நாடுகள் கடந்த நாடு
நமக்குளே வேண்டும் போடு
ஆடுகள் ஒருமேய்ப் பன்கீழ்
ஆக்கிய தமிழர் ஈழம்
கூடுகள் கலைந்த தாகக்
குலவுமண் சாம்பல் ஆன
பாடுகள் பட்ட பின்னால்
பார்த்திருப் போமா சொல்வீர்?
துருக்கியக் கரையில் யூதர்
துளைத்துமே பசுமை செய்த
பொருப்பிலே ஆற்றை ஏற்றிப்
பொழிலெனப் பசுமை கண்டார்
கருக்கொடு எதிரி வந்து
கஞ்சலாய் எரித்த பின்னும்
நெருப்பிலே இஸ்ரேல் பூத்த
நிகழ்வதை நெஞ்சில் அள்ளாய்!
வயலெலாம் எரிந்த பின்னும்
வளமெலாம் புகைந்த பின்னும்
அயலெலாம் மக்கள் தீயில்
அவலமாய் எரிந்த பின்னும்
வியட்னமின் பூமி என்ன
வீழ்ந்ததா? தமிழா சொல்வாய்!
அயற்சிகொள் ளாதீர் ஈழ
அரசதைப் புலத்திற் செய்வீர்!
இராட்சதன் என்கப் போட்டு
இயமனாய் எரித்த காட்சி
இராசபக் சாவின் காலம்
எழுதிய தாயின் வையம்
தராசிலே இட்ட தாமோ?
தரணியின் அயினா! எம்மைக்
குரோதமாய்த் தானே பக்சக்
கொடியரைக் காத்தார் கொள்வீர்!
இந்தியப் பருக்கை நாடு
ஈழத்தை எரித்து விட்டு
மந்திரிப் பதவி கண்டு
மசக்கையில் கிடப்பார் எங்கள்
வெந்தவோர் பிஞ்சைப், பெண்கள்
வேதனைக் குரலைக் கேளார்!
அந்தகர் பின்னால் நின்று
ஆவதொன் றில்லைக் காணீர்!
அரசொன்று போடு! இந்த
அகிலமெல் லாமும் கூடு!
முரசென்று கூவு! லங்கா
முடித்ததை எங்கும் கூறு!
அரசியல் பாதை யோடு
அகிலத்தை ஆக்கு! வையப்
பரம்பினிற் தமிழீ ழத்தைப்
பரப்பிடு! வெல்லும் நாடு!
-புதியபாரதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment