Saturday, September 26, 2009

திலீபா..(திலீபன் நினைவுநாள் சிந்தனை)

நேற்று உன் நினைவோடு மீண்டும்
கருக்கள் கட்டின..

அந்த
ஆற்றின் முளையோரம் உன் ஆவி
அசைந்து கொண்டது..

பார்த்துத்தான் கதைத்தேன்.. நீசேர்த்த
ஊர்த்திவலை எல்லாம் உவங்கள்தான்..

படலைக்குப் படலை எல்லாம்
சுடலை ஆச்சுதடா..!

இராசபக்சா இந்த நூற்றாண்டின்
இராட்சதன் ஆகினான்..

மானம் ஒருகையில்
மகிழ்ச்சி மறுகையில்
தானம் கொடுத்த தமிழ்வாழ்வு..
ஈனரின் கையில்
இறைச்சி ஆனதடா..!

சத்திய வேட்கைக் குஞ்சுகள் எல்லாம்
சருகாய் எரிந்தன..

விடலைத் தமிழிச்சிக் குடலை எடுத்தான்
கோத்தபாயா..

வெள்ளைக் கொடியொன்றும்
விசரனுக்குத் தெரியவில்லை..

முள்ளிவாய்க் காலெல்லாம்
முழுமணலும் எரிந்ததடா..!

முட்கிடங்குக் குள்ளே ..
மூன்று இலட்சம் மக்கள்...

மழைநீரும் மலமும்..
மகிந்தா கொடுத்தான் காண்..!

நீ எரிந்த பின்னாலும்
இந்திநிலம் விடவில்லை..

சோனியளாய் வந்தீழக்
கூனியளாய் ஆனதினால்
பேத்தை மகிந்தனுக்கு
ஊத்தை மலிந்ததுபார்..!

சாத்திடலாய் நாளெல்லாம்
சவக்கிடங்கு போடுதடா..!

உன்னை நினைந்து
கங்கை விழியருவிக்
கண்ணை உடைத்தோராய்ச்
சென்னி எல்லாம்
சிறந்தோக்கக் கண்டேன் யான்..!

மூசு பனிக்குள்ளும்
காசு சேர்த்தவர்கள்
பேசும் தலைவனுக்குப்
பின்புலமாய் நின்றார்கள்..

இன்றும் அப்படித்தான்..
இளைஞன் கையில்
எங்கள் இனம் இருக்குதடா..

சுட்டுவிரலில்; சூரியன்கீழ்
இருந்தோம் நாம்..

இன்று..
கட்டுக் குலைந்த
காட்சியும் தெரிகிறது..

வன்னி செயல்கொடுத்த
வாய்க்காலில் மீன்பிடித்து
தன்னை வளர்த்தவர்கள்-
தலைவன் விசாரணைக்குள்
அலைக்கப் பறந்தவரும்
இன்று வருகின்றார்..

விசாரணைகள் பின்னாலே
விலத்திப் போனவரும்
உலவி வருகின்றார்..

கேபி கொடுத்தவரம்
கேளென்று ஒவ்வொருத்தர்
சூப்பி பிடித்துச் செருக வருகின்றார்..

குளிர்தெரியாக் கனவான்கள்
பலர் வந்து போகின்றார்..

இயக்கம் எனநுழைந்து
பலஇலட்சம் பார்த்தவரும்
மயக்கம் தெளிந்து
மறுபடியும் வருகின்றார்..

கடைவைத்த காசைக்
கணக்கெடுத்த பின்னாலும்
குடைவைத்துக் கொண்டு
கோமான்கள் வருகின்றார்..

என்றாலும் நாங்கள்
இயக்கத்தைப் பார்த்தவர்கள்..

இயக்கம் வளர்த்த
வணிகப் புரவலர்கள்
செயலிற்றான் இன்னும்
செந்தமிழன் இருக்கின்றான்..

குளிருக்கும் பனிக்கும்
குலைநடுக்கத் துள்ளேயும்..
வளர்த்த இயக்கத்தை
வந்தவழி விடமாட்டோம்..

உண்ணா விரதம் இருக்கின்றார்
இளைஞரெலாம்..

உன்னை நினைந்து
கண்ணில் நீர்பெருக்கி
நீ வளர்த்த மண்ணை
நினைந்து தவமுருகி
நிலத்தில் பிறவாமல்
புலத்தில் பிறந்தவர்கள்..
குலமாய் மலர்ந்து
கூடாரமாய் நின்றார்..

மறுபக்கம்...
பகைவர்கள் எல்லாம்
பதாகையொடு வருகின்றார்..

விட்டில்கள் போலே
விழுந்த நிலத்தின்மேல்
கட்டில்கள் போடக்
கனபேர் வருகின்றார்..

சுட்டுவிரலில் சூரியன்கை நின்று
கட்டுப்பட்ட காலம்போய்..
கனக்கக் கதைக்கின்றார்..

மேதையென்றும் பட்டம் என்றும்
மேல்விலாசம் காட்டுதற்கு
வேலுப்பிள்ளை மைந்தனுக்கு
வில்லங்கம் போடுகின்றார்..

நாங்கள் இருந்தநிலம்
நாங்கள் எரிந்தநிலம்..
தாங்கி இருப்பெடுக்கத்
தப்பர்கள் தேவையில்லை..

இயக்கம் அதுவின்னும்
இருக்கிறது..
தலைவன் ஒருநாள்
தலைசிலிர்த்து வருவான் பார்..!

என்றாலும் எங்களுக்குள்
இருப்பெடுக்க வருகின்ற
ஒன்றும் வேண்டாம்..

நீ கனவிற் சொல்லிவை..

'தென்னைபனை தெரியாமல்..
திருத்தலைவன் பாராமல்..
இன்னும் பிறக்கின்ற
எங்கள் பரம்பரைகள்
வேரூன்றி விதைக்கின்ற
வேள்விகளைச் சிதையாதீர்..'

என்றே பகர்வாய்..
இருந்தவிடம் தோண்டிப்
பிரிந்தவர்கள் எல்லோரும்
மறந்தும் வரவேண்டாம்..

உருத்திர குமாரனும்..
உலகத் தமிழினமும்
ஒன்றுபட்டாலே
இருக்கிறது வெற்றியென்பேன்..

சென்றுவா.. திலீபா..
செகமெல்லாம் ஒன்றாக..
உன்நினைவு கொண்டு
உருக்கொடுக்கச் செய்துவிடு..

உயிர் உருக்கும் விரதத்தை
ஊருலகம் படைத்தவனே..
பயிர் விளைக்கும் விடியலிலே
பாதை வகுத்துவிடு..
-புதியபாரதி

No comments:

Post a Comment