Saturday, June 20, 2009

இராட்சதம்!


இராட்சதம்!

இராட்சதன் இராசபக்சன்...
இராட்சதன் காதை எழுந்தது போலே
இராசபக்சன் வந்தான்காண் இன்று-மராட்டிய
மண்போலே வீரம் மலர்ந்த ஈழத்தைக்
குண்டால் அழித்தானே கூற்றன்!

தமிழ்மாதரைக் கற்பழிக்கச் சொன்னான் கோத்தபாயா...
கோத்தபாயா அந்தக் குலக்கழிவுப் பக்சனுமாய்
நாத்திவிட்டான் வன்புணர்ச்சி நாறவே-ஊத்தையர்கள்
பொற்தமிழர் மாதரைத்தான் புத்தபடை தான்குடிக்கக்
கற்பழிக்கச் சொன்னானே காடை!

தாய்முன்னே ஒரு சிறுமியின் கற்பழிப்பு..
தாய்மடியில் நின்றவளாம் தங்கச் சிறுமகளை
பேய்க்கழிவாய்க் கற்பழித்துக் கொன்றாரே-சேய்துடித்து
மாள்வதனைக் காண மனம்பதைத்த அன்னையவள்
தாள்பாறி வீழ்ந்தாளே தான்!

எரிந்து சிதறிய மக்கள்..
இலட்சக் கணக்கில் இடம்பெயர்ந்த மக்கள்
நிலத்தில் கிடந்துயிரை நீத்தார்-மலட்டு
மகிந்தன் இனவழிப்பான் வன்படையை ஏவி
மகிழ்ந்தான் தமிழினமே மாள!

இராசயனக் குண்டு எரிந்தது பூமி...
இரசாய னக்குண்டு ஏவிவிழத் தீயாய்
நரமாமி சப்பக்சர் நட்டார்-மரமாமி
இந்தியக் கூட்டார் எரிகுண்டாய்ப் போட
மந்திக்கை யானதம்மா மண்!

பதின்மூவாயிரம்போர் சென்றதெங்கே?...
வாலைக் குமரியரை வந்தன்னை முன்னாலே
சூலமுனை ஈட்டிகொண்டு சென்றுவிட்டார்-ஆலமென
பத்துமூன் றாயிரமாய் பாவையர் வாலிபராய்
எத்துமுனை கொண்டுற்றார் ஏன்!

கூனி சோனியா...
கூனியாய் வந்து கொடும்;கூற்றம் போலேதான்
சோனியா வாய்த்தாள் சுளையாக-மேனியாய்ச்
சுக்குநூ றாக்கிச் சிதறும் சதைவயலாய்க்
கக்கவைத்தார் எங்கரத்தக் காடு!

சிறுவர்களைப் பிரித்தெடுத்து..
பிஞ்சுகளைக் கூட்டிப் பெயர்ந்து பிடித்திழுத்து
அஞ்சியஞ்சி வீழ அடித்திழுத்தார்-நஞ்சுகளாய்
எங்கே இடித்திழுத்தார் எங்கிருக்கா ரென்றநிலை
எங்கும் குமுறுமலை ஏர்!

உணவின்றி மருந்தின்றியும் இறப்பு...
உணவும் குடிநீரும் இன்றி முதியோர்
கணமும் இறக்கின்றார் காணீர்-வணங்காமண்
கப்பலில் போனதுவோர் காலத் துணவுகளை
ஒப்புவிக்கா ஆட்சியது ஊனம்!

தமிழர்மண் பறித்தெடுக்கச் சதி...
முகாமுக்குள் வைத்து முதுசத்து மண்ணை
தகாது பறிக்கவே தாயம்-புகாவாறு
முள்ளுகம்பி போட்டு முடக்கி அதற்குள்ளே
தள்ளிவதை செய்குதடா தாட்டம்!

எட்டப்பர் கூட்டும் கூட்டம்..
எட்டப்பர் துட்டர் எழியர் அடிமையென
துட்டப்ப ரோடு துகில்கிடப்பார்-பட்டியென
மண்ணைப் பறிகொடுக்க வாய்தொடுக்க மாட்டாதார்
கண்ணிலே குத்துகிறார் காண்!

இருபதினாயிரமும் கருணாநிதியும்..
இருபதி னாயிரம் ஓர்நாள் இறக்க
கருணா நிதியாரும் கண்டார்-பெரும்தில்லை
சென்றார் கதைத்தார் பெரும்பதவி பெற்றாரே
நன்றெம்மைச் சாகவிட்ட நாதர்!

நடிகர்களை ஏவிவிட்டு...
ஆந்திரவில் ஓர்நடிகன் சென்னையிலும் ஓர்நடிகன்
நீந்திவிளை யாடிவைத்து நின்றாரே-சாந்திடலில்
ஈழமண் கொன்றோரை இந்தியத்தில் ஏற்றிவைத்த
ஆழமே எங்களின் ஆப்பு!

சுயமிகளால் வெந்த தமிழீழம்...
சுயநலங்கள் ஏற்றிவைத்த சொந்த நலனில்
அயலீழம் கொன்றாரே ஆரீர்-கயமைகளால்
எட்டப்பர் இந்தியர் ருஷ்யமும் சீனாவும்
கெட்டவராய்த் தொட்டழித்தார் தேசம்!

-சோலைக்குயில்
(picture:Mary statue distroyed by the lanken bombing)

No comments:

Post a Comment