Friday, February 13, 2009

காலங்கள் எழுதிடும் எல்லை

காலங்கள் எழுதிடும் எல்லை!

அய்யகோ அய்யகோ இத்தனை இத்தனை
அரக்கமா இலங்கவின் ஆட்சி?
ஆயிர மாயிரம் அன்னைமண் தமிழரை
அகதியாய் மாய்த்ததே சூழ்ச்சி
பொய்யுரை சொல்லியே பூமியை ஏய்த்தவர்
புழுதியாய்க் குண்டுகள் விதைத்தார்
பொடிபட நொருங்கிடப் பூவொடு பிஞ்சுமாய்
பொசுங்கிட வைத்துமே சிதைத்தார்
கையிலே குழந்தையும் கற்பிணி மாதராய்க்
கணவனோ டெரிந்தது நிலமே
கண்முனே சிதறிடக் கட்டொடு மக்களின்
கரையுடைத் தெழுந்ததே குருதி
செய்பயிர் நிலமதில் செத்துயிர் மடிந்திடச்
செய்தனர் சிங்களர் தேசம்
சிரசாகக் கொண்டதோர் தேசத்து மைந்தரே
திரளுவீர் இன்னுமா உறக்கம்!

அகதியாய் அடைத்தனன் அடைபட்ட சிறையிலே
அருந்தமிழ்ப் பெண்டிரைப் பறித்தான்
அவருயிர்க் கற்பினை அரக்கமாய்க் குதறினன்
அதன்பினே சடலமாய் முடித்தான்
சகதியாய் ஆனதே சஞ்சலம் மூளவே
சாக்குர லாகவே கொடுத்தான்
சரித்திட வைத்தவன் தமிழனின் சாதியைச்
சல்லடை யாக்கியே துளைத்தான்
குகைநரி யாகவே கொல்கிறான் தினம்தினம்
கொடுநிலம் ஆக்கியே வளைத்தான்
குடும்பமாய் அழிந்திடக் குழந்தைகள் பெற்றரைக்
கூவியே அழைத்திடத் துளைத்தான்
தகையிலான் ஆட்சியில் தருக்கமும் பேய்களும்
தாங்கிய நாடுதான் மிச்சம்
தாய்மடித் தமிழனே தாரணிப் புலமதில்
தனயனாய்ப் போக்கிவா அச்சம்!

இந்திய ஆட்சியின் இழிகுணம் தன்னிலே
இலங்கவும் கொன்றிடத் துணிந்தான்
இந்திரா காங்கிரஸ் என்றவர் சந்ததி
இன்றெமை அழித்திடப் பணித்தார்
இந்தியப் படைகளை இலங்கையை விட்டுநீ
ஏகுநீ என்றவர் தெரியார்
இரும்படி கொடுத்தனர் இரசீவார் பிடரியில்
என்றபின் னாயினும் உணரார்
மந்தியின் பாய்ச்சலாய் மன்மோகன் கூட்டமே
வாலாயம் போட்டுமே வந்தார்
மண்ணெலாம் எரித்திட வகுத்தனர் சிங்கள
வசைப்படை தன்னிலே புகுந்தார்
செந்தமி ழாயிரம் சிதறினர் ஆயினும்
சோனியாக் கூட்டமே மகிழ்ந்தார்
செகத்தினில் இந்தியச் செருகலால்; எம்மவர்
செத்தனர் செத்தனர் அறிவீர்!

கருணாநி தியென்றோர் களங்கமாய் நின்றவர்
கஞ்சலாய்த் தமிழகம் கண்டார்
காசுக்கும் பவிசுக்கும் கவிதையால் வரைந்தவர்
கனித்தமிழ் நாட்டினை முடித்தார்
குருவாகிச் செந்தமிழ்க் கூட்டத்திற் கில்லாமல்
கொடிகட்டித் தில்லிக்குப் பணிந்தார்
கொடுக்கையே இழுத்துப்பின் கூனியே சிங்களக்
கூற்றத்தின் மடியிலே விழுந்தார்
தருகின்ற உயிரெனத் தந்தவன் முத்துகுமார்
தாங்கிய சிந்தையைத் தெளியார்
தாய்மடி உணர்வினைத் தறித்துமே வரலாறு
தந்ததோர் சரித்திரம் எழுதார்
கருவாகி செந்தமிழ்க் காலத்தில் உருவாகாக்
கழிசல்கள் தமிழர்கள் இல்லை
கனியுயிர் ஈந்திடும் கண்மணிக் கீடெவர்
காலங்கள் எழுதிடும் எல்லை!

-நம்நாடன்

No comments:

Post a Comment