Wednesday, May 6, 2009

வதையிலும் எழுவோம்!


அன்னையெங்கே தந்தையெங்கே?
அண்ணனெங்கே தங்கையெங்கே?
பிஞ்சுவெங்கே பிள்ளையெங்கே?
பெரியரெங்கே உறவுஎங்கே?

அள்ளிவிழுந் தெரியுதையா!
அக்கினியில் புகையுதையா!
கொள்ளியிடும் சுண்ணமிடும்
குலமெங்கள் கருகுதையா!

கற்பழித்துச் சாகவிடும்
கயவன்படை பாருமையா!
நெற்குவியல் கொடுத்தவர்கள்
நிதம்பசியில் சாகுதையா!

அகதியென்று சென்றவரை
ஆலையென இடிக்கிறானே
துகளுணவுக் கேங்கியெங்கள்
தேசமக்கள் சாகிறானே!

பிள்ளைகளைப் பிரித்தெடுத்து
பேயனெங்கே கொண்டுசென்றான்
வள்ளிகளின் உடலமெல்லாம்
வருகுதையா முகாம்களெல்லாம்!

பிரித்தானிப் படக்கலைஞர்
பெரும்வதையைப் படமெடுத்தார்
நரியிலங்காப் படைக்கலத்தின்
நாசவதை உலகமிட்டார்!

சோனியாவாள் சிங்களத்தை
திருமணம்தான் செய்துவிட்டாள்
கூனியளாய் வந்தபின்னால்
கொட்டுதடா எங்கரத்தம்!

சிங்களமே எரிக்குதடா
சிதறுதேங்காய் ஆக்குதடா
இந்தியமே ஆயுதத்தை
இந்தாவென் றளிக்குதடா!

பத்துதரம் அய்நாவில்
தைமூரை யுதைத்தபின்னும்
செத்துவிழுந் தாபோச்சு
சுதந்திரத்தை எடுக்கலையா?

கொத்துதுன்பம் இறைத்தாலும்
குருதிவிழுந் திறைத்தாலும்
செத்துவிழா தீழமடா
சுதந்திரத்தை எழுதுமடா!
-புதியபாரதி


அழுகின்றாய் என்னினமே
அகிலமெலாம் அழுகின்றோம்
விழுகின்றாய் என்னினமே
வீதியிங்கும் நாம்விழுந்தோம்!

வித்துடல்கள் சுமந்தவெங்கள்
வேர்மண்ணை விடமாட்டோம்
எத்தனைதாய் இடர்வரினும்
ஈழமண்ணை மீட்டிடுவோம்!

-புதியபாரதி

No comments:

Post a Comment