கதவம் திறக்கமுன்...
(புலிவெண்பா மனமும்-கனமும்)
கதவம் திறக்குமுன் கண்மணிகாள் எங்கள்
பதறும் நிலைகண்டும் பாடல் திறக்கின்றேன்!
மாற்றான் வரித்தநிலை வந்துற்ற வேளையிலும்
கூற்றாய் அவன்விரித்த கொட்டும் விசக்கோடு
ஊற்றுநிலம் மீதேறி ஊறணிகள் தேன்சுவடுக்
காற்றுத் திசையெங்கும் காடேறி யாய்வந்தும்,
போற்றும் தலைவன் புறமுதுகு காட்டாமல்
நேற்று அவன்வாயில் நின்றென்ன சொன்னானோ
கீற்றும் பிசகானாய்க் கேளங்கே நின்றான்காண்!
மக்களுக் கென்ன வாதையோ தான்பெற்ற
மக்களுக்கும் என்றே மறப்போரைக் கண்டானே!
வீராதி வீரன் விடிவுப் பெருவெள்ளி
போராடும் தீரன், பிரியமகன் சாள்ஸ்சைத்தன்
நேரோடு போர்க்களத்தில் நெஞ்சுரத்தைக் கண்டும்தன்
சீரோடு போர்த்தமகள் துர்க்காப் பசுங்கிளியைப்
போராடு என்றே புலிமகளாய் ஆக்கியவன்
மக்கள் உடைத்தான வாதையிலே தான்மட்டும்
திக்கில் பறக்கத் திருத்தலைவன் எண்ணாணாய்
முள்ளிவாய்க் காலென்றும் முல்லை நகரென்றும்
பிள்ளைப் பிரபா பிரிய நிலப்போரில்
வெந்து மணற்காடு வீறிட்டுத் தீயாகும்
நந்திக் கடலெங்கும் நாயகனாய் நின்றான்காண்!
பல்லாயி ரத்தோராய்ப் பாடம் எடுத்துவந்த
சொல்லாரும் வல்புலிகள் தேசார் தளபதிகள்
எல்லோரும் நின்றே ஏறுபோர் கண்டானே!
கல்லு வெடிப்பதுபோல் காடுறையும் வாய்க்காலும்
இந்தியம் வந்து இனவழிப்புக் கூற்றுவனைத்
சொந்தம் எனத்தழுவிச் சேரீழம் நின்றதினால்
நச்சு வெடிப்புகைகள் நாச விசக்குண்டுக்
கச்சைக்குள் வைத்துக் கயவனொடு நின்றார்காண்!
வேழாதி வேழம் விறல்மறவர் போராடும்
ஈழம் எனவொருத்தர் இல்லாமல் செய்வதற்காய்
கூழாய் மலிந்ததொரு இந்தியத்தின் கூடாத
பாழாகி என்தமிழர் பல்லாயி ரம்செத்தார்!
தேசப் பிரபா செருக்களத்தில் ஆடுகளம்
வீசி எறிந்தானா? வெங்களத்தில் ஊடறுத்துக்
கால மணிச்சுவடு கண்டறியப் பார்த்தானாய்
கோல முகவடிவன் கொண்டுகளம் வருவானா?
ஏதும் அறியாராய் இன்றுலகம் காண்தமிழன்
வாதும் வருத்தமுமாய் வண்ணமுகம் தேடுகிறார்!
சூதின் அரசாங்கம் சொல்லரிய துன்பத்தைப்
பேதியாய் ஊதும் பெருங்கொடுமை தன்னில்
அறுபதுகள் தொட்டு இனவழிப்புப் காட்டும்
உறுவதைகள் எல்லாமும் இன்னும் நெடுக்கிறதே!
முட்கம்பிக் குள்ளே மழையும் மலங்களுமாய்
உட்கிடத்தி எங்கள் இனத்தை அழிக்கின்றான்!
புதுவை, கரிகாலன், பாலகுமார், யோகி
நதிபோல வாய்த்த நறுந்தமிழர் காவியத்தை
கொல்லும் விசத்தரசு கொன்று புதைகுழியைக்
கெல்லி எடுத்ததடம் இன்றிணையம் தந்ததம்மா!
போர்வேண்டாம் எங்கள் பிடிமண்ணில் மக்களெலாம்
சீர்செய்ய வேண்டும்மெனச் செய்த குமரனெனும்
பத்மநாதன் தன்னை பழியாய்க் கடத்திவிட்டார்
இத்தனைக்கும் மேற்துன்பம் எங்கும் இருக்கிறதா?
அறுபது ஆண்டுகளாய் ஆய்க்கினையும் கொல்லும்
உறுவதைகள் இப்போதும் ஊத்தையாய் வீழ்கிறதே!
முந்தைப் புராணங்கள் மொய்த்த அரக்கர்போல்
இந்தப் புராணத்தும் ராசபக்சா வந்தான்காண்!
அய்ம்பதி னாயிரமாய் ஆருயிர்த் தேசத்தில்
வெய்ம்குண்டு போட்டு விழுத்தியவன் கோத்தனெனும்
தம்பி இரசாபக்கா, தக்கரினப் பொன்சேகா
கும்பரெலாம் அந்தக் குலமே, அரக்கரென
அன்றைக்குச் சொன்ன அடுக்கெல்லாம் கொன்றொழிக்கும்
இன்றை அரக்கம் இராசபக்சா கொல்குடும்பம்
என்றே எழுதிடுவாய் இந்தியத்துப் பேய்க்குடும்பம்
சோனியளே வந்து சுகத்தீழம் தானழிக்க
கூனியளாய் வந்தாள்காண்! இத்தாலி யூர்ப்பாளின்
சாதிக்கு எங்கள் சரித்திரங்கள் தேராதே!
மோதி அழித்தவர்கள் மேடாக்கிப் போனாரே!
ஈழப்போர் ஒன்று இடர்கண்ட காரணத்தால்
ஆழமன தெங்கள் அறம்தர்மம் வீழாதே!
சாகாத தேசச் சரித்திரத்தின் சூரியனாம்
பாகாக நிற்பான், பரிதவிக்கும் எம்மினத்தின்
தேசாக நிற்பான், திருத்தமிழர் பட்டமரம்
ஆகாரே என்பதினால் அண்ணன் கரிகாலன்
வேகாத தெய்வன் வீற்றிருப்பான், என்றே
போரும் மணிநிலமும் போற்றிவைத்த ஆட்சியாய்
யாரும்கா ணாதவொரு யாப்பைஉரு வாக்கியவன்!
சேரும் புகழும் செறித்தெழுதும் வெண்பாக்கள்
காரும், விசும்பினொடு, கார்வளியும் காத்திருக்கும்!
எட்டப்பம் வந்து இனத்தை அழித்தகதை
கெட்டப்பர் கொட்டம், கொடியர் அந்நியனுள்
வட்டம்பம் சுட்ட வரலாறும் இன்றிருக்கும்
அட்டியிலே அந்நியரின் ஆட்சியிலே வீற்றிருக்கும்
இந்த வரலாறும் எம்மினத்தின் சாவினிலே
நொந்த வரலாற்றின் நெடும்பக்கம் தானறிவீர்!
சொந்த இனமெரித்த செல்லருக்கும் உண்டேயாம்!
காலப் பெரும்புதரில் கட்டவிழ்த்துப் போகாமல்
ஞாலம் படைக்கவந்த நல்வெண்பா ஈதறிவீர்!
(புலிவெண்பா முன்னுரை)
-புதியபாரதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment