Sunday, June 28, 2009
பரணித் திருவெண்பா
பாவலன் நெஞ்சம்: முடிவுரை
இந்திய இந்தநூற்றாண்டுக் கயமை
ஈழத்தின் மீதான இந்தியக் கொல்கயவர்
கூழாடல் இந்நூற்றின் கீழாமே-பாழாக
மண்ணும் நிலமும் மரணநெடி ஊற்றுவித்த
புண்ணும் அழியாத பேய்!
தமிழன் நிலங்கள் சிங்களர்க்குத் தாரைவார்க்க..
புரையேறி விட்டதொரு புத்தநெடி யுத்தம்
கரையேறி விட்டதில்லைக் காணீர்-நிரையேறி
செந்தமிழர் வாழ்விடத்தைச் சிங்களர்க்கு விற்பதற்கு
கந்தகத்தான் எண்ணுகிறான் காண்!
புலிகள் விடவில்லை என்றழுத மேற்குலகம்..இன்று..
புலிகள் விடவில்லை போன்றழுத மேற்கு
கிலியாக்கும் சிங்களத்தைக் கேளார்-எலிப்பொறியாய்
முட்கம்பிக் குள்ளேதான் மேடிழந்த செந்தமிழன்
பட்டழித்தான் சிங்களத்தான் பார்!
இராட்சதன் இராசபக்சன்
பிச்சை மனிதர் பிறக்காத பூமியதை
நச்சு மகிந்தனவன் வந்துகண்டான்-இச்சான்
இராசபக்சன் இந்நாள் இராட்சதனாய் நின்றான்
தராசறிவீர் வற்பகைவன் தாக்கு!
இந்தியப் பழியும் ஈனமும் போக..
இந்தியா செய்தபழி என்றும் அழியாத
இந்தநிலை மாற்றுதற்கம் ஏதுஉண்டு-வெந்தநிலம்
சொந்தத் தமிழர் சுதந்திரமாய் வாழ்விடலே
இந்தியத்துக் குள்ளபணி ஏர்!
தேசத்தின் ஆத்மா தேசியத் தலைவன்!
வானம் இறுகி வரைகடலும் செங்குருதி
ஆன ஒருநிலத்தின் ஆத்மாவாய்-மானமொடு
போர்நின்ற மாத்தலைவன் பெற்றமகன் தன்னோடு
நேர்நின்றா ரென்பரணி நீளும்!
மாபெரும் தளபதிகளின் மானமண்!
பொட்டம்மான் தீபன் புலித்தேவன் சூசையொடு
மட்டற்ற வேங்கைகளின் மானமண்ணை-திட்டத்தால்
சீனாபா கிஸ்தான் சிறுமதியார் இந்தியமும்
தானாகி வந்தழித்தார் தான்!
அன்னைபடை மீண்டும் அவதரிக்கும்!
அறுபது ஆண்டாக அன்னைத் தமிழன்
சிறுமை படைத்தவரால் செத்தான்-குறுமதியார்
இந்தியத்தைக் கூட்டி இனக்கொலையை வைத்திடினும்
செந்தமிழன் வந்திடுவான் சொல்!
வேங்கைத் திருநாடு வெற்றிபெறும்!
கண்ணீர் உகுத்தநிலம் கற்பகத்து மான்புலிகள்
தண்ணீர்ச் சுனையாய்த் தரித்தநிலம்-மண்ணளந்த
வேங்கைத் திருநாடு வெற்றிவரும் நாளொன்றே
தீங்கான் மகிந்தனுக்குத் தீ!
புலிவீரன் மரணம் அடைவதில்லை..
போர்ப்புலியாய் நின்றரிய பொன்னுயிரைத் தானீந்து
வேர்ப்புக் கரையாத வித்துடலாய்-ஈர்ப்பு
அறுந்தெழிய எட்டப்பர் ஆகாத வேங்கை
மறத்தமிழர்க் கில்லை மரணம்!
பெற்றமண் எங்கும் பூக்களாய்...
என்னினிய செந்தமிழீர் எங்கள் அரும்புதல்வீர்
பொன்னாய் விடியல் பொறித்தவரே-இன்னுயிரால்
பெற்றமண் வார்த்துப் பெரும்பரணி ஆர்த்தோரே
நிற்பீரே என்றும் நிலம்!
கயமை அழியும்..
கண்ணீர் மலிந்து களச்சிறகில் நன்றிறுகி
மண்ணீர்க் குருதி வடித்தகதை-எண்ணீர்
கயமை கொடுத்தானைக் காலமது கொல்லும்
நியதி இதுவேதான் நில்!
புலிப்பரணி..!
பரணித் திருவெண்பா பாத்தொடுத்தேன் இந்நாள்
தரணிக் குரைத்தேன்யான் தாயீர்-முரசாய்
இருந்து முகவரிக்கு இட்டகரி காலன்
மருந்தாகி நிற்பானே மன்!
நிலத்தின் நேசர்க்கு வணக்கம்..!
இன்னுயிரைத் தந்தார்க்கும் எங்கள் சுதந்திரத்தின்
தன்னகத்தில் எங்கும் தரித்தார்க்கும்-மன்புலியாம்
தேசத் தலைவன் திரளாம் தளபதிகள்
வாசற்காய்த் தந்தேன் வணக்கம்!
-புலிவெண்பா முற்றிற்று-
ஐநூறு வெண்பாக்களுடன் புலிவெண்பா நூல்
விரைவில் எதிர்பாருங்கள்.
நற்கருத்து இட்ட நல்லோர்க்கு என் நன்றிகள்.
தமிழ்மணம் இணையத் தளம் மற்றும் எல்லா வகையிலும்
உலகம் பரவிய எண்ணவியல் மானிடர்க்கும் என்வணக்கம்.
சோலைக்குயில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment