday, March 23, 2009

சுதந்திரப்போர்..!

எத்தனை காலம்தான்..-03

சுதந்திரப்போர்..!

நாள்முழுதும் கொத்துக் குண்டுகள்..

சின்னப் பிஞ்சு தொடக்கம்
சிதறும் முதியவர்கள்..

போருக்கு நீரூற்றுவது இந்தியா
என்பதற்கு இலங்கா நாடாளுமன்றம்
பதிந்து அனுப்பியிருக்கிறது..

முல்லைத்தீவில் பிரபாகரனைப் பார்த்ததாக
கோத்தபாயா கோயபல்ஸ் ஆனார்

இராணுவ நகர்வை உள்ளேவைத்துப்
புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட
யுத்தத்தின் அறுவடையை
இராசபக்ச இப்பொழுது அளந்தபடி..!

இரண்டாயிரத்து ஒன்பது பங்குனித் திங்கள்
இந்தப் பக்கம் எழுதப்படுகிறது..

இறந்தும் படுகாயப் பட்டவர்களுமாய்
இருபதினாயிரம் இராணுவன்களை
இந்த இருசோடி வாரங்கள்
பதிந்திருக்கின்றன..

உலகமெங்கும் உருவான
தமிழர் எழுச்சி
வன்னித் துயரங்களுக்கு
ஒத்தடம் கொடுக்கிறது..

அய்நா மன்றத்தில் மனித உரிமைகள்
சிறீலங்காவைச் சுற்றி
முட்கம்பி வேலிகள் போடுகின்றன..

இராணுவ மாமேதை என்ற
இலட்சனையை பிரபாகரன்
மீண்டும் பதித்துக் கொள்கின்றார்..

பின்வாங்கப்பட்டதாகக் கூறப்பட்ட
பூமியில், புலிகளின் இறுதிநாட்களுக்கு
எண்ணிக்கொண்ட இந்தியாவும் இலங்காவும்
மூன்று நாட்கள் என்ற கணக்கு
முடிச்சு மாறிவிட்டதை உணர்கிறார்கள்..

ஐம்பத்தி ஏழாவது..எட்டாவது படையணி
கும்பம் விழுந்து பின்வாங்கிக் கொண்டிருக்கிறது..

ஒட்டுசுட்டான் முள்ளியவளை வரை
துணுக்காய்..மன்னார் மேற்காய்த்
துளைக்கப்பட்ட ஊடறுப்புக்களில்
புலிகள் நிற்பதாகச் செய்திக் கசிவுகள்
திரும்பிக் கொண்டிருக்கின்றன..

கடந்த வருடம் இரண்டாயிரத்து எட்டில்
ஊடக ஆய்வாளர்
அனிதா பிரதாப் எழுதிய கட்டுரை
ஞாபகமிருக்கலாம்..

ஒன்பது மாசியில் மூசிவெடிக்கும் போரில்
புலிகள் திருப்பப் போர் எழும் என்ற
எழுதிக் கொண்டார்..

இவரின் கணிப்பும், புலிகளின் கணிப்பும்
ஒன்றுக்கொன்றாய் இணைந்த
இராணுவ நகர்வுப் பட்டறையில்
எழுதப்பட்டவைதாம் இவை.

ஆம்..அந்தப்போர்
நடைமுறைக்கு வந்த நாட்கள் இவை..

கிட்டே இழுத்து
முட்டக் கொடுக்கும் புலிகளின் படை
அரசு அறிவித்துக் கொள்ளுதல்போல்
அழிந்து போனவை அல்ல..

முரசு அறையும் நேரத்திற்கு
முழு உலகும் அதிர்வு நடக்கிறது..

உளத்திறன் அற்று சிங்க இராணுவம்
ஓடிக்கொண்டிருக்கிறது..

படைப்பிரேதங்களோடும், அவயம் இழந்தோருமாய்
கொழும்பு, அநுரதபுரம், குருநாகல் என்று
ஓடிக்கொண்டிருக்கின்றன காவு வண்டிகள்..

மக்களை முடிப்பதைப் பார்த்தே இன்றைய
சிங்களன் பார்த்து இராசபக்சாவுக்கு
கைதட்டிக் கொண்டிருக்கிறான்..

ஐந்தொகைக் கணக்கில் காணாதவர்களைக்
காட்டு என்ற சிங்களக் கனவாள்
எழுகின்ற நாட்களைக் கண்டு அரசாட்சி
கலங்கிக் கொண்டிருக்கிறது..

புலிவாலைப் பிடித்து..
விடுபட முடியாமல் இரத்தினசிறீக்கள்..

சோனியாக் காலத்தில் வரும்
மானியங்கள் மட்டும் கணக்கிடப்பட்ட நாட்கள்..

அரச இராணுவம் சேடம் இழுக்கிறதாக
இளம்பரிதி அறிவிப்பு வந்த
அடுத்தநாளின் வரிகள்தான் இங்கே
அலசப்படுகின்றன..

துரோகியாய்ப் போனவன் தூங்கி இருப்பது தானே?

தவமிருந்து வந்த தங்கத் தலைவனுக்கு
அவமாகிக் கதைபோடும் கருணா!
அட.. புலிகளைக் காட்டியே இன்னமும்
வாழுகிறான்..இவன்..!

சிங்கள இராணுவனுக்குச் சேர்த்துக் கொடுக்கிற
மங்களம் பாடுகிறது யாழ்ப்பாணத்தில்
இடக்கன் இடாப்பு..

அஞ்சி ஒடுங்கி வாழுகிறது
வஞ்சியர் மாராப்பு..

சிறுமியர்களையும் சீரழிக்கிறது இந்தச்
சீக்கூட்டம்..

கருணாவின் கூட்டம் கிழக்கின்
அழகுச் சிறுமியைக் கொன்றகதை
பொருமிப் பருக்கிறது..

கொலைகாரன் ஒருவன் சுடப்பட்டுச் செத்தான்..!

வலையில் விழுந்த மற்றவன்
நஞ்சுவில்லை உட்கொண்டு சாய்ந்தான்..

புதைக்கப்பட்ட இவனது சடலத்தைத்
தோண்டித் துப்பாக்கியால் சிதைத்தது
மக்கள் ஆத்திரம்..

தமிழனை வைத்தே தமிழனை அழிக்கும்
தந்திரங்களில் இன்னும் துட்டகெமுனுக்கள்..

தமிழகத் தமிழனே உங்கள்
ஆவேசங்கள் உலகம் முழுவதும்
மானத்தமிழன் ஆடைகள் ஆகிவிட்டன..

இந்தியத்தைத் துணைக்கு இன்னமும் அழைக்கின்ற
சிந்தனைக்குப் புலிகள் இன்னும்
வாக்குக் கொடுத்தபடி..
நடேசன் அழைப்பு வலிமையாக..

மாட்டாத இந்தியம் தீட்டாக வரைபடும்
என்பதைத் காட்டாக உரைக்கிறது காலம்..!

நீட்டாத கையை நீட்டினால் மட்டும்
நீளும் இந்தியச் சமுத்திரம்..

இல்லையேல் வீழும் வல்லாதிக்கப் பரவல்
என்பதைத் தீர்மானிக்கப் போகிறது
இன்றயை வன்னிப்போர்..!

குருதியிறைத்து, உடலைச் சிதறி
பதறி மடியும் என்தமிழர்களே,
பாலரே.. பிஞ்சுகளே..

உங்கள் உதிரங்களில் எங்கள்
உயிர்களைப் பதிந்து நாட்களை
இழக்கிறோம்..
உங்கள் சுவடுகளில் எங்கள்
சுதந்திரதேசம்.. எழுந்தபடி..!
-எல்லாளன்

No comments:

Post a Comment