Sunday, May 10, 2009

மாதாவே உன்னை


மாதாவே உன்னை எண்ணி!

மாதாவே உன்னை எண்ணி
மனதினில் வழுது கின்றேன்
நீதானே தமிழை எந்தன்
நெஞ்சினில் அளித்தாய் உற்குப்
பூதானம் எதுவும் செய்யேன்
போற்றியுன் முகத்தைக் கோர்த்துப்
பாதானம் மட்டும் யாத்தேன்
பாரினில் நிலைத்தேன் தாயே!

மாதாவே அன்று என்னை
மடியினில் வைத்து நின்ற
போதான போதிற் சிங்கர்
புரிந்திடும் கொலையின் சேற்றை
சூதாளர் கொடுமைப் பேயைச்
சொல்லிநீ தந்தாய் அம்மா
வேதாளம் முருக்கு ஏற
மகிந்தவாய் இன்று கண்டேன்!

வயலிலும் வரப்பும் வாய்க்கால்
வண்ணநெற் தோட்டம் எங்கும்
அயலிலும் கோவில் ஆக்கி
அளித்தனை சுயத்தின் வெற்றி
நியதியின் வாழ்க்கை முற்றும்
நின்றுநீ துயரை வென்றாய்
முயலினைப் போலே பாவாய்
மொழிந்தனன் உனக்கே அம்மா!

மாதாவின் தினத்தில் இந்த
மகனுனை வழுதும் காலைப்
போதாகும் போது விண்ணின்
பெருமலை யாகச் சேரும்
நாதாற்கும் ஒலிப ரப்பில்
நல்லதாய் உன்னை எண்ணிப்
பாதானக் குரலே செய்தேன்
பண்பெனும் பெற்ற தாயே!
-புதியபாரதி

No comments:

Post a Comment