Saturday, April 4, 2009


எத்தனை காலம்தான்..?-04
--------------------------------
தமிழர்மட்டும்
மந்திகளாக இருப்போம்..!
----------------------------

பித்தலாட்டக் காரன்
சத்தியம் செய்கின்ற நேரம்.!

உரத்துக் கதைத்தவன்
மரத்துப் போகும் காலம்!

உண்மைவாதி
கண்பிடுங்கப்படுவான்..!

அறிவித்தல்கள்
ஆள்மாறிப் பிறக்கும்!

குறிவைத்துப் பரப்பக்
கொழுந்தன் வருவான்!

ஈழத் தமிழர் கொலைகளில்
எழுந்து நடந்த-
இணைந்து அழுத அரசியல்வாதிகள்
ஒன்றா(க்)க முடியாத உப்பரிகைகள்..!

கன்னற் சிறுவர்களின்
ஈழக் கொலைகளில்,
கறிவைத்தபடி உறிவைத்த
இந்திய அரசியல் வாதிகள்
இந்த நேரத்தில்
போர்நிறுத்தம் கேட்பார்கள்..

ஈழத்துயரில் இணைந்த தமிழகத்தை
சேர அணைக்க மறந்தது
செந்தமிழர் வியூகம்!

இப்படியாக.. மப்படி செப்படி
வித்தைகளில் தமிழகத்திலும்
மறுபக்கங்கள்..

பிரபாகரனைப் பிடி..அவன்
கொடியவன் என்று
அலறிய காங்கிரசுக் கட்சியினரோடு..,
பிரபாகரன் என் அண்ணன்..அவன்
உலகத் தமிழர் தலைவன்..இன்றைய
ஈழத் தமிழர் கொலைகளுக்கு இன்றைய
காங்கிரசு ஆட்சியே காரணம் என்ற..
திருமாவளவன் கூடுகட்ட வந்த குருவியாக..

ஈழத் தமிழர்களைக் காப்பாற்று..இல்லையேல்
பதவி துறுப்போம் என்ற கலைஞர் கட்சி,
உதறித்தள்ள நாங்கள் என்ன
ஒன்றுமில்லாதவர்களா? என்று
இலங்கைப் போரின் இயக்கமான இந்திய
ஆட்சிக் காங்கிரசை இறுக்கிப் பிடித்தபடி..

தமிழகத்திலும், இந்தியத் தலைநகரிலும்
ஆட்சிக் கூடுகண்ட
தி.மு.க என்னும்
திருத்த முடியாத கழுதைகள்..
போலிக் கடிதங்கள் வாங்கிய
பொழுதைப் பார்க்கிறோம்..

மனிதச் சங்கிலி நடத்திய
புனிதங்களில் என்ன
பொதிந்திருக்கிறது என்பதைப் பார்க்கிறோம்..!


மதிமுக-அதிமுக-பாமக-
இ.க.க(கம்யூனிஸ்ற்) என்ற
க(h)வில் முடியும் கட்சிகள்,
இன்றை ஈழமக்கள் இறப்பிற்குக்
காரணமான இந்திரா காங்கிரசுக்கு
எதிரான-உரத்துக் கதைக்கும்
ஒருகுழு என்ற அளவில்
கொஞ்சம் நிறுத்தி வாசிக்க-
நின்று (சு)வாசிக்க முடிகிறது..

செயலலிதா, பாண்டியன், கோபாலசாமி,
இராமதாஸ் என்ற ஓங்கிய குரல்கள்
தமிழகத்தை உசுப்பி விட்டால்
ஈழத் தமிழீழத்தின் உதிரங்கள் இறைப்பு
நிறுத்தக் கூடிய நிகழ்வு ஒன்று
நிதர்சனமாகலாம்..

இல்லையேல்..?

ஆயிரம் குழந்தைகள் வரை இறக்கவும்,
பல்லாயிரம் மக்கள் உயிர்பறக்கவம்,
அங்கம் துறக்கவும் காரணமாகிய
இந்திய காங்கிரசின் தலைவி
இந்தத் தேர்தல் களத்தில் நின்றுதான்-
வந்தபின்புதான்..
இலங்கையில் போர்நிறுத்தம் கேட்கிறார்..

பேயாட்டக்காரி சடலங்களைத்
தீனியாகக் கேட்டுவிட்டு..மேடைக்குவந்து
சாமியாட சந்திக்கு வந்திருக்கும் சன்னதம்
அல்லதில்லையா இது?

அன்றிலைப் பிரிந்த அசுரத்தில்,
பிணக்குவியலைப் பார்த்து இரசித்த
இந்திய இரத்தம் இல்லாத இவரால்,
ஈழத்தைச் சொந்தம் கொண்டாட
எப்படி முடியும்..?என்ற கேள்விக்கு
விடைகாட்டியபடி இந்தச் சோனியா என்ற...

பிரணாப் முகர்சி, சிவ்சங்கர் மேனன்
என்றவர்கள் போர்நிறுத்தப் போகிறார்
என்று அறிவித்துப் போய்நின்று
இராசபக்சாக் கரங்களைக் குலுக்கியபின்..
ஒரு இரண்டு கிழமை தருகிறோம்..அதற்கிடையில்
பிரபாவைக் கொன்றுவிடுங்கள் என்று கூறிவந்த
வாய்ப்பாடுகள்.. பொய்வாய்ப்பாடுகளாக ஆகிய பின்னும்..

ஐ.நா.மனித உரிமை அதிகாரி ஹொல்ம்ஸ்,
நோர்விய எரிக் சொல்கைம்
விடுதலைப் புலிகளோடு நிலைமைகளை
ஆராயக் கூடுமென்றால்..?

ஐ.நா.மனித உரிமை அமைப்புகள்,
சர்வதேச நிவாரணத் தொண்டு நிறுவனங்கள்
பார்வையிடத் தடை விதிக்கக் கூடாது என்ற-
போர்நிறுத்தம் வேண்டுமென்ற-
பிரித்தானிய, அமெரிக்க, ஐரோப்பிய யூனியன்
அரசுகள் கேட்பதை தமிழீழத்தின் அருகுநாடான
இந்தியம் கேட்க முடியாது என்றால்..?

இரசிய-சீன கூட்டு முகங்களின்
பின்னால் நின்று
ஐ.நா.வில் இலங்கை மனித அவலம்
விசாரிக்கப்பட
முடியாதவாறு தடுத்து நிறுத்தும்
முகமூடியை இந்தியா
போட்டிருக்கிறது என்றால்...?

அய்நாவின் நிலக்கீழ் அறையில் நடத்திய
அமெரிக்க-பிரிட்டன்-அய்நா-சிறீலங்கா
அலசலுக்கு எதிராக
இந்தியா இருப்பதாகத்தானே
இருக்கும் என்ற
இன்றைய நிலைகளுக்கு அப்பால்..?

புல்மோட்டைக்கு அனுப்பிய
வைத்திய குழுவில்
அமைதிப்படை காலத்து அதிகாரிகள்-
றோவின் அரூபங்கள், இந்திய இராணுவ
வைத்தியர்கள் ஆகியோரை அனுப்பி,
ஓடும் இரத்தத்தோடு வருபவர்களிடம்,
பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற கேள்வியை
முதலில் கேட்டு பிறகு
வைத்தியம் செய்கின்றார்கள் என்றால்..?

எதற்கு இந்தியம் இருக்கிறது என்பதைத்
தெரிந்து கொள்ள முடியாது என்றால்...?

இனிநடக்கப் போவதும்.. யாரால்? எவரால்?
என்ன நடக்கப் போகிறது என்பதும் ...
இனிமேல் தெரியாது
இருந்துவிடப் போகிறான் தமிழன்..!

றோவின் பரப்புரை இப்பொழுதே ஆரம்பமாகிவிட்டது..

என்ன அது?

கருணாநிதியைக் கொல்ல
புலிகள் திட்டமிட்டார்கள் என்ற
பரப்புரை ஆரம்பமாகிவிட்டது....

இனிமேல்..

எங்காவது யாராவது கொலைவிழலாம்..?

அது புலிகளின் தலையில் போடப்படலாம்?

இந்திய றோ எதையும் செய்யும்!

தமிழர் மட்டும்..
மந்திகளாக இருப்போம்..!

-எல்லாளன்..

No comments:

Post a Comment