Saturday, July 18, 2009

ஒரு காட்சி உரைகல்..


புலிவெண்பா..

கடைசி நிமிடச் சாட்சியின்
ஒரு காட்சி உரைகல்..


ஒரு சாட்சியின் வசனம்..
பூதா கரம்போலே பேயாம் நெருப்புக்குள்
சாதாழை போல்விழுந்த சங்கடத்தில்-நேதாஜி
போல்வன் பிரபாவான் பொய்யுமிழாச் சத்தியவான்
கால்கோளைச் சொல்லுகிறேன் காண்மின்!

கடைசி நெருக்கடி..
இரணுவன்கள் எல்லா இடர்ப்புறமும் சூழக்
கிரகணங்கள் போலானார் கேடர்-உரமனைத்தும்
கட்டி அரணமைத்து கால்போலே நின்றமக்கள்
விட்டு நடந்தாரே வேர்!

எங்கும் பிணம்..
திரும்பிய பக்கமெலாம் தீயான ஓலம்
குரும்பையும் பிஞ்சுமாய்க் கொட்ட-முருக்கான
வேதாளக் கிந்தன் விசவாயு எனப்பொழிய
பாதாளம் எங்கும் பிணம்!

அடிவைக்க முடியாமல் பிணங்கள்..
எல்லோர் மனதும் இதுதான் கடைசியென
வல்லபகை கொட்டும் வதைகண்டார்-சொல்லில்
வடித்தெடுக்க ஒல்லுமோ வார்க்குருதி ஊடே
அடிப்பிணங்கள் கண்டார் அடி!

வன்பகைவர் நோக்கி..
இறப்புச் சிறியது இறந்துபடப் போகும்
பறப்புப் பதற்றமது பாடாம்-துறந்துமண்;
தேடினார் மாற்று மகிந்தபடை தன்பக்கம்
நாடினார் மக்கள் நடந்து!

தெரிந்த தலைவன்...
தலைவன் நாடி தனைப்பிடிக்கும் வல்லான்
உலைவாய்க் கணமெல்லாம் உறுவான்-கொலைவாள்
இறுக்கும் கொடியதொரு எல்லாத் திசையும்
வறுக்கும் எனவறிவான் வார்!

நம்பிக்கை குலைந்த..
என்றாலும் போரில் இருந்தபடி நம்பிக்கை
கன்றித் தளபதிகள் கண்டாரே-நின்றார்
அசாத்திய நம்பிக்கை ஆடிப்போய் விட்ட
உசாப்பொழுதில் வந்தார் உறி!

எண்ணத்தைத் தகர்த்த கொடூரம்..
ஆனாலும் அச்சமின்றி ஆதவச் சூரியனான்
கூனாப்போர் செய்யக் குறிகண்டான்-தானாகி
நின்று களப்பகையை நேர்கொள்ளத் தேர்தலைவன்
நின்றமகன் கண்டான் நெருப்பு!

பெரும்படைகள் பிரபாவைச் சூழ்ந்தபோது..
பிரபாவைத் தாக்கும் பொறிகண்டு வேங்கை
உரமாக வைத்தாரே உட்காவல்-அறுநூற்றாய்
போர்ப்புலிகள் சூழ புலித்தலைவன் காப்பாற்றச்
சேர்ந்தார் தளபதிகள் சொல்!

பல தளபதிகள் இறப்பும் தலைவன் காப்பாற்றுதலும்..
அந்தவொரு தாக்குதலில் துர்க்கா கடாபியொடு
நந்தீபன் துர்க்கா விதுசாவும்-வெந்தகளம்
தன்னில் புலிப்படைகள் தாமுயிரை இட்டாரே
தன்தலைவன் காப்பாற்றித் தான்!
(ஆதாரம்: திருநா நேர்காணல்-நன்றி இளம்விகடன்)

இன்னும் தொடரும்..
சோலைக்குயில்..

No comments:

Post a Comment