Wednesday, April 22, 2009

பிரபா என்னும் பரணித் தலைவன்!



வெண்பா
வாராது வந்த மனிதப் பெரும்தலைவன்
தேராது நிற்பவர்க்குத் தேசமில்லை-கூராட்சி
தின்று உயிர்கருக்கும் தீக்கொடுமைப் பேய்நாட்டை
என்றும் அறியாதோர் இத்தர்!

நீதி வழுவான் நெறிபிசகான் பின்னெண்ணி
மாதுக்கள் காணும் மனதுஇலான்-பூதசிங்கர்ப்
போந்தானும் கூடப் பொரியள்ளச் சென்றவரும்
மாந்தித் திளைத்தாரே மாது!

நற்குணங்கள் வாய்த்தவனாய் நற்றமிழைப் போற்றிவரும்
பொற்குணங்கள் கொண்டவொரு பேதமிலான்-அற்புதமாய்
மூன்று தசப்தங்கள் முன்னேற்றுப் பேருலகம்
ஒன்றாய்த் தமிழனிட்டார் ஓர்!

நாளைவரான் இன்னோர் நற்தலைவன் மண்மீதில்
தோளில் இவன்போலே தீரமுளான்-வேளையிது
ஒன்றே விடியல் உறுமண்ணில் வேராக்கும்
என்றே இந்நாள் எடு!
காப்பியக் கலித்துறை
பொல்லார் அசிங்கர் பொரியாரிடும் தீது கண்டே
எல்லா யுகமும் இழிவாரிலே இத்த ழிந்தோம்
கல்லார் மனமாய்க் கறையாகிய கொன்ற ழிப்பை
வெல்வோம் எனவாய்ப் பிரபாவெனும் வீர னுற்றான்!
விருத்தம்
செத்து அழிந்து சிதறினோமே
சிங்கப் புதரில் பதறினோமே
மொத்தி மொத்த முடிந்தோமே
மோடர் வதையால் அழிந்தோமே
இத்தால் இனியும் அழிவதுவோ?
என்றே உதித்தான் பிரபாவே
வித்தே விடியல் என்றிட்டான்
வீரன் வந்தான் தமிழ்நிலத்தே!
எண்சீர் விருத்தம்
தாழ்ந்தகுடி தாழ்வதுவோ தருக்கன் வாளில்
தமிழ்நிலமே அழிவதுவோ தானை ஏற்று
மூழ்கும்போர் தனையாடி முத்துக் கொள்வோம்
மோகமண்ணைக் காத்திடவே வித்துக் கொள்வோம்
ஆழ்ந்துறக்கம் கொள்ளாதே அன்னை நாடே
ஆண்டவினம் துயின்றாலே அழியும் கூடே
வீழ்ந்தநிலம் வெல்லவென்றே பிரபா வந்தான்
வீதிமுற்றும் மங்கைவந்து வேங்கை என்றாள்!
கலித்துறை
தம்பி தாங்கிய தானையின் போர்ப்பறை தன்னில்
எம்பி வந்ததே ஈடிணை அற்றதோர் ஏற்றம்
அம்பி நோக்கிய அன்னைமண் விடியலின் அறமாய்
நம்பி யார்த்ததே நானிலம் முற்றிலும் நன்றாய்!
வஞ்சி விருத்தம்
வாழிய தலைவன் தேசம்
வாழிய வேங்கைப் போதம்
வாழிய புலியின் படையே
வாழிய உறவின் நிலமே
வாழிய பிரபாத் தம்பி
வாழிய பரணித் தலைவா
வாழிய தளபதி யோரே
வாழிய அரசிய லோரே
வாழிய மக்கள்கூடே
வாழிய வாழிவாழி!

1 comment: