Sunday, March 8, 2009

மாதரார் வாழ்க

மாதரார் வாழ்க! வாழ்க!
(மாதர்தினக் கவிதை
)

மாதரார் வாழ்க, அன்னை
மகத்துவம் வாழ்க, கற்பின்
போதனை வாழ்க, வஞ்சிப்
பெட்டகம் வாழ்க, வையக்
காதலே வாழ்க, மன்றின்
கருவறை வாழ்க, வெற்றிச்
சாதனை வாழ்க, நாளைச்
சந்ததி கொடுப்பாய் வாழ்க!!

பிள்ளைக்கு அன்னை நீயே
பெற்றவர் பிள்ளை நீயே
அள்ளிக்கை எடுக்கும் அந்த
அழகனின் மேடை நீயே
உள்ளத்தே தெய்வம் நீயே
உணவிடும் சுரபி நீயே
வள்ளிக்கு முருகன் போல்
வசமிடும் எழிலாள் நீயே!

சீதனம் உனக்குத் தந்தே
சேர்மணம் கொள்ளல் வேண்டும்
வேதனை தாங்கும் மண்ணின்
வேருனைப் போற்றல் வேண்டும்
சாதனை யாக்கும் தேசச்
சரிநிகர் படையாய் வந்த
மாதரார் ஈழ மன்றின்
மகத்துவம் பேச வேண்டும்!

பாரத்தைச் சுமப்பாய் தேசப்
படைஞர்கள் கொடுப்பாய் மைந்தர்
வீரத்தை ஏற்பாய் தேச
வேங்கையாய் எழுவாய் தன்னை
ஆரத்தி எடுப்பாய் வாழ்த்தி
ஆர்த்திடும் துர்க்கா ஆவாய்
மாரப்பூ இறைவன் செய்த
மனிதமே தாயே வாழ்க!

சோதனைத் தீயில் நின்றீர்
சிங்களக் கொடுமை தின்றீர்
ஆதனத் தோடு சென்று
ஆடவன் கைப்பி டிப்பீர்
பூதலப் தமிழர் பெண்மை
பிரபாவால் விடியல் பெற்றீர்
சீதனம் கேட்டால் தேசச்
சிறையிடச் சட்டம் கண்டார்

மனதினில் துணிவு பெற்றீர்
மனிதமாய் மகுடம் வைத்தீர்
கனரகம் இயக்கு கின்றீர்
கந்தகக் கணையாய்ச் சென்றீர்
தனமெனப் புதுமைப் பெண்ணாய்
தமிழீழத் தேசம் காத்தீர்
இனச்சரி சமமாய் நின்ற
எங்களின் தாயே வாழ்க!

கவிதைகள் செய்வீர் கன்னற்
கானங்க ளிசையை வைப்பீர்
அவையிடப் பரதம் நெய்வீர்
அரசியல் உரைகள் சொல்வீர்
தவமிடும் விடியல் சொல்லும்
தமிழ்மகள் ஆக வந்தீர்
நவமிடும் நிலத்துப் பெண்ணே
நாளிது தெய்வ நாளே!
-புதியபாரதி

1 comment:

  1. வண்ணக் கவிதைகளை வார்த்தெடுக்கும்- பாரதியே
    எண்ணமெல்லாம் செந்தமிழாய்
    நிறைந்திட்ட தமிழ் காப்பியனே,
    இன்னும் ஆயிரமாய் உங்கள் அரும் கவிதை தொடரட்டும்.
    வாழ்த்துக்களோடு
    தமிழ்சித்தன்

    ReplyDelete