Thursday, April 16, 2009

எழுந்து நிற்கும் புலத்தமிழர்



பாகிஸ்தான் சீனா ரஷ்யா
பாரதச் சோன்யா கூட்டம்
ஏகித்தான் வரித்தார் லங்கா
இராசபக் சாவின் பக்கம்
மோகித்து ஆயு தங்கள்
மூடையாய்க் கொடுத்தார் யுத்தப்
போகியோ தமிழன் சாவில்
பொரித்துமே எடுக்கின் றானே!

இனப்படு கொலையே என்று
இன்றுபே ருலகம் கண்டார்
கனத்துரு வாண்டா மண்ணில்
கக்கிய சரிதம் போலே
மனத்திலே பேயாய் ஆடும்
மகிந்தனும் இரண்டு நூறாய்
தினம்தினம் கொல்லு கின்றான்
தேசெலாம் கேட்டா ரில்லை!

சுனாமியாய்த் தமிழன் மட்டும்
திரண்டனன் உலக முற்றும்
அனாதைகள் இல்லை மண்ணின்
அறுகம்புல் உறவே என்று
வினாடிக்கு வினாடி பொங்கி
வேதனை உகுத்து கின்றான்
கனாவிலும் காணாக் காட்சி
கண்டது உலகம் தானே!

உண்ணாது உலக மன்றை
உலுக்கிய தமிழன் கண்டேன்
எண்ணாது இருந்த வெள்ளை
ஏடெலாம் எழுதக் கண்டேன்
புண்ணாக மனது எற்றும்
பொங்கிய மக்கள் கண்டேன்
விண்ணாகப் பரந்த சேதி
விறைப்பிலும் ஒலிக்கக் கண்டேன்

தமிழனே புலிகள் என்றார்
புலிகளே தமிழன் என்றார்
இமயமாய்த் திரண்ட சுற்றம்
இடித்திடும் பலமாய் நின்றார்
அமைதிதான் வேண்டும் என்றார்
அன்னைமண் காப்பீர் என்றார்
இமையொடும் கண்ணே போல்வர்
எங்களின் உறவே என்றார்!

மன்றெலாம் இலட்சம் மக்கள்
மகுடமாய்த் தமிழாய் நின்றார்
கொன்றொழிக் கின்ற சிங்கக்
கொடியரைக் காண வைத்தார்
இன்றெலாம் அய்நா மன்றம்
இனவழிப் பதனை நேரிற்
சென்றுமே பகுக்கா விட்டால்
சொந்தமண் இறக்கும் என்றார்!

உலகமெல் லாமும் ஈழம்
உரைத்ததெம் உறவீர் எங்கள்
நிலமது எரியும் போது
நிரையெனக் குவிந்தீர் மண்ணின்
குலமென வேற்று நாட்டில்
கொடியுடன் வந்தீர் எங்கள்
புலித்தமிழ் மண்ணை இந்தப்
புவியெலாம் வரைந்தீர் வாழ்க!

-புதியபாரதி

No comments:

Post a Comment