Saturday, August 8, 2009
இந்தநாட்கள்...
இந்தநாட்கள்...
இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கா
எனவும் இன்னும் இருபது நாடுகளும்
தொடுத்த தமிழின அழிப்பால்,
ஐம்பதினாயிரம் முதல் ஒரு இலட்சம்
வரையான ஈழத் தமிழ்
மக்களைக் காவு கொண்டபின்,
மூன்று இலட்சம் தமிழர்களை
முட்கம்பிக்கு உள்ளே
அடைக்கப்பட்டிருக்கும் இன்றைய நாளில்..
இன்னொரு அவலம்
நடந்தேறியிருக்கிறது..
நாட்டுக்கு வெளியேயான தமிழீழ அரசொன்றை
அமைப்பதற்காக நடவடிக்கை ஒன்றை
எடுப்பதற்கான ஒழுக்காற்று வரைமுறைகளை
மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நாளில்,
அதன் பொறுப்பாளராகச்
செயற்பட்ட-கே.பி என அழைக்கப்படுபடும்
செல்வராசா பத்மநாதன் அவர்கள்
சிறீலங்கா அரசால் கடத்தப்பட்டிருக்கின்ற
சமநேரத்தில் இந்தப் பக்கம் உங்கள்முன்
வருகிறது.
மலேசியாவில் இருந்தே கடத்தப்பட்டார் என்ற
செய்தியே இதுவரைக்கும் சரியாக இருக்கிறது..
நூறுவரையான புலிகள் அமைப்பின்
நுண்ணறிவாளர்கள் முதல், போராளித்
தலைவர்கள்வரையில் கொன்றொழிக்கப்பட்ட
செய்திகள் இணையத்தளங்களில் வந்து
ஓரிரு கிழமைகள் ஆனபின்
இந்தச் செய்தி இப்போது..
உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்
வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும்
நடத்தப்படுகின்ற நாள் இது..
ஆகமொத்தம் தமிழனின் வாழ்வோடு
விளையாடுகின்ற சகல விடயங்களும்
சகட்டு மேனியாய் சந்திக்கின்ற நேரம்..
தமிழன் வாழும் கிழக்கு மாகாணத்தின்
அரைவாசிக்கு மேற்பட்ட காணிகள்
அரசாங்கத்திற்குத்தான் சொந்தம் என
பாராளுமன்றத்தில் ஒரு அறிவிப்பு வருகிறது..
வடமாகாணத்தின் எண்பத்தியேழு சதவீதமான
பூமியும் அரசாங்கத்திற்குச் சொந்தமெனவும்
அதே அறிவிப்பு வருகிறது..
இந்த அறிவிப்புகள் வருகின்ற சபையிலே
அரசாங்கத்தின் சார்பாக இருக்கும்
கருணா என்ற முரளீதரனும்..
டக்ளஸ் என்ற வடக்கின் வசந்தமும்
சிறீலங்காச் சுதந்திரக்கட்சியின்
சிங்கவால்களாகச் சுருட்டி அள்ள
வந்திருக்கும் சமநேரம்...
குட்டியைத் தாய் யானையிடம் இருந்து பிரித்தால்,
சட்டம் மிருகவதை என்று வருகின்ற நாட்டில்
மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பிகளுக்கு இடையில்
அடக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற
மேல்மாகாண பாராளுமன்ற உறுப்பினர்
மனோ கணேசன் கூறியதும் கூடத்
துடித்து வந்ததும் நேற்றுத்தான்..
சராசரியாக இந்த மனிதத்துவக்
குரலின் கடைசி எழுத்துக்களாகக் கூட
வாய்திறக்காத டக்ளசும் கருணாவும்
இராசபக்சா மடியில்...இருந்தபடி
இனத்தை அழிகும் இராட்சதருக்கு
இனத்தை விற்கும் தமிழர்களாக..
இருந்தபடி எத்தனை காட்சிகள்..
முற்றிலுமாகத் தமிழனைத் தமிழன்
காட்டிக் கொடுத்த வரலாற்றினைச்
சுமந்தபடி வடக்கின் வசந்தம் என்ற
டக்ளஸ் தேவானந்தாவும்,
கிழக்கின் உதயம் என்ற
காட்டிக் கொடுத்த கர்மவியாதி என்ற
பட்டத்தைக் கழுத்தில் சுமக்கும்
கருணா என்ற முரளீதரனும்,
சிறீலங்காச் சுதந்திரக்கட்சியில்
தேர்தல் களத்தில்
ஊருக்குள் வந்துவிட்ட 'உறுமயா'க்கள்..
தேர்தலுக்காக யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும்
காசும், அடக்குமுறையுமாக
வீசுகின்ற தேர்தலில்
எத்தனை அடாவடிகள்..
