Thursday, July 2, 2009


ஓ..முருகையனே..!

பாலனாய் இருந்தபோது
என்ஆச்சி பால்தருவாள்..கொஞ்சம்
கால்கள் ஊன்றி நடந்தபோது
குயிலோடு கூவக் கற்றுக்கொண்டேன்..

கோவில் மணியோடு
குமரன் அழைத்தான்..சிலநாட்கள்..

சமநேரத்தில்..
பாவில் நீங்கள்
அழைத்ததினால் தானே இவனையும்..
பற்றியது நெருப்பு..

சில்லையூர், முருகையன், அரியாலை
அல்லை சத்தியசீலன், தில்;லைச்சிவன்
காரை சுந்தரன், மகாகவி, காசி..சொக்கன்..
வேந்தன்..கந்தவனம்..புதுவை..மதுரகவி..

இன்னும் இன்னும் எத்தனை பிம்பங்கள்..
இதற்குப் பின்னால் எந்தக் கம்பங்களும்
ஒன்றாக நிற்க..முடியவில்லை..அப்பா..

அற்புதம் அற்புதம்..
இந்தத் தொடர்கள் இனிக்கிடைக்குமா என்ன..?

தொட்டுத் தெறிக்கும் பட்டுக் கதிர்களுக்குள்
நான் சுட்டெரிக்கபட்டதினால்தான்
எனது பதினாறாவது வயதுக் கவிதை
நட்டுக்கொண்டு வந்ததையா..

உங்கள் உருவங்களைப் பார்த்தே எனக்குப்
பருவம் வந்தேறியது..

கிளிநொச்சி ஈஸ்வரன் படமாளிகையில்..
ஒரு கவியரங்கு..

பூசி மினுக்கிப் பொடிபோட்டுக் கொண்டை குத்தி
நாசி மூக்குத்தி..நரிவால்..குதிரைவால்
கூந்தல் கிளப்பி கூட்டமாய்க் குதிப்பாய்..
பெண்களாய் இந்தத்
தியேட்டருக்குள் வந்திருக்கும்..
என்ற அந்தக் கவிஞன் முடிக்கவில்லை..

நிறுத்திவிட்டான் கவிஞன்..

சில்லையா, முருகையனா, காரையா..
மிளகாய்க்கு வருமானம் சொல்லிய
நாகலிங்கம் ஆசிரியரா...
கணக்கு எடுக்க மனத்துள் இன்று
கலங்கக்கங்கள்..

என்றாலும் தியேட்டர் குலுங்கிய
அன்றையப் பொழுதில்..

பெண்கள் முகம்திரும்பி..கதைத்து..
கூட்டமாய் எழுந்து குரல்கொடுக்க வரும்பொழுது..

தியேட்டர் இதனுள் வருவோர்போல் அல்லாமல்..
கவிகேட்க வந்திருக்கும் கார்த்தமிழின்
பெண்ணினமே..

அகலவாய் திறந்தான்..அந்தக் கவிஞன்..

கரமார்த்து நின்று உரமார்த்தபடி
கவிகேட்கவந்த
சபைக்கு இருந்துவிடத் தெரியவில்லை..

தமிழினித்த போதுகளில்
சிக்கிப் புல்லரித்தபடியே..

என்னப்பா..என்னப்பா...
இந்தக் கவிகளுக்கு.. எங்கே.. இணையுண்டு..?

இன்னொரு.. மயிர்க்கூச்செறியும் கவியரங்கு..
திங்களைச் சுற்றுதும் என்பது தலைப்பு..

ஆம்ஸ்ரோங், கொலின்ஸ், அல்ரின் ஆகியோர்
சந்திரனில் இறங்கிய செய்திவந்த
சிலநாட்களுக்குப் பின்னால்..அதுகொண்ட
ஒரு தலைப்பு..

சரவணை முத்தமிழ் மன்றத்தை
முழுநிலத்துக்கும் அங்குரார்ப்பணம் செய்த
முத்துக் கவியரங்கு..

நாசி அழகும் வீசி மயிர்பரப்பும்
முழுநுதலோடு மகாகவியும்..

திங்களைச் சுற்றப்போய் பெண்களைச் சுற்றிவந்த
காசியின் கவியும்..

புளியடியில் வந்து இறங்கி..என்ற
அல்லையின் வரியும்..

மதுரகவி, அய்யாத்துரை...தில்லைச்சிவன்..

மூளைக்குள் இறங்கி நாளங்கள் எல்லாம்
உடைப்பெடுத்தபடி நான்..

நீங்கள் கட்டிய ஏணைகளில் படுத்துறங்கிய தமிழாளுக்குப்
தாலாட்டுப் பாடிய தங்கக் கவிஞர்களே..

மாடு கயிறறுக்கும் என்றவனே எங்கள்...
ஈழக்கவிஞன்.அயலெடுத்த கவிஞனே..
முருகையனே..

பாரதியைப் படித்து..பாரதிதாசனைப் பார்த்துக்
கவியரசைப் பார்த்து.. இவர்களின்மேல்
ஏறி இருந்து சவாரிசெய்த
ஈழக்கவிஞர்களே.. உங்கள் வரிகள்..

தமிழகத்தையும் உடைத்தல்லவா புறப்பட்டன..

இந்தத் தாக்கம்..
இன்னும் இருக்கும்..

கயிறறுத்துப் புறப்பட்ட குயிலே..

புருவம் கொடுத்துப் புறப்பட்ட
முருகையனே..

நீயும், நெடிதுயர்ந்த உனது
நிலப்பரப்பும்..

காயும் என்று எண்ணாதே..
காலம் எல்லாமும் உனது
கணக்கிருக்கும்...

சென்றுவிட்டாய்.. இனியென்ன..
சென்றுவா..!
-புதியபாரதி.

No comments:

Post a Comment