Tuesday, March 24, 2009

சிந்தனை வானம் எல்லை!

வானமே எல்லை-01

சிந்தனை வானம் எல்லை!


இன்னொரு மனித னோடு
எடுத்தபோர் வெல்லக் கூடும்
அன்னவன் மீண்டும் உன்னை
அடிக்கவுன் வெற்றி போகும்
மின்னினால் போகும் எல்லாம்
வெற்றியாய் இருப்ப தில்லை
உன்னுளே தோன்றும் கோடு
உடைத்தெழு அதுதான் எல்லை!

எண்ணினால் நீயே எண்ணாய்
இலக்கெதோ அதற்குள் நிற்பாய்
அண்ணள வாகக் கொண்ட
அலகுகள் படியாய்க் கொள்வாய்
திண்ணிய வுரமும் வார்ப்புத்
திசையதும் வெறியாய்;த் தோன்றும்
கண்ணினில் எவரும் காணாக்
களம்மட்டும் உனக்குள் பூக்கும்!

உன்னையே நீயே வெல்வாய்
உயருவாய் இறங்க மாட்டாய்
பொன்வயல் உனது உள்ளம்
புதையலே தோற்றும் வெள்ளம்
அன்பினால் புத்தன் வென்றான்
அகிம்சையால் காந்தி வென்றார்
உன்கதை உனக்குள் உண்டு
உலகையே அசைக்கும் குண்டு!

கனிணிக்குள் உலகம் வந்து
கடுகுபோல் உருவம் ஆச்சு
மனமிடும் கனவுக் கோல
வடிவத்தைப் படமே ஆக்கும்
இனியதோர் கருவி தன்னை
இயப்பானார் கண்டார் இன்னும்
அனையதாய்ச் செய்தி வந்து
அதிசயம் புரிதல் பாராய்!

நீயுனை வைத்த வேள்வி
நீந்துவாய் அதனுள் ளேநீ
தேயுதல் நிலவுக் குண்டு
தெளிந்தவுன் அறிவுக் கில்லை
சாயுதல் பொழுதுக் குண்டு
சளையாத உழைப்புக் கில்லை
சேயுனை நம்பு உந்தன்
சிந்தனை வானத் தெல்லை!

-புதியபாரதி

No comments:

Post a Comment