தமிழர்களைக் காட்டிக் கொடுத்தவர் தன்கணவன் என
முரளீதரனின் மனைவி பேட்டிகொடுத்தவைகள்
இன்னமும் காற்றில் இருந்து
கரைந்துவிடவில்லை..
இன்னும் ஒருமாதம் வரையில் கருணா திருந்தாதவரையில்
என்னால் பொறுக்க முடியாது என்ற அவரது மனைவியும்,
மூன்று குழந்தைகளும் மேற்குலகு ஒன்றில்
வாழ்ந்தபடி..கருணா என்ற இந்தக் கர்ம விசத்தின்
கொழும்புக் காட்சிகளைப் பார்த்தபடி இருக்கும்
நாட்களும் இதுதான்..
அய்க்கிய நாடுகளின் அமைப்பு வைத்திருக்கும்
மனித சாசனத்தின் மீதான சத்தியத்தின்
மறுபக்கமாகப் புத்த சாசனத்தைத் திருத்தியிருக்கும்
இராட்சதர் இராசபக்சவின் கைகளில்
இன்னமும் தமிழினம் அழிகிறது..
வெள்ளைக் கொடியுடன் சென்றவர்களைச்
சுட்டு வீழ்த்தினார்கள்..
அடைக்கலம் என்று வந்தவர்களை
படைக்கலம் போட்டுப் பிடித்து அழித்தார்கள்..
வீரமும் அறிவும் பெற்ற தமிழ்ச்சாதியை
ஊறணி இன்றி அழிப்பதே இந்தியம் எடுத்த
இன்றைய மந்திரம்..
இந்துக் கோவில்களின் அடித்தளமே இல்லாமல்
எத்தனையோ கோவில்கள்
அழிக்கப்பட்டாயிற்று..
இராமர் பாதம்பட்ட சேது சமுத்திரத்திற்கு
இந்துமதம் சார்ப்பில் எத்தனை கூச்சல்கள்..
இந்துக் கோவில்கள்..இந்துக் குருவானவர்கள்
சுடப்பட்ட அநாகரிகங்கள்.. எல்லாமும்
பார்த்தபடி ஒரு இந்துக்கள் சார்பில் ஒரு..
இந்திய நாடு..
நஞ்சையும் விழுங்கவல்ல தமிழ்நாடு
இருக்கும் வரையில்..வடக்கு இந்தியாவின்
வாலில்தான் தமிழ்நாடு இருக்கும்.
திருவள்ளுவர் சிலைக்கு எதிராக
இலட்சம் கன்னடர்கள் தெருக்களில் திரண்டார்கள்..
ஈழத்தமிழன் சாகக் காரணமான
சோனியாவையும் கருணாநிதியையும்
தேர்தல் கல்யாணத்தில் சேர்த்திருக்கிறது
தமிழ்நாடு..
தமிழ்மொழி சிதைக்கப்படும் முதல்நிலம்
சென்னைதான்..
சென்னைத் தமிழுக்கு புதுமொழியாக
அறிவிக்கும் காலம் அருகில் இருக்கிறது..
நூறு சொற்கள் பேசினால் எழுபது சொற்கள்
ஆங்கிலத்தில் அல்லவா வருகிறது..
சோறா.. அதுஎன்னா அது..றைஸ்என்று
சொல்லுசாமி.. என்கும் தமிழகத்தானிடம்
எங்கே இருக்கிறது தமிழ்..
நேர்காணலையும், பேட்டியையும் தமிழகச்
சினிமாக் களத்தில் எடுத்துப்பாருங்கள்..
அடேங்கப்பா ஆங்கிலத்தில் பிச்சுப்புடுறாங்கள்..பிச்சு..
அதேநேரம் ஆங்கிலம் தெரியாத விசயகாந்துக்கு
முப்பத்திஐந்து இலட்சம் வாக்குகள்..
தமிழீழத்தை எரித்த வாக்குகளும் இதுதான்..
மொத்தத்தில் பொன்மனச் செம்மலுக்குப் பின்னாலே
தன்நிலையை இழந்தது தமிழ்நாடு..
உச்ச-உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கூட தமிழில்
இருக்கக் கூடாது என்பது சட்டம் என்பதாகப்
படித்தேன்..
அரசாங்கப் பெயர்ப்பலகைகளில், நெடுவீதிகளில்
இந்திதான் முதலில் இருக்க வேண்டுமெனவும்-
இருக்கிறது எனவும் இணையங்களில்
படித்துக் கொண்டேன்..
வக்கற்ற தமிழன் அதிகாரங்களில்..
திக்கற்ற தமிழினம் தேசங்களில்..
காலப்பழி.. மீண்டும் கடுகதியில்..
-எல்லாளன்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